Tuesday, November 27, 2018

விறகுவெட்டியும் கோடரியும் கதை - Version 2.ஓ...

     விறகுவெட்டி கோடரியைத் தண்ணியில போட்டுட்டு சாமிகிட்ட தங்கம், வெள்ளி, இரும்புக் கோடரிகளை வாங்கிய கதையையே கொஞ்சம் வேற மாதிரி பாக்கலாம். அதென்ன #2.௦ ? ஏன்னா, இங்க விறகு வெட்டிக்குப் பதிலா ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர் கதைய பாக்கப் போறோம். Environment-அ maintain பண்றதுக்காக 2.௦ ன்னு பேர் வெச்சாச்சு.



         ஒரு ஊர்ல ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர் இருந்தானாம். அவன் ஒரு நாள் ஒரு ஆற்றங்கரையில் உட்கார்ந்து தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனது லேப்டாப் தவறித் தண்ணீரில் விழுந்து விட்டது. அதிர்ச்சியில் அவன் அழுது புலம்ப ஆரம்பித்தான். "என்னோட project coding முழுசும் இந்த லேப்டாப்ல தான் இருக்கு. அது இல்லன்னா நான் எப்படிப் பிழைப்பேன்?" என்று அழுதான்.



          அப்போது ஆற்றில் இருந்து ஒரு பெண் தெய்வம் தோன்றியது. அது அவனிடம், "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டது. அவன் நடந்ததைக் கூறினான். அவனைத் தேற்றிய அந்தப் பெண் தெய்வம் , "நான் உன்னுடைய லேப்டாப்பை எடுத்துத் தருகிறேன்." என்று கூறியது. நீரில் மூழ்கிய அந்தப் பெண் தெய்வம், கையில் தீப்பெட்டி போன்ற ஒரு பொருளை எடுத்துக் கொண்டு எழுந்தது.


         "இதுவா உன்னுடைய லேப்டாப்?" என்று கேட்டது. நம்ம நாயகனும் "இது இல்லை." ன்னு சொன்னான். "சரி. நான் மீண்டும் முயற்சி செய்கிறேன்" என்று கூறிய பெண் தெய்வம் மீண்டும் முழுகி எழுந்தது. இப்போது அதன் கையில் கால்குலேட்டர் போன்ற ஒரு பொருள் இருந்தது.




         "இதுவா உன் லேப்டாப் என்று பார்" என்றது. நம்ம ஆளோ "இல்லை தெய்வமே. இதுவும் இல்லை" ன்னு சொல்றான். இந்த முறை தெய்வம் அவனைச் சற்று ஏற இறங்கப் பார்த்து விட்டு, "சரிப்பா, உனக்காக நான் இன்னொரு முறை try பண்றேன்" என்று கூறிவிட்டு மீண்டும் நீரில் மூழ்கியது. இப்போது அதன் கையில் நம்ம ஆளின் லேப்டாப் இருந்தது.'


              அதைப் பார்த்த நம்ம சாப்ட்வேர் எஞ்சினியர், குதூகலத்துடன் அதைக் கையில் வாங்கிப் பார்த்துவிட்டு, "மிக்க நன்றி தெய்வமே. இது தான் என் லேப்டாப்" என்று கூறினான். "சரி இதை நீயே வைத்துக் கொள்." என்று கூறியது பெண் தெய்வம். ஆனாலும் நம்ம நாயகனுக்கு ஒரு குழப்பம். அவன் அந்தப் பெண் தெய்வத்திடம், "எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?" என்றான். "சரி,சீக்கிரம் கேளுப்பா. எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றது. "நான் சின்ன வயசுல கேட்ட 'விறகுவெட்டியும் கோடரியும்' கதையில நீங்க முதல்ல தங்கக் கோடரி, அப்புறம் வெள்ளிக் கோடரி கடைசியில இரும்புக் கோடரின்னு விறகுவெட்டிக்குக் கொடுத்தீங்க".


Image result for woodcutter story
பழைய விறகுவெட்டி கதை 
     "அப்படிப் பாத்தா எனக்கு முதல்ல நீங்க மிகச் சிறந்த லேப்டாப்பைக் கொடுத்திருக்கணும்; அப்புறம் அதைவிடக் கொஞ்சம் சாதாரணமான லேப்டாப்பையும் பிறகு என்னோட லேப்டாப்பையும் கொடுத்திருக்கணும். கடைசியில என் நேர்மையைப் பாராட்டி மூணு லேப்டாப்பையும் எனக்கே கொடுத்திருக்கணும். அது தானே சரியான கதை?" ன்னு கேட்டான்.

