Wednesday, October 3, 2018

கதை நேரம்! சிறந்தது எது?

      முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஒரு அரசர் ஆண்டு வந்தார். ஒரு நாள் அவருடைய அரசவைக்கு ஒரு இரத்தின வியாபாரி வந்தார். அவர் ஒரு வைரக்கல்லை அரசரிடம் கொடுத்து, "அரசரே! இது தான் உலகிலேயே மிகச் சிறந்த கல். இது உங்களிடம் இருப்பது தான் இந்த நாட்டுக்கே சிறப்பு (The usual marketing technique!)" என்று கூறினார். அரசரும் அதை வாங்கிக் கொண்டு அந்த வியாபாரிக்கு நிறையப் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார். 

வைரக்கல்
     பிறகு தன் மகனான இளவரசனை அழைத்து, "மகனே! இது தான் உலகிலேயே மிகச் சிறந்த கல். இதை என் பரிசாக நீ வைத்துக் கொள்."என்று கூறினார். இளவரசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அரண்மனையில் இருந்த அமைச்சர்கள், பணியாளர்கள், தனது நண்பர்கள் என்று அனைவரிடமும் தன்னிடம் 'உலகின் மிகச் சிறந்த கல்' இருப்பதாகக் கூறிப் பூரிப்பு அடைந்து கொண்டிருந்தான். 

The surprised prince!
        அதைக் கண்ட அரசர், 'விலை உயர்ந்த பொருளே சிறந்த பொருள்' என்ற எண்ணத்துக்குத் தன் மகன் வந்து விடக் கூடாது என்று நினைத்தவராய், தன் மகனை அழைத்தார். அவனிடம் நிறையக் களிமண்ணைக் கொடுத்தார். "நீ நகரத்திற்குச் செல். அங்கே நீ சந்திக்கும் நபர்களிடம் இந்தக் களிமண்ணைக் கொடுத்து, 'உலகின் மிகச் சிறந்த கல்லின் வடிவத்தைச்' செய்து காட்டச் சொல். நீ இளவரசன் என்று யாரிடமும் கூறாதே." என்றார். இளவரசனும் நகரத்திற்குச் சென்றான். அங்கே முதலில் அவன் ஒரு சலவைத் தொழிலாளியைச் சந்தித்தான். 

சலவைத் தொழிலாளி 
          அவரிடம், "உலகின் மிகச் சிறந்த கல் எப்படி இருக்கும் என்று இந்தக் களிமண்ணில் செய்து காட்டுங்கள்" என்று கொஞ்சம் களிமண்ணைக் கொடுத்தான். அவர், துணி துவைக்கும் கல்லை போன்ற ஒரு கன செவ்வக (cuboid) வடிவத்தைச் செய்தார். அதன் மேல்பகுதி மட்டும் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது.



      "தம்பி! உலகின் மிகச் சிறந்த கல் இப்படித் தான் இருக்க வேண்டும். கல்லின் மேல் முகம் சமமாக இல்லாமல் இப்படி ஏற்ற இறக்கத்துடன் இருந்தால் தான் எங்களுக்குத் துணி துவைக்க வசமாக இருக்கும்." என்றார். இளவரசனுக்குக் குழப்பமாக இருந்தது. நம்மிடம் இருக்கும் கல்லின் வடிவமும் இந்தக் கல்லின் வடிவமும் வேறு வேறாக உள்ளதே.... என்று நினைத்துக் கொண்டே வேறு ஒருவரிடம் சென்று அவரிடமும் சிறிது களிமண்ணைக் கொடுத்து, அதே போல் கூறினான். அவர் ஒரு நாவிதர்.  


     அவர் தனது கத்தியை ஒரு உரைகல்லில் வைத்துத் தீட்டிக் கொண்டிருந்தார். அந்த உரைகல் அவரால் அதிகம் உரையப்பட்டு, நடுப்பகுதி தேய்ந்து போய்ச் சற்றுக் குழிவாக இருந்தது. அவர் அந்தக் களிமண்ணைக் கொண்டு ஒரு தட்டையான செவ்வகக் கல்லை உருவாக்கினார். அதன் மேல்பகுதி சொரசொரப்பாக இருந்தது.


     "தம்பி! இந்தக் கல் தான் உலகின் சிறந்த கல். எங்கள் கத்திகளைக் கூர்மைப் படுத்த இதுவே சிறந்த கல்லாக இருக்கும்." என்றார். இளவரசனுக்கு மீண்டும் அதே குழப்பம். அவன் சற்று நகர்ந்து அருகிலிருந்த செங்கல் சூளைக்குச் சென்றான். அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடமும் களிமண்ணைக் கொடுத்து, 'உலகின் மிகச் சிறந்த கல்லின் உருவத்தை'ச் செய்து காட்டச் சொன்னான். 


        அவர் செங்கல்லைப் போன்ற ஒரு கன செவ்வக உருவத்தைச் செய்து இளவரசனிடம் கொடுத்தார். அந்தக் கல்லின் எல்லாப் பக்கங்களிலும் மிகமிகச் சிறிய துளைகள் கொண்டதாக, ஒரு தரமான செங்கல்லைப் போலவே அது இருந்தது. 


    "தம்பி!, இந்தக் கல் சிறப்பாக நீரையும் கலவையையும் உறிஞ்சிப் பிடித்துக் கொள்ளும் தன்மையுடைய முதல்தரமான செங்கல்லைப் போல உருவாக்கியுள்ளேன். இது தான் உலகின் மிகச் சிறந்த கல்." என்றார். இப்போது இளவரசனின் குழம்பிய மனம் தெளிவடைய ஆரம்பித்தது. அவன் தன் தந்தையிடம் சென்று நடந்ததைக் கூறினான்.


       அரசர், "இப்போது என்ன புரிந்து கொண்டாய்?" என்றார். "விலையுயர்ந்த விஷயங்கள் எல்லாம் சிறந்த விஷயங்கள் அல்ல. நமக்கும் நம் வாழ்க்கைக்கும் உதவும் விஷயங்கள், நம்மை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வைத்துக் கொள்ளும் விஷயங்களே சிறந்த விஷயங்கள்." என்று கூறினான் இளவரசன்.

          நம் வாழ்க்கையிலும், இது போலவே, நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் விஷயங்கள், நம்மை நிறைவாக உணர வைக்கும் விஷயங்கள், அவை எவ்வளவு சிறியவைகளாக இருந்தாலும் சிறப்பான விஷயங்களே! நம் உறவுகள், நம் இல்லம், சுற்றுப்புறம், நம் வேலை, அனைத்துமே சிறப்பான விஷயங்கள் என்று நாம் நினைத்தால் அவை யாவும் சிறப்பான விஷயங்களே. நன்றி!

No comments:

Post a Comment