ரஷியப் பொருளாதாரமும் 'கலாசார மறுப்பும்':
'ரஷ்யா' என்கிற நாட்டின் பெயருக்கு இப்போது இருக்கும் மதிப்பு குறைவு. ஆனால் அந்த நாட்டின் இன்னொரு பெயர் 'ஒருங்கிணைந்த சோவியத் குடியரசு' (Union of Soviet Socialist Republics - USSR). ஒரு காலத்தில் 'பேரைக் கேட்டாலே அதிருதுல்ல...' என்ற பெருமையோடு இருந்தது அந்த நாடு. இந்த விஷயம் இன்றைய தலைமுறைக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. 1970, 80 களில் உலக நாடுகளின் நடுவில் சோவியத் யூனியனின் கையே ஓங்கி இருந்தது. அப்போது இருந்த வல்லரசுகள் இரண்டு: அவை அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன்.
சோவியத் குடியரசு வரைபடம் |
பொருளாதாரம், தொழில்நுட்பம், வணிகம், விஞ்ஞானம், விண்வெளி அராய்ச்சி, விளையாட்டு என்று பல துறைகளிலும் சோவியத் குடியரசின் ஆதிக்கம் இருந்தது. அமெரிக்காவும் சோவியத்தும் மட்டுமே உலகின் இரு பெரும் சக்திகளாக இருந்தன. இவை அனைத்துக்கும் ஒரே காரணமாகவும், பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகவும் இருந்தது - சோவியத்தின் சோஷியலிச ஆட்சி தான். சோவியத் யூனியனின் குறிக்கோள் - "உலகத் தொழிலாளரே - ஒன்று படுங்கள்" என்பது தான். தொழில் வளமும் விவசாயமும் மிகுந்த ஏற்றத்தைப் பெற்றிருந்தன.
மாஸ்கோவின் ஒரு தொழிற்சாலை |
'மக்கள் அனைவருமே சமம்; அனைவருமே உழைக்க வேண்டும்; அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, குடியிருப்பு மட்டுமல்லாமல், அடிப்படைத் தேவைகளான உணவைக் கூட அரசாங்கமே வழங்கும் (ரேஷன் முறை)' என்கிற முறை சோவியத் குடியரசில் அமலில் இருந்தது.
ரஷியாவில் விவசாயப் பணி |
அதனாலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நிறைவாக இருந்ததுடன், மனித வளத்திலும் (Human Resources) சோவியத் குடியரசு சிறப்பாக இருந்தது.
எங்கே சறுக்கினார்கள்?
ஆனால் ஒரு விஷயத்தில் மக்கள் மனக் குறையுடன் வாழ வேண்டியிருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள் - அது தான் சோவியத் அரசாங்கத்தின் 'கலாச்சார மறுப்பு'. அதாவது, மக்கள் ஒன்றுபட்டு இருப்பது மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்குச் சரியாக இருக்கும் என்று கம்யூனிச ஆட்சியாளர்கள் நினைத்தனர். கலாச்சார மற்றும் மத வழிபாடுகளும் பழக்கங்களும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடும் என்று நினைத்தனர். தாராளவாதம் (liberalism) என்கிற கலாச்சாரத்தை ஆட்சியாளர்கள் மக்களிடம் நிர்பந்தப் படுத்தினர். உணவுப் பொருட்களையே ரேஷனில் வாங்கிக் கொண்டிருந்த மக்களால் சமூக ஒன்றுகூடல்களை (social gatherings) நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை; மக்கள் தங்களது கடவுள்களை வணங்க உரிமையற்று இருந்தனர். மத நூல்கள் கூடத் தடை செய்யப்பட்டிருந்தன.
உடைந்தது சோவியத் குடியரசு |
மக்கள், தங்கள் உரிமைகளையும் உணர்வுகளையும் அரசாங்கம் மதிக்கவில்லை என்று நனைக்க ஆரம்பித்த நேரத்தில் 80 களின் இறுதியில் திடீர் உணவுப் பஞ்சம் ரஷியாவைத் தாக்க, மக்கள் புரட்சி வெடித்தது. சில சிறு மாகாணங்கள் தனியுரிமை கேட்டன. இறுதியில், 1991 ஆம் ஆண்டு உடைந்து சிறு துண்டுகளானது சோவியத் குடியரசு. வல்லரசு என்ற கவுரவத்தையும் இழந்தது.
