நமது நடைமுறையில் பொதுவாக அஷ்டமி திதி அமையும் நாட்களை சுபகாரியங்களுக்குத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவார்கள். 'அஷ்டமியில் தொடங்கினால் கஷ்டத்தில் முடியும்' என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று கொஞ்சம் விபரம் அறிந்தவர்களிடம் கேட்டால் ஒரு விஷயத்தைக் கூறுவார்கள். 'அஷ்டமி அன்னைக்கு எல்லா சாமியும் சிவனைக் கும்பிடப் பொய் விடுவார்கள். நாம் நல்ல காரியம் செய்யும் பொது எந்த தெய்வத்தைத் துணைக்கு அழைத்தாலும் அவர்களால் நமக்கு நன்மை செய்ய வர முடியாமல் போய் விடும்.' என்று கூறுவார்கள். இது ஒரு பக்கம் என்றால் அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் தீராத வினையும் தீர்ந்து விடும் என்கிறார்கள்.
எல்லா சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக, வடகிழக்கு மூலையான ஈசான்ய மூலையில், நாயைத் தனது வாகனமாகக் கொண்டு, நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிப்பவர் இந்த பைரவ மூர்த்தி. இவரே சிவபெருமானின் இருப்பிடமான கைலாசத்தின் காவல் தெய்வமாக அறியப்படுகிறார். பைரவரின் அனுமதியைப் பெற்றே சிவ தரிசனம் பெற யாராலும் இயலும் என்பது இந்து மத நம்பிக்கை.
பைரவர் |
அஷ்டமியன்று தெய்வங்கள் அனைவரும் சிவ தரிசனம் பெற வேண்டியும் சிவ பூஜை செய்ய வேண்டியும் சிவ பெருமானின் இருப்பிடமான கைலாசத்தை நோக்கி வருவார்கள். பூஜை செய்யும் வேளையில் கைகளில் ஆயுதங்களை வைத்திருப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. மேலும் பிரார்த்தனை செய்யும் வேளையில் தங்கள் சக்திகள் அனைத்தையும் களைந்து, சாமானியவர்களாக இருப்பதும் தெய்வங்கள் அனைவரும் பின்பற்றும் நியதி. அதனால் தெய்வங்கள் அனைவரும் தங்கள் கைகளில் உள்ள ஆயுதங்கள் மற்றும் தங்களிடமுள்ள சக்திகள் அனைத்தையும் காவல் தெய்வமான பைரவரிடம் ஒப்படைத்து விட்டுக் கைலாசத்திற்குள் பிரவேசிப்பார்கள்.
காவல் தெய்வம் பைரவர் |
அவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்கும் பொழுது, தெய்வங்கள் அனைத்தும் பைரவரிடம், தங்களின் அருளை வேண்டி வரும் பக்தர்களுக்கும் ஆபத்தில் தங்களைத் துணைக்கு அழைக்கும் அடியவர்களுக்கும் தங்களுடைய இடத்தில் இருந்து உதவி செய்யுமாறு வேண்டுகிறார்கள். தானும் அவ்வாறே செய்வதாக பைரவரும் ஒவ்வொரு தெய்வத்துக்கும் வாக்களிக்கிறார். அந்த வாக்கின் படி அனைத்து தெய்வங்களின் சக்தியையும் பெற்றவராகவும், எல்லா தெய்வங்களின் பிரதிநிதியாகவும் அஷ்டமியன்று பைரவர் திகழ்கிறார். அதனால் அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபடும் பயன் ஏற்படும் என்று ஐதீகமாகிறது. குறிப்பாகத் தேய்பிறை அஷ்டமிக் காலத்தில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பானதாகப் பின்பற்றப் படுகிறது.
#பைரவர் #அஷ்டமி
No comments:
Post a Comment