ஒரு சின்ன கதை பாக்கலாம் இன்னைக்கு.
ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்த முனிவர். அவர் ஒரு நாள் நதிக்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய எலிக்குட்டி தனியாக இருப்பதைக் கண்டார். தாய் இல்லாத அந்த எலிக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு எடுத்தார். அந்தக் குட்டி எலியைத் தனது ஆசிரமத்துக்கு எடுத்துச் சென்று தனது மனைவியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். அவர் மனைவியோ, "எனக்குப் பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும்; அதனால், நீங்கள் இந்த எலிக்குட்டியை, உங்கள் தவ சக்தியை உபயோகித்து ஒரு பெண் குழந்தையாக மாற்றிக் கொடுங்கள்." என்றார்.
முனிவரும் அவ்வாறே செய்து கொடுக்க, அவர்கள் இருவரும் அந்த எலிக்குட்டியைத் தங்கள் மகளாக வளர்த்தனர். அவளும் வளர்ந்து திருமண வயதை அடைந்தாள். அப்போது ஒரு நாள் இரவு அவள் நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மிக அழகான அந்த நிலவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் தன் தந்தையிடம் சென்று, தன்னை அந்த நிலவுக்குத் திருமணம் செய்து வைக்கும்படிக் கூறினாள். "நிலவு மிகவும் சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது; இரவில் இந்த உலகத்திற்கு ஒளி தரும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருப்பதால், நான் நிலாவையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள்.
"அப்படியெனில் நீ நிலாவிடமே சென்று கேள்." என்றார். அவளும் நிலாவிடம் சென்று, "இந்த உலகிலேயே நீங்கள் தான் சக்தி வாய்ந்தவராகத் தெரிகிறீர்கள். சரியா?" என்றாள். அதற்கு நிலாவோ, "எனக்கு வெளிச்சம் தருவதே சூரியன் தான். அவர் தான் என்னைவிட சக்தி வாய்ந்தவர்" என்றது. அந்தப் பெண் குழப்பம் அடைந்தாள்; நேராகச் சூரியனிடம் சென்று, "இந்த உலகிலேயே நீங்கள் தான் சக்தி வாய்ந்தவர் என்கிறார்கள். சரியா?" என்று கேட்டாள். அதற்கு சூரியனோ "எனது ஒளியும் வெப்பமும் நிறைந்த கதிர்களை மேகங்கள் மறைத்து விடுகின்றன; மேகங்கள் தான் என்னை விட சக்தி வாய்ந்தவை" என்றார்.
அந்தப் பெண் மேகத்திடம் சென்று, "சூரியனை விட நீங்கள் சக்தி வாய்ந்தவரா?" என்று கேட்டாள். மேகமோ, "அது ஒரு விதத்தில் தான் சரி. ஏனென்றால் காற்றடித்தால் நான் பஞ்சு போல் பிரிந்து விடுகிறேன். என்னை விடக் காற்று தான் சக்தி வாய்ந்தது." என்றது.
பிறகு அந்தப் பெண் காற்றிடம் சென்று, "தாங்கள் மேகத்தை விட சக்தி வாய்ந்தவரா?" என்று குழப்பத்துடன் கேட்டாள். அதற்குக் காற்று, "நான் சக்தி வாய்ந்தவன் தான்; ஆனால் என் பலத்தை மலைகள் எதிர்த்து நிற்கின்றன. மலைகளே என்னை விட சக்தி வாய்ந்தவை." என்றது. பிறகு அவள் மலையிடம் சென்றாள். (சின்னப் பெண் தானே! ஆர்வக் கோளாறு வேறு.) "மலையே! நீங்கள் காற்றை விட பலமானவரா?" என்றாள். அதற்கு மலை சொன்ன பதில் தான் twist! "நான் சக்தி வாய்ந்தவன் தான். ஆனால் என் பலத்தைக் குறைப்பதற்கென்றே சில....
.
.
.
.
.
எலிகள் என் அடிவாரத்தில் இருக்கின்றன. எனக்கென்னவோ அந்த எலிகள் தான் சவாலாகவே இருக்கின்றன." என்று புலம்பியது. :-)
அவள் மலையடிவாரத்திற்குச் சென்றாள். அங்கே எலிகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவள் உடனே தன் தந்தையிடம் சென்று, "அப்பா! இந்த உலகிலேயே சக்தி வாய்ந்தவை எலிகள்தான் என்று தோன்றுகிறது. என்னை ஒரு எலிக்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள்; மேலும் என்னையும் ஒரு எலியாக மாற்றி விடுங்கள். அப்போதுதான் நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்." என்றாள்.
நம்ம கதை :-) |
முனிவருக்கும் அவர் மனைவிக்கும் அப்போது தான் இறைவனின் திருவிளையாடலே புரிந்தது. அவர் படைத்த எந்த ஒரு விஷயத்தையும் மனிதனால் மாற்ற முடியாது என்பதை உணர்ந்தவர்களாக, தங்கள் மகளை மீண்டும் எலியாக மாற்றினார்கள்.
And they lived happily forever!
#சிறுகதை #இறைவன்படைப்பு #ஆண்டவன்கட்டளை #இயற்கை
நமது வலைப்பக்கத்தின் ஐம்பதாவது பதிவு இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.