Image result for angel


             பெண் தெய்வமோ சிரித்துக் கொண்டே கூறியது, 

      "நான் முதலில் தீப்பெட்டி சைஸில் எடுத்துக் கொடுத்தது 20th Generation கம்பியூட்டர். அது மிகச் சிறிய அளவில் இருந்ததால் அதை நீ தீப்பெட்டி என்று நினைத்துக் கொண்டாய். 
    அடுத்து, கால்குலேட்டர் சைஸில் எடுத்துக் கொடுத்தது 10th Generation கம்பியூட்டர். அதுவும் சிறிய அளவில் இருந்ததால் அதை நீ கால்குலேட்டர் என்று நினைத்துக் கொண்டாய்.

    பிறகு தான் நான் உன் லேப்டாப்பையே எடுத்துக் கொடுத்தேன். உன் நேர்மையை நான் பாராட்டினாலும் அந்த நேர்மைக்குப் பரிசாக மூன்று கணினிகளையும் உனக்குக் கொடுக்க விரும்பவில்லை. 

       உனக்கு உன் துறை பற்றிய அறிவு குறைவாக உள்ளது. நீ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உன் துறையில் நிறைய இருக்கு. YOU NEED UPDATES! So, See you later." என்று கூறி மறைந்தது. 

கதையின் நீதி: Be updated at your domain knowledge. உங்கள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டே இருங்கள். 


#2.௦ #2.o #2.ஓ #விறகுவெட்டியும்கோடரியும் #reloaded2.௦ 
#version2.௦

Tuesday, October 9, 2018

ரஷியா Vs சீனா - வல்லரசுகளின் கலாச்சாரமும் பொருளாதாரமும்.

 ரஷியப் பொருளாதாரமும் 'கலாசார மறுப்பும்':   

   'ரஷ்யா' என்கிற நாட்டின் பெயருக்கு இப்போது இருக்கும் மதிப்பு குறைவு. ஆனால் அந்த நாட்டின் இன்னொரு பெயர் 'ஒருங்கிணைந்த சோவியத் குடியரசு' (Union of Soviet Socialist Republics - USSR). ஒரு காலத்தில் 'பேரைக் கேட்டாலே அதிருதுல்ல...' என்ற பெருமையோடு இருந்தது அந்த நாடு. இந்த விஷயம் இன்றைய தலைமுறைக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. 1970, 80 களில் உலக நாடுகளின் நடுவில் சோவியத் யூனியனின் கையே ஓங்கி இருந்தது. அப்போது இருந்த வல்லரசுகள் இரண்டு: அவை அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன். 

சோவியத் குடியரசு வரைபடம் 

    பொருளாதாரம், தொழில்நுட்பம், வணிகம், விஞ்ஞானம், விண்வெளி அராய்ச்சி, விளையாட்டு என்று பல துறைகளிலும் சோவியத் குடியரசின் ஆதிக்கம் இருந்தது. அமெரிக்காவும் சோவியத்தும் மட்டுமே உலகின் இரு பெரும் சக்திகளாக இருந்தன. இவை அனைத்துக்கும் ஒரே காரணமாகவும், பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகவும் இருந்தது - சோவியத்தின் சோஷியலிச ஆட்சி தான். சோவியத் யூனியனின் குறிக்கோள் - "உலகத் தொழிலாளரே - ஒன்று படுங்கள்" என்பது தான். தொழில் வளமும் விவசாயமும் மிகுந்த ஏற்றத்தைப் பெற்றிருந்தன.

மாஸ்கோவின் ஒரு தொழிற்சாலை 
     'மக்கள் அனைவருமே சமம்; அனைவருமே உழைக்க வேண்டும்; அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, குடியிருப்பு மட்டுமல்லாமல், அடிப்படைத் தேவைகளான உணவைக் கூட அரசாங்கமே வழங்கும் (ரேஷன் முறை)' என்கிற முறை சோவியத் குடியரசில் அமலில் இருந்தது.

ரஷியாவில் விவசாயப் பணி 
      அதனாலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நிறைவாக இருந்ததுடன், மனித வளத்திலும் (Human Resources) சோவியத் குடியரசு சிறப்பாக இருந்தது. 

எங்கே சறுக்கினார்கள்?

