சனிக் கிழமைகளிலும் அமாவாசை நாட்களிலும் காகத்திற்கு உணவு வைப்பது என்பது நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த நல்ல பழக்கங்களில் ஒன்று. அமாவாசை நாட்களில் இறந்த நமது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகக் காகங்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது. சனிக் கிழமைகளில் சனி பகவானின் அருளைப் பெறுவதற்காக, காகத்திற்கு உணவு அளிக்கப் படுகிறது. சனி பகவானின் வாகனம் காகம்; நமது இந்து சாஸ்திரத்தில் சனி பகவானை 'ஆயுள் காரகன்' என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, 'சனியின் அருள் இருந்தால் ஆயுள் மேன்மை அடையும்; ஆயுள் அதிகரிக்கும்' என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. ஆயுள் என்பது ஆரோக்கியத்தைச் சார்ந்த விஷயம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஒருவருக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது மருத்துவ உண்மை.
காக வாகனத்தில் சனீஸ்வரர் |
ஆரோக்கியம் என்பது சுற்றுச் சூழல் சார்ந்த விஷயமும் கூட. சுற்றுபுறத் தூய்மை நன்றாக இருக்கும் இடத்தில் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். காகங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கும் பணியைச் செய்பவையாகும். (அதனால் தான் காக்கைகளை 'சுத்தம் செய்யும் பறவைகள்' - Scavenger Birds என்று அழைக்கிறார்கள்.) நமது வீட்டைச் சுற்றியிருக்கும் குப்பைகள், மற்றும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றைத் தனது உணவாக்கிக் கொள்ளும் தன்மை காகங்களுக்கு உள்ளது. வாரம் ஒருமுறை உணவு வைக்கப்படும் வீடுகளைச் சுற்றிக் காகங்கள் திரிந்து கொண்டே இருக்கும்.
காகங்களுக்கு அளிக்கப் படும் உணவு |
தனக்கு வைக்கப் படும் உணவையும் தனியாக உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து வந்து சாப்பிடுபவை காகங்கள். அவை உணவைச் சாப்பிட்டுவிட்டு, சுற்றுப்புறத்தில் இருக்கும் அழுக்குகளையும் சாப்பிட்டுச் சுத்தப்படுத்துகின்றன. காகங்கள் திரிந்து கொண்டே இருக்கும் வீடுகளின் சுற்றுபுறம் தூய்மையாக இருக்கும். இதனால் அந்த வீட்டில் வாழும் மனிதர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது. ஆயுளும் காக்கப் படுகிறது. வாரம் ஒரு முறையாவது உணவு அளிக்கப் படுவதால் காக்கை இனமும் காக்கப் படுகிறது.
அறிவியல் பூர்வமான விளக்கங்களாக சொல்லப்படாமல், மத நம்பிக்கையாக, குறிப்பால் உணர்த்தப் பட்டிருக்கும் உன்னதமான ஒரு பழக்கத்தைத் தான் நாம் இன்றளவும் கடைப்பிடிக்கிறோம்.
#சனி #சனி பகவான் #ஆரோக்கியம்