Monday, March 28, 2016

ஜோதிடம் - அர்த்தமும் விளக்கமும்.

             ஜோதிடம் என்பது பலரும் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நேரங்களில் பார்க்க நினைக்கும் விஷயம். ஒருவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு, அப்போது இருந்த கிரக நிலைகளை ஆராய்ந்து தற்கால பலன்களை ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது மட்டுமே ஜோதிடம் என்று நினைத்தால் அதில் உண்மை இல்லை. வானில் உலவும் கிரகங்களை மட்டுமே வைத்துப் பலன் கூறுவது மட்டுமே ஜோதிடம் இல்லை. அந்தக் கலையின் (அல்லது அறிவியலின்) பெயர் வான சாஸ்திரம் அல்லது வானவியல் அல்லது வானியல் ஆரூடம்.  இன்றைய நவீன வானவியல், செயற்கைக் கோள் துணை கொண்டு ஆராய்ந்து கூறும் அதே விஷயங்களை இந்து மதம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கி விட்டது. 

அறிவியல் காட்டும் கிரகங்களின் அமைப்பு 

இந்துக் கோவில்களின் நவகிரக அமைப்பு 

                       சரி. இப்போது நாம் கூற வருவது அது அல்ல. ஜோதிடம் என்றால் என்ன என்பதைத் தான் நாம் விளக்க முற்படுகிறோம். நாம் மேலே பார்த்த வான சாஸ்திரம் ஜோதிடத்தின் ஒரு பகுதி மட்டுமே. வான சாஸ்திரம் போலவே - சகுனங்கள், உடற்கூறு லட்சணம், தீர்க்க தரிசனம், வாஸ்து சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம், மருத்துவம், வானிலை, பட்சி சாஸ்திரம் என்று பல பிரிவுகளை உள்ளடக்கியது தான் ஜோதிடம் என்னும் க(டல்)லை. ஒரு தேர்ந்த ஜோதிடரிடம் மேற்கண்ட அனைத்து விஷயங்களிலும் தன்னை நாடி வரும் மனிதர்களின் சந்தேகங்களுக்கு விடைகள் இருந்தன. 

ஜோதி

                        'ஜோதி இருக்கும் இடம்' என்பதையே 'ஜோதிடம்' என்று அந்தக் கால மக்கள் அழைத்தனர். சில கேள்விகளும் சந்தேகங்களும் ஒருவரை இருளில் வைத்திருக்கும் போது ஒளி என்னும் ஜோதியைத் தேடிச் செல்லும் வேலையைத் தான் 'ஜோதிடம் பார்த்தல்' என்று அழைத்திருக்கிறார்கள். பொதுவாக இருட்டில் இருக்கும் மக்கள் தான் ஜோதியைத் தேடிச் செல்ல வேண்டும். ஜோதி அவர்களைத் தேடி வராது. 
             
            (ஆனால் இன்றைய ஜோதிடம் நவீனமாகி, தன்னுடைய இதர பிரிவுகளை இழந்து வான சாஸ்திரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. உடல் கூற்றியல், வான சாஸ்திரம், மருத்துவம் என்று அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையே.)


#jothidam, #ஜோதிடம் #தமிழ்ஜோதிடம் 

Monday, March 21, 2016

நூல் அறிமுகம் மற்றும் மதிப்புரை



புத்தகத்தின் பெயர் : அறிவியல் பூர்வமான இந்து சமயம்.

ஆசிரியர்                      :  Er. N. P. A. ரவி, சேலம்.


       
             'அறிவியல் பூர்வமான இந்து சமயம்' ஒரு ஆய்வு நூல். இந்தப் புத்தகம் இந்து மதக் கோட்பாடுகளை அணுவியல் (Atomic Science) அடிப்படையில் ஆராய்ந்து, தக்க உருவகங்களுடன் ஒருங்கிணைத்து எழுதப்பட்ட நூலாகும். இந்து சமயத்தின் முதன்மைக் கடவுள்களான பிரம்மா, மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய கடவுள்களை முறையே புரோட்டான் (Proton), நியூட்ரான் (Neutron) மற்றும் எலெக்ட்ரான் (Electron) ஆகிய அணுக்கூறுகளாக (Subatomic Particles) ஆய்ந்தறிந்து கூறியிருக்கிறார். அதற்கான விளக்கங்கள் மற்றும் அறிவியல் பலுக்கல்களைப்  (Scientific Interpretations) புத்தகத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். இந்த மூன்று பெரும் கடவுள்களின் துணைவிகளாகிய சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் பார்வதி ஆகிய கடவுள்களும் அணுவியல் கோட்பாடுகளின் மற்ற அம்சங்கள் என்பதையும் புத்தகம் விளக்குகிறது. இந்துக்கள் வணங்கும் பிற தெய்வங்களாகிய விநாயகர், முருகர், ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பன் ஆகிய கடவுள்களுக்கான அணுவியல் விளக்கங்களும் அவற்றை ஆசிரியர் கையாண்டிருக்கும் முறையும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
                     
                 'இந்து' என்ற பெயர் வானவியல் அடிப்படையில் நிலவினைக் குறிக்கிறது என்பதையும் இந்துக்கள் அனைவரும் நிலவு என்னும் ஒரே அன்னையின் பிள்ளைகள் என்பதையும் இந்தப் புத்தகம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அந்த விதத்தில் சகோதரத்துவத் தத்துவம் இந்து மதத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது உலகிற்குச் சொல்லப் பட்டுள்ளது. 

                         திருப்பதி திருமலைக் கோவிலின் வரலாறு, அந்த வரலாற்றின் அறிவியல் அர்த்தம் ஆகியவை நூலில் அற்புதமாகக் கூறப்பட்டுள்ளன. அவை திருப்பதி தேவஸ்தானத்தினரால் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டும் இவ் ஆய்வு நூலினை 1௦௦௦ பிரதிகள் என்ற எண்ணிக்கையில் அச்சிட நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

                       இந்நூலில் சிதம்பரம் கோவிலின் வரலாறு, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் அனைத்தும் விளக்கப் பட்டுள்ளன. தமிழில் இப்படி ஒரு ஆய்வு நூல் வெளியாகி இந்து சமயத்தின் அணுவியல் கருத்துக்கள் தமிழில் பதிவாகி இருப்பது அற்புதம். 

                        நூலின் ஆசிரியர் ஒரு கட்டிடப் பொறியாளர். ஆய்வு நூல் என்பதால் ஆசிரியர் 'அறிமுக எழுத்தாளர்' என்கிற வட்டத்திற்குள் வரவில்லை. அறிவியல் அறிக்கை போல் இல்லாமல் சாதாரண உரைநடையாகவே புத்தகம் படிக்க சுவாரசியமாகச் செல்கிறது. 


#இந்துமதம் #இந்துமதத்தில்அறிவியல் #அணுவியல்