சீனப் பொருளாதாரமும் 'கலாசார மறுதலிப்பும்' (Refusal):
சீனா தான் இன்று உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம் - உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்நுட்பம் இவற்றில் எல்லாம் அவர்கள் எங்கோ உயரத்தில் இருக்கிறார்கள். பழைய சோவியத் யூனியனின் வளத்தைப் பற்றி விவரிக்கும் அளவுக்கு சீனாவைப் பற்றி இங்கே விவரிக்க வேண்டியதில்லை. அவர்களின் வளர்ச்சி இன்றைய தலைமுறை அறிந்த ஒன்று தான்.
சீனத் தொழிற்சாலை |
ஆனால் இந்த வளர்ச்சியை 'ஒரு முக்கால் நூற்றாண்டு வளர்ச்சி' என்று தான் எடுத்துக் கொள்ள முடிகிறது. அதற்கு முன்னர் வரை சீனர்கள் உலகிலிருந்தே தனித்து இருந்தனர் என்று தான் சொல்ல முடியும். அதாவது, 'டெங் ஜியோ பிங்' என்ற ஆட்சியாளர் வரும் வரை! அவர் தான் சீனாவில் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தினார் என்கிறது வரலாறு. முந்தைய சீன மக்கள் தங்களின் தாய்மொழியையே பேசவும் கல்வி கற்கவும் உபயோகித்தனர். மிகப் பெரிய, கற்றுக் கொள்வதற்கு மிகவும் சிரமமான சீன மொழியிலேயே அவர்கள் இருந்ததால் சீனக் கலாச்சாரம் வெளியுலகை விட்டுப் பல நூற்றாண்டுகள் தனித்தே இருந்தது.
மொழி மட்டுமின்றிக் கலாச்சாரமும் மிகப் பழமையான, நுணுக்கமான பழக்கங்களைக் கொண்டிருந்தது. பிறகு அவர்கள் ஒரு "கலாசார மாற்றத்திற்கு" உள்ளாகினர். தொழில்வளமும் நாட்டின் முன்னேற்றமும் வேண்டி, தங்கள் கலாசாரத்தை மறுதலித்து, நவீன முறைமைகளைப் பின்பற்றியும், தங்களின் அயராத உழைப்பாலும் இன்று வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.
சீன எழுத்துக்கள் |
சீனத் தொழிற்சாலைகள் |
சீனா ஆங்கில வழிக் கல்விக்கு சில வருடங்களுக்கு முன் மாறியிருக்கிறது. இந்தியா கொடிநாட்டும் துறைகளில் ஒன்றான தகவல்தொழில்நுட்பத் துறையிலும் நமது மிக நெருங்கிய போட்டியாளராக சீனா விளங்குகிறது.
ரஷியர்களுக்குக் கலாச்சாரம் மறுக்கப்பட்டது; வளர்ச்சியை எட்டினாலும் கலாசாரத்திற்கான தேடுதலில் நாடு பின்னடைவைச் சந்தித்தது.
சீனர்கள் கலாச்சாரத்தை மறுதலித்துள்ளனர் - நாட்டின் வளர்ச்சிக்காக.
சீனா தொடர்ந்து இதே இடத்திலும் இருக்கலாம் - ரஷியாவைப் போல் இல்லாமல் வளர்ச்சியையும் கலாச்சாரத்தையும் ஒருங்கே வைத்திருக்கலாம் - அல்லது ரஷியாவின் நிலையையும் அடையலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
#சீனப்பொருளாதாரம் #சீனக்கலாசாரம் #சீனாவின்வளர்ச்சி
#ரஷ்யப்பொருளாதாரம் #ரஷ்யக்கலாசாரம் #ரஷ்யாவின்வளர்ச்சி