Wednesday, July 18, 2018

ஆடி 1- தேங்காய் சுடும் நிகழ்வு.

            ஆடி மாதம் தென்னிந்தியாவின் விசேஷமான மாதங்களில் ஒன்றாகும். அந்த மாதம் தெய்வ வழிபாடுகள் மிகுந்த மாதம். மகாபாரதத்தின் குரு ஷேத்திரப் போர் ஆடி மாதம் முதல் நாளில் தொடங்கி, பதினெட்டு நாட்கள் நடந்து முடிந்ததாக இதிகாசம் கூறுகிறது. தென்னகம் முழுவதிலும் உள்ள அம்மன் ஆலயங்களில் பூஜைகள் நடைபெறுவதும், பெண்கள் விரதங்கள் இருப்பதும் இந்த மாதத்தில் நடைபெறும். 
             அவற்றுள் ஒன்றாகத் தான், ஆடி ஒன்றாம் நாள் கொங்கு மண்டலத்தில் சில இடங்களில் 'தேங்காய் சுடும் நிகழ்வு' நடைபெறுகிறது. தேங்காயின் அடிப் பகுதியில் சிறு துளையிட்டு, அதிலுள்ள நீரை முதலில் வெளியேற்றி விடுவார்கள். 
துளையிடப்படும் தேங்காய் 
                 பிறகு அதே துளையின் மூலம் அவல், வெல்லத் தூள், பச்சரிசி, பாசிப் பருப்பு, வெள்ளை எள் ஆகியவற்றை உள்ளே கொட்டுவார்கள். இப்போது  தேங்காயில் இருந்து வெளியேற்றப் பட்ட தண்ணீரை மீண்டும் அதே துளையின் மூலம் உள்ளே ஊற்றிவிடுவார்கள். பின் அழிஞ்சி மரக் குச்சி ஒன்றை முனையில் சீவி இந்தத் துளையில் குத்தி விடுவார்கள்.

தேங்காய் தயார்!
                 
        பின்பு மஞ்சள், குங்குமம் வைத்து இந்தத் தேங்காயைத் தயார் செய்து, தீயில் சுடுவார்கள். 

தேங்காய் சுடுதல் 
           
         இப்படிச் சுட்ட தேங்காயை முதலில் பிள்ளையாருக்கு வைத்துப் படைத்துக் கும்பிடுவார்கள். பின் அதை உடைத்து சாப்பிட வேண்டியது தான்! 
சரி... இந்த நிகழ்வு ஆடி ஒன்றாம் தேதி ஏன் நடத்தப் படுகிறது? இது காரண காரியம் இல்லாமல் விளையாட்டாக நடப்பதில்லை. மகாபாரதப் போரில், தர்மத்தின் வெற்றிக்காக தன்னையே பலியாகக் கொடுத்த 'அரவான்' என்னும் ஒரு வீரனை நினைவில் கொள்வதற்காகத் தான் இந்த நிகழ்வு நடக்கிறது.

சுட்ட தேங்காய் 

          அரவான் - அர்ஜுனன் மற்றும் (உலுப்பி என்கிற) அரவக்கன்னி ஆகியோரின் மகன் ஆவான். ஒரு மனிதனுக்கு வேண்டிய சகல லட்சணங்களும் பொருந்தியவனாக அவன் இருந்ததால், அவனைப் போர்க்களத்துக்கு பலியாகக் கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்று பாண்டவர்களுக்குத் தெரிகிறது. ஆகவே அரவான் பலியிடப் படுகிறான். பலியிடப்படும் முன் தனது இறுதி ஆசையாக ஒன்றை அவன் கேட்கிறான். "நான் பலியிடப் படுவதால் என் தந்தைக்குக் கிடைக்கும் வெற்றியை நான் காண விரும்புகிறேன். அதனால் என் தலையை மட்டும் ஒரு உயரமான ஒரு இடத்தில் (குத்தி) வைத்து விட வேண்டும்" என்கிறான். 

அரவான் சிலை 
             
         அவனது ஆசை ஏற்கப் பட்டு, நிறைவேற்றப் பட்ட நாள் ஆடி ஒன்றாம் நாள். அதை நினைவு கூறவே ஆடி ஒன்று அன்று தேங்காயைக் குச்சியில் சொருகி, கோவிலில் வைக்கும் வழக்கம் பின் பற்றப் படுகிறது. அதைத் தீயில் வாட்டும் வழக்கம் நாளடைவில் வந்து விட்டது. 

அரவான்

            தமிழகத்தில் திரவுபதி அம்மன் கோவில்கள் அனைத்திலும் அரவானின் தலை, தனி தெய்வமாக வணங்கப் படுகிறது.

#ஆடிமாதம் #ஆடி1 #தேங்காய்சுடும்நிகழ்வு #அரவான் #மகாபாரதம் #பாரதப்போர்