தற்போது ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக்ஸ் நடந்து வருகிறது. ஒலிம்பிக்ஸ் என்பது இன்று ஒரு அனைத்துலகப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டும் பெருமை செய்யப்பட்டும் வருகிறது. ஒலிம்பிக்சில் கலந்து கொள்வதும் பதக்கம் வெல்வதும் இன்று பெருமைக்குரிய விஷயங்கள்.
ஒலிம்பிக்ஸ் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது ஒரு மதச் சடங்காகத் தான். கி. மு. 776 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் முதலில் தடகள விளையாட்டுக்களை (ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல்) மட்டும் கொண்டிருந்தனவாம். நாளடைவில் மல்யுத்தம், குத்துச் சண்டை, குதிரையேற்றம், வில் வித்தை, ரதப் போட்டிகள் என்று ராணுவம் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதன் நோக்கம் நாட்டின் சிறந்த வீரர்களை, குதிரைகளை, ரத ஓட்டிகளைத் தேர்ந்தெடுப்பதே ஆகும். அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் தனது நாட்டின் ராணுவ பலத்தை அதிகரித்துக் கொண்டது ஒலிம்பிக்ஸின் பிறந்த நாடான கிரேக்க நாடு.
புராதான ஒலிம்பிக்ஸ் |
தமிழகத்திலும் மற்போர், வில்வித்தைப் போட்டிகள், தேரோட்டப் போட்டிகள், படகு ஓட்டப் போட்டிகள், மலையேற்றம், ஏறுதழுவுதல் (இன்றைய ஜல்லிக்கட்டு விளையாட்டு) என்று பல போட்டிகளும் பண்டைய காலத்தில் நடந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. இந்தப் போட்டிகளின் நோக்கமும் சிறந்த வீரர்களை, சிறந்தத் தேரோட்டிகளை, சிறந்த குதிரைகளை, சிறந்த காளைகளைத் தேர்ந்தெடுப்பது தான். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட வீரர்களையும் குதிரைகளையும் படையில் சேர்ப்பது போல், ஜல்லிக்கட்டில் சிறப்பாகப் பங்கெடுத்த காளைகள் விவசாயம் சம்பந்தப் பட்ட சிறப்பான வேலைகளில் ஈடு படுத்தப்பட்டன. அந்தக் காளைகளின் சிறப்பை மனதில் கொண்டு அதன் இனங்களும் (கன்றுகளும்) சிறப்பாகப் பாதுகாக்கப் பட்டன. சிறந்த காளையினத்தைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாத்து, அந்த இனத்தைப் பெருக்கும் நோக்கம் தான் ஏறுதழுவுதலின் தத்துவமே.
புராதான ஜல்லிக்கட்டு |
ஒலிம்பிக்சும் நமது பண்டைய வீர விளையாட்டுக்களும் ஒரே ரகம் தான். இதில் ஒலிம்பிக்ஸ் சரி, நம் நாட்டுப் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தவறா?
சரி... ஒலிம்பிக்சும் பல வருடங்கள் நடத்தப் படாமல் விடப்பட்டு, பிறகு மீண்டும் ஆரம்பிக்கப் பட்டு நடத்தப் படுவது தான். ஜல்லிக்கட்டும் தடைகளைத் தாண்டும்.
#ஒலிம்பிக்ஸ் #ஜல்லிக்கட்டு #ஏறுதழுவுதல் #தமிழர்வீரம் #வீரவிளையாட்டு