Friday, January 5, 2018

தமிழ்நாட்டில் - அரசியலும் கலைத்துறையும்.

                   தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது புதிது அல்ல. மிகப் பெரும்பான்மையான மக்களால்ஏற்றுக் கொள்ளப்பட்டு, வெற்றிகரமான அரசியல் வாழ்வை நடத்தி, நம்மை வழிநடத்திய தலைவர்களை நாம் கண்டிருக்கிறோம்.
              கலைத்துறை, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணம் என்ன? சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும் உதவியவை தெருக்கூத்துக்களும் நாடகங்களுமே. திரு. பம்மல் சம்பந்த முதலியார், திரு. அவ்வைசண்முகம், டி.கே.எஸ் சகோதரர்கள் போன்றவர்களால் நடத்தப்பட்ட நாட்டுப்பற்று நாடகங்கள், மற்றும் பல தெருக்கூத்துக் கலைஞர்களால் நடத்தப்பட்ட வீதிநாடகங்கள் தான் அன்றைய மக்களின் விழிப்புணர்வுக்குக் காரணமாக இருந்தன.
வள்ளி திருமணம் நாடகம்
                 அந்தக் காலகட்டத்தில் நாடகங்கள் நடக்கும் இடங்களுக்கே காவல் துறை அதிகாரிகள் வருவார்கள். நடிகர்களையும் நாடக ஆசிரியர்களையும் கைது செய்து கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள். நாடகக் கலைஞர்கள் தண்டனை முடிந்து வெளியில் வந்து மீண்டும் நாடகம் போடுவார்கள்.
நாடகம்
            அதனால் மக்களுக்கு நாடகக் கலைஞர்களின் மீது நிறைந்த அபிமானமும் நன்றியுணர்வும் இருந்தது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஆகியோர் நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கலைத்துறையின் மீது மக்களுக்கு இருந்த மதிப்பு, மரியாதையின் காரணமாகவும், நம்பிக்கையின் காரணமாகவும் இவர்கள் அனைவரும் தங்குதடையின்றி மக்களால் மனதார ஏற்றுக் கொள்ளப் பட்டு, தலைவர்களாக மதிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களின் வழிவந்த வாரிசுகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள். மற்றபடி, தமிழர்களைப் பற்றி வரும் சில மோசமான விமர்சனங்கள் நம்மை நாமே குறைத்து மதிப்பீடு செய்ய வைக்கின்றன. காரணமின்றி நம் தமிழினம் எவர் ஒருவரையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை (இதுவரை).
             இன்றும் அரசியலுக்கு வரும் நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்காக என்ன செய்தார்கள்? மாநில, தேசிய நலனில் அவர்களின் அக்கறை, அவர்களின் சமூக மற்றும் அரசியல் கொள்கைகள் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து தீர்மானித்து அவர்களை ஏற்றுக் கொள்வதைப் பற்றி யோசிப்பதே நல்லது. தேவையற்ற கேலி, கிண்டல் போக்குகளை விடுத்து, தரமான விமர்சனங்களை அவர்களின் முன் வைப்பதும் வாக்காளர்களாகிய, மக்களாகிய நமது கடமை.
#தமிழகஅரசியல் #கலைத்துறை #நாடகங்கள் #சுதந்திரப்போராட்டம் 

No comments:

Post a Comment