Friday, May 15, 2015

திருமாலின் தசாவதாரமும் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் பகுதி-2 (Thirumal's Dasavathaaram and the Theory of Evolution Part-2)

              திருமாலின் முதல் ஐந்து அவதாரங்களை முதல் பகுதியில் பார்த்தாயிற்று. அதன் தொடர்ச்சி இந்தக் கட்டுரை.

             6. பரசுராம அவதாரமாகிய குகைகளில் வாழ்ந்த மனிதன் என்னும் நிலை:

                 திருமாலின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம் ஆகும். இந்து புராணத்தின் படி இவர் ஜமத்கனி என்ற முனிவரின் மகனாகப் பிறந்து, தனது தந்தையின் உத்தரவின் படி ஒழுக்கத்தில் சிறு தவறு செய்த தனது தாயைக் கொன்று, பிறகு தனது தந்தையிடம் வரம் வாங்கித் தாயை உயிர்ப்பிக்க வைத்தார்.

பரசுராம அவதாரம் 
    பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் படி, பரசுராம அவதாரம் என்பது குகைகளில் மறைந்து வாழ்ந்த மனிதன் என்ற நிலை. குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் மிருகங்களின் தோலை உடையாகப் பயன்படுத்தினர். கூரான ஆயுதங்களைத் தற்காப்புக்காகவும் வேட்டையாடவும் பயன்படுத்தினர்.

பரசுராமரின் உருவ அமைப்பு 
                     பரசுராமரின் உருவ அமைப்பும் தாடி, மீசையும் கூரிய ஆயுதங்களும் கொண்டு குகைகளில் வாழ்ந்த மனிதன் என்னும்படியாகவே இருக்கிறது. மேலும் இவர் சாகா வரம் பெற்றவர் என்று குறிப்பிடப்படுகிறார். இன்றும் பழங்குடி இனங்கள் சில இதே போன்ற தோற்றம் கொண்டவர்களாக இருப்பதையே இந்து புராணம் 'சாகா வரம்' என்று குறிப்பிடுகிறது.


              7.  ராம அவதாரம் என்னும் 'வில் அம்பு கொண்டு வேட்டையாடி வாழ்ந்த மனிதன்' என்னும் நிலை:

                 புராணத்தின் படி ராம அவதாரம் திருமாலின் ஏழாவது அவதாரமாகும். ராமர் அயோத்தி என்ற நகரத்தில், தசரதன் என்ற அரசருக்கும் கோசலை என்ற அரசிக்கும் முதல் மகனாகப் பிறந்தவர்.

ராமரின் உருவ அமைப்பு 

               வில் வித்தையில் சிறந்தவராக இருந்து, ராவணன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்று தர்மத்தை நிலைநாட்டியவர். ராமரின் உருவ அமைப்பு, வில் அம்புடன் கூடிய  மனிதனின் தோற்றமாக இருக்கிறது.



               குகைகளில் வாழ்ந்த மனிதன் தனக்குக் கிடைத்த உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தான். பரிணாம வளர்ச்சியில் தனது வாழ்வாதாரத்திற்குத் தேவையான உணவை வேட்டையாடி உண்ணும் நிலையை மனிதன் அடைந்ததையே ராமரின் உருவ அமைப்பு காட்டுகிறது.

                        8. பலராம அவதாரமாகிய 'கையில் ஏர் பிடித்த விவசாயி' என்னும் நிலை:

                           பலராமர் மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம் ஆவார். இவர் பகவான் கிருஷ்ணருக்கு அண்ணனாக, மன்னர் வசுதேவருக்கும் அரசி தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர். அவர் தனது அவதாரத்தில் தேனுகன், பிரலம்பன் என்ற அசுரர்களை அழித்து மாவீரராக வாழ்ந்து தருமத்தை நிலை நாட்டினார்.

பலராம அவதாரம் 
                          பலராமரின் உருவ அமைப்பு கையில் ஏர் பிடித்து நிற்கும்படி அமைந்துள்ளது. இது பரிணாம வளர்ச்சியின் முக்கியமான கட்டமாகிய 'விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன்' என்னும் நிலையைக் குறிக்கிறது.

பலராமரின் உருவ அமைப்பு 
                    விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனிதன் அதன் பின்னர் விவசாயம் செய்து வாழ ஆரம்பித்தான். தனது வாழ்வாதாரத்திற்குத் தேவைப்படும் தானியங்கள் முதலியவற்றைத் தானே விளைவித்தும், வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு போன்ற விலங்குகளை வளர்த்தும் வாழ்ந்த மனிதனையே பலராம அவதாரம் குறிக்கிறது.
           
   9. ஸ்ரீகிருஷ்ண அவதாரமாகிய 'சமூக அமைப்பில் சுகபோகங்களுடன் வாழ்ந்த  மனிதன்' என்னும் நிலை:

             ஸ்ரீகிருஷ்ண அவதாரம் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாவார். இவர் மன்னர் வசுதேவருக்கும் அரசி தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர். தனது அவதாரத்தில் தனது தாய்மாமனான கம்சனை வதம் செய்தார். மேலும் நரகாசுரனை வதைத்து தருமத்தை நிலைநாட்டிய நிகழ்வையே நமது பாரதத் திருநாட்டில் 'தீபாவளி' என்ற பண்டிகையாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.
துவாபர யுகத்தின் முடிவு கிருஷ்ண அவதாரத்தில் தான் நடந்தது. மகாபாரதப் போரில் தருமத்தின் பக்கம் ஒற்றை ஆளாக நின்று ஆதரித்து வெற்றியைக் கொடுத்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்.
கிருஷ்ணர் 
       கிருஷ்ணரின் உருவ அமைப்பு சர்வ அலங்காரத்துடன் கூடிய ஒரு மனிதனின் தோற்றமாகும். 'உலகின் அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து வாழ்ந்த மனிதன்' என்ற நிலையையே கிருஷ்ண அவதாரம் குறிக்கிறது.

கிருஷ்ணரின் உருவ அமைப்பு 
                     இந்து மதத்தில் கிருஷ்ணர் தனிப்பெரும் கடவுளாகக் கருதப்பட்டுக் கொண்டாடப் படுகிறார். உலகில் துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கக் காரணமாக கிருஷ்ணர் விளங்கினார். உலகெங்கும் இவருக்குத் தனியாகக் கோவில்கள் காணப் படுகின்றன.

                 10. கல்கி அவதாரம்:
                         
                     திருமாலின்  பத்தாவதும் கடைசியுமான அவதாரம் இந்தக் கல்கி அவதாரமாகும். கல்கி அவதாரம் இனி தான் நிகழ இருக்கிறது என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். கலியுகத்தில் அதர்மம் அதிகரித்து, தர்மத்திற்கு சோதனையான காலம் ஏற்படும் போது கல்கி அவதாரம் நிகழ்ந்து அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலை நாட்டப்படும் என்று தசாவதாரம் கூறுகிறது.

கல்கி அவதாரம் 
                         கல்கி அவதாரத்தின் உருவ அமைப்பு வெள்ளை நிறக் குதிரையில் கையில் வாள் கொண்டுள்ள ஒரு போர் வீரனின் வடிவமாக இருக்கிறது. பரிணாம வளர்ச்சித் தத்துவத்தில் இது குறிக்கும் மனிதனின் நிலை என்ன என்று யூகிக்க முடியவில்லை.

                          திருமாலின் ஒவ்வொரு அவதாரமும் பரிணாம வளர்ச்சியின் ஒரு நிலை தான்.


#தசாவதாரம் #பரிணாம வளர்ச்சி #தத்துவம் #Theory of evolution