    ஆனால் ஒரு விஷயத்தில் மக்கள் மனக் குறையுடன் வாழ வேண்டியிருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள் - அது தான் சோவியத் அரசாங்கத்தின் 'கலாச்சார மறுப்பு'. அதாவது, மக்கள் ஒன்றுபட்டு இருப்பது மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்குச் சரியாக இருக்கும் என்று கம்யூனிச ஆட்சியாளர்கள் நினைத்தனர். கலாச்சார மற்றும் மத வழிபாடுகளும் பழக்கங்களும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடும் என்று நினைத்தனர். தாராளவாதம் (liberalism) என்கிற கலாச்சாரத்தை ஆட்சியாளர்கள் மக்களிடம் நிர்பந்தப் படுத்தினர். உணவுப் பொருட்களையே ரேஷனில் வாங்கிக் கொண்டிருந்த மக்களால் சமூக ஒன்றுகூடல்களை (social gatherings) நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை; மக்கள் தங்களது கடவுள்களை வணங்க உரிமையற்று இருந்தனர். மத நூல்கள் கூடத் தடை செய்யப்பட்டிருந்தன. 

உடைந்தது சோவியத் குடியரசு 
         மக்கள், தங்கள் உரிமைகளையும் உணர்வுகளையும் அரசாங்கம் மதிக்கவில்லை என்று நனைக்க ஆரம்பித்த நேரத்தில் 80 களின் இறுதியில் திடீர் உணவுப் பஞ்சம் ரஷியாவைத் தாக்க, மக்கள் புரட்சி வெடித்தது. சில சிறு மாகாணங்கள் தனியுரிமை கேட்டன. இறுதியில், 1991 ஆம் ஆண்டு உடைந்து சிறு துண்டுகளானது சோவியத் குடியரசு. வல்லரசு என்ற கவுரவத்தையும் இழந்தது.

சீனப் பொருளாதாரமும் 'கலாசார மறுதலிப்பும்' (Refusal):

      சீனா தான் இன்று உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம் - உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்நுட்பம் இவற்றில் எல்லாம் அவர்கள் எங்கோ உயரத்தில் இருக்கிறார்கள். பழைய சோவியத் யூனியனின் வளத்தைப் பற்றி விவரிக்கும் அளவுக்கு சீனாவைப் பற்றி இங்கே விவரிக்க வேண்டியதில்லை. அவர்களின் வளர்ச்சி இன்றைய தலைமுறை அறிந்த ஒன்று தான்.

சீனத் தொழிற்சாலை 
        ஆனால் இந்த வளர்ச்சியை 'ஒரு முக்கால் நூற்றாண்டு வளர்ச்சி' என்று தான் எடுத்துக் கொள்ள முடிகிறது. அதற்கு முன்னர் வரை சீனர்கள் உலகிலிருந்தே தனித்து இருந்தனர் என்று தான் சொல்ல முடியும். அதாவது, 'டெங் ஜியோ பிங்' என்ற ஆட்சியாளர் வரும் வரை! அவர் தான் சீனாவில் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தினார் என்கிறது வரலாறு. முந்தைய சீன மக்கள் தங்களின் தாய்மொழியையே பேசவும் கல்வி கற்கவும் உபயோகித்தனர். மிகப் பெரிய, கற்றுக் கொள்வதற்கு மிகவும் சிரமமான சீன மொழியிலேயே அவர்கள் இருந்ததால் சீனக் கலாச்சாரம் வெளியுலகை விட்டுப் பல நூற்றாண்டுகள் தனித்தே இருந்தது.


சீன எழுத்துக்கள் 
     மொழி மட்டுமின்றிக் கலாச்சாரமும் மிகப் பழமையான, நுணுக்கமான பழக்கங்களைக் கொண்டிருந்தது. பிறகு அவர்கள் ஒரு "கலாசார மாற்றத்திற்கு" உள்ளாகினர். தொழில்வளமும் நாட்டின் முன்னேற்றமும் வேண்டி, தங்கள் கலாசாரத்தை மறுதலித்து, நவீன முறைமைகளைப் பின்பற்றியும், தங்களின் அயராத உழைப்பாலும் இன்று வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். 

சீனத் தொழிற்சாலைகள் 
       சீனா ஆங்கில வழிக் கல்விக்கு சில வருடங்களுக்கு முன் மாறியிருக்கிறது. இந்தியா கொடிநாட்டும் துறைகளில் ஒன்றான தகவல்தொழில்நுட்பத் துறையிலும் நமது மிக நெருங்கிய போட்டியாளராக சீனா விளங்குகிறது. 


