Friday, May 27, 2016

ஆயில்யம் நட்சத்திரப் பெண்கள் மாமியாருக்கு 'ஆகாதவர்கள்' இல்லை!

      தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் பார்க்கும் பெற்றோர் சில பெண்களை நட்சத்திரத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து நிராகரித்து விடுகிறார்கள். ஆயில்யம் நட்சத்திரம் அவற்றுள் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. "ஆயில்யம் நட்சத்திரப் பெண் மாமியாருக்கு ஆகாது" என்ற ஒரு பழமொழி(?)க்கான பாதி அர்த்தத்தை வைத்துக் கொண்டு முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் தவறாக அர்த்தம் கொள்ளப் படும் பழமொழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆயில்யம் நட்சத்திரப் பெண்களைப் பற்றி ஜோதிட நூல்கள் எதிலும் தவறாகக் கூறப்படவில்லை.

         ஆயில்யம் நட்சத்திரம் புதனின் நட்சத்திரம். புதன் நுண்கலைகள், கணிதம், தர்க்க வாதம் (லாஜிக்காகப் பேசுவது), சிறந்த கல்வி இவற்றுக்கெல்லாம் அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கலைகள், கணிதம், கல்வி போன்றவற்றில் இயற்கையாகவே திறமை உடையவர்களாக இருப்பார்கள். 

    'Creative Arts' எனப்படும் படைப்புக் கலைகளில் ஒன்றான சமையல் கலையில் ஆர்வம் மிக்கவர்களாகவும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்; வீட்டை அழகாகப் பராமரிப்பார்கள்; குடும்பத்தின் கணக்கு வழக்குகளில் ஆர்வம் காட்டுவார்கள்;  கேள்வி கேட்பார்கள். இந்தப் பெண்ணின் திருமணத்திற்கு முன் இந்த உரிமைகள் எல்லாம் அவள் மாமியாரின் கையில் அதுவரை இருந்திருக்கும்.  






     ஆகவே ஆயில்யம் நட்சத்திரப் பெண்கள் சமையலறை உரிமையை எடுத்துக் கொள்வது, கணக்கு வழக்குகளில் கேள்வி கேட்பதெல்லாம் மாமியாருக்குப் பிடிக்காது. ஆகவே "ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணைக் கண்டாலே மாமியாருக்கு ஆகாது (பிடிக்காது)" என்ற கருத்து தான் இவ்வாறு வேறு ஒரு தவறான அர்த்தத்தைக் கொடுக்கிறது. 


      இதற்குப் பரிகாரம் சொல்வதாக ஒன்றைச் சொல்லுவார்கள். "மாமியார் இல்லாத வீட்டிலே கொடுத்தால் இந்தப் பெண்கள் மகாராணியாக வாழ்வார்கள்" என்பார்கள். அதுவும் உண்மை தான். குடும்பத்தின் தலைமையை ஏற்று நடத்த ஒரு பெண் இல்லாத வீட்டிற்கு இந்த நட்சத்திரப் பெண்கள் கிடைப்பது அவர்களுக்கும் அதிர்ஷ்டம்; அந்தப் பெண்ணுக்கும் அதிர்ஷ்டம் தான். 


         இது போன்ற தவறான கருத்துக்களால் தாமதத் திருமணம் இந்த நட்சத்திரப் பெண்களுக்கு நடக்கின்றன. இருந்தாலும் மன வலிமையோடு இவர்கள் இருக்கக் காரணம் ஆயில்யம் நட்சத்திரம் அமைந்திருக்கும் ராசி கடகம். அந்த ராசியில் இருக்கும் சந்திர பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் மன உறுதி மிக்க பெண்களாக இவர்களைப் படித்திருக்கிறார் இறைவன். அவர் படைப்பில் அனைத்திற்கும் அர்த்தம் உண்டு.

#ஆயில்யம்நட்சத்திரம், #வரன், #மாமியார்