Tuesday, February 13, 2018

பக்திப் பாடல்களும் இறை உருவங்களும்.

     நமது இந்து மதக் கோவில்களில் வழிபாடுகளின் போது இறைவனைப் போற்றிப் பாடல் பாடி வணங்குவது சிறந்த ஒரு அம்சமாகும். இப்போதும் புராதானக் கோவில்களில் திருப்பதிகம் மற்றும் அந்தந்தக் கோவில்களுக்கான பாடல்களைப் பாடுவதற்கென்றே 'ஓதுவார்கள்' நியமிக்கப் படுகின்றனர். பெரும்பாலும் இறைவனைப் போற்றிப் பாடும் பாடல்கள் இறைவனின் பெருமைகளைப் பற்றியும் அவரின் (அழகிய) உருவ அமைப்பையும்  குறித்ததாகவே உள்ளன. இறைவனின் உருவம் இந்து மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். இந்துக் கடவுள்களின் உருவ அமையபுகளில் பல்வேறு குறிப்புகளும் மனித வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களும் உள்ளன. தமிழ்க் கடவுள்  முருகனின் உருவ அமைப்பில் இருக்கும் குறிப்புகளை நமது முந்தைய கட்டுரை ஒன்றில்  பார்த்திருக்கிறோம்.

சிவபெருமான் உருவம்
            சரி. உருவ அமைப்பைக் குறிக்கும் பாடல்கள் ஏன் அதிகம் எழுதப்பட்டன? அந்தப் பாடல்களைக் கோவில்களில் பாடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது? 
  தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் நாம் எப்போது வேண்டுமானாலும் (கணினியிலோ, கைப்பேசிகளிலோ) கடவுள் உருவங்களைப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. மேலும் இன்று அனைத்து வீடுகளிலும் கடவுள் படங்கள் உள்ளன. ஆனால் பழங்காலங்களில் கோவில்களில் மட்டுமே கடவுள் சிலைகள் இருந்தன. சில வசதி படைத்தவர்களின் வீடுகளில் மட்டுமே கடவுள் படங்கள் ஓவியங்களாக இருந்தன. 


            சாமானியர்கள் இறைவனைக் காண வேண்டும் என்றால் கோவிலுக்குச் சென்றால் மட்டுமே சாத்தியம். அப்போது கிடைக்கும் சில நொடிகள் அல்லது நிமிட நேரம் மட்டுமே இறைவனைக் காண்பது  என்பது சாத்தியம் ஆகிறது. என்றாலும் ஒரு பக்தரின் மனதில் இறைவனின் உருவத்தை நிலையாக நினைவு வைத்திருக்க வேண்டுமானால் அது இறைவனின் உருவத்தை விளக்கிக் கூறும் பாடல்கள் மூலமாகவே சாத்தியம் ஆகிறது. அதற்காகவே அது போன்ற பாடல்கள் எழுதப் பட்டன; தினந்தோறும் பக்தர்களுக்குப் பாடப் பட்டன.  

சிவ பெருமானின் உருவம்:

            1. தலையில் கங்கை மற்றும் பிறைச் சந்திரன் (நிலா)
            2. நெற்றியில் திருநீறு மற்றும் ஞானக்கண் 
            3. கழுத்தில் பாம்பு
            4. உடலில் புலித் தோல்
            5. அருகில் காளைமாடு (நந்தி)

சிவபெருமானின் உருவ அமைப்பு 

இதை ஒரு பக்தர் நினைவில் வைத்துக் கொள்ளும் விதத்தில் ஒரு கதை போல ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளனர்.

          "சிவன் ஒரு சமயம் தன் நெற்றியில் திருநீற்றினை நெற்றியில் இட்டுக் கொண்ட போது அதன் சில துளிகள் அவர் கழுத்தில் இருக்கும் பாம்பின் கண்களில் பட்டன. அதனால் பாம்பு நிலை தடுமாறிப் பெருமூச்சு ஒன்றினைச் செய்ய, அந்தப் பெருமூச்சின் வெப்பத்தின் காரணமாக, குளிர்ந்த குணமுடைய சந்திரன் உருகி வழிந்தது; சந்திரன் உருகி சிவனின் உடலில் இருந்த புலித்தோலின் மீது பட்டு, அந்தப் புலித்தோல் உயிர் பெற்று அசைந்ததாம். திடீரென்று தோன்றிய புலியைக் கண்ட காளை மாடு பயத்தில் மிரண்டது." என்று சிவனின் திரு உருவத்தை பக்தர்களின் மனதில் பதிய வைக்கிறது அந்தப் பாடல்.

இன்றைய மகா சிவராத்திரியில் அனைவருக்கும் சிவன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

#இந்துக்கடவுள் #மகாசிவராத்திரி #சிவராத்திரி #சிவன் #சிவஉருவம்