       ஆனால் அவர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த 'உழைப்பு' என்ற ஒன்றை மட்டும் அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை என்பதே அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிமான காரணம்.
   ரஷியர்களுக்குக் கலாச்சாரம் மறுக்கப்பட்டது; வளர்ச்சியை எட்டினாலும் கலாசாரத்திற்கான தேடுதலில் நாடு பின்னடைவைச் சந்தித்தது. 
      சீனர்கள் கலாச்சாரத்தை மறுதலித்துள்ளனர் - நாட்டின் வளர்ச்சிக்காக. 

  சீனா தொடர்ந்து இதே இடத்திலும் இருக்கலாம் - ரஷியாவைப் போல் இல்லாமல் வளர்ச்சியையும் கலாச்சாரத்தையும் ஒருங்கே வைத்திருக்கலாம் - அல்லது ரஷியாவின் நிலையையும் அடையலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

#சீனப்பொருளாதாரம்  #சீனக்கலாசாரம்  #சீனாவின்வளர்ச்சி 
#ரஷ்யப்பொருளாதாரம்  #ரஷ்யக்கலாசாரம்  #ரஷ்யாவின்வளர்ச்சி 








Wednesday, October 3, 2018

கதை நேரம்! சிறந்தது எது?

      முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஒரு அரசர் ஆண்டு வந்தார். ஒரு நாள் அவருடைய அரசவைக்கு ஒரு இரத்தின வியாபாரி வந்தார். அவர் ஒரு வைரக்கல்லை அரசரிடம் கொடுத்து, "அரசரே! இது தான் உலகிலேயே மிகச் சிறந்த கல். இது உங்களிடம் இருப்பது தான் இந்த நாட்டுக்கே சிறப்பு (The usual marketing technique!)" என்று கூறினார். அரசரும் அதை வாங்கிக் கொண்டு அந்த வியாபாரிக்கு நிறையப் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார். 

வைரக்கல்
     பிறகு தன் மகனான இளவரசனை அழைத்து, "மகனே! இது தான் உலகிலேயே மிகச் சிறந்த கல். இதை என் பரிசாக நீ வைத்துக் கொள்."என்று கூறினார். இளவரசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அரண்மனையில் இருந்த அமைச்சர்கள், பணியாளர்கள், தனது நண்பர்கள் என்று அனைவரிடமும் தன்னிடம் 'உலகின் மிகச் சிறந்த கல்' இருப்பதாகக் கூறிப் பூரிப்பு அடைந்து கொண்டிருந்தான். 

The surprised prince!
        அதைக் கண்ட அரசர், 'விலை உயர்ந்த பொருளே சிறந்த பொருள்' என்ற எண்ணத்துக்குத் தன் மகன் வந்து விடக் கூடாது என்று நினைத்தவராய், தன் மகனை அழைத்தார். அவனிடம் நிறையக் களிமண்ணைக் கொடுத்தார். "நீ நகரத்திற்குச் செல். அங்கே நீ சந்திக்கும் நபர்களிடம் இந்தக் களிமண்ணைக் கொடுத்து, 'உலகின் மிகச் சிறந்த கல்லின் வடிவத்தைச்' செய்து காட்டச் சொல். நீ இளவரசன் என்று யாரிடமும் கூறாதே." என்றார். இளவரசனும் நகரத்திற்குச் சென்றான். அங்கே முதலில் அவன் ஒரு சலவைத் தொழிலாளியைச் சந்தித்தான். 

சலவைத் தொழிலாளி 
          அவரிடம், "உலகின் மிகச் சிறந்த கல் எப்படி இருக்கும் என்று இந்தக் களிமண்ணில் செய்து காட்டுங்கள்" என்று கொஞ்சம் களிமண்ணைக் கொடுத்தான். அவர், துணி துவைக்கும் கல்லை போன்ற ஒரு கன செவ்வக (cuboid) வடிவத்தைச் செய்தார். அதன் மேல்பகுதி மட்டும் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது.



      "தம்பி! உலகின் மிகச் சிறந்த கல் இப்படித் தான் இருக்க வேண்டும். கல்லின் மேல் முகம் சமமாக இல்லாமல் இப்படி ஏற்ற இறக்கத்துடன் இருந்தால் தான் எங்களுக்குத் துணி துவைக்க வசமாக இருக்கும்." என்றார். இளவரசனுக்குக் குழப்பமாக இருந்தது. நம்மிடம் இருக்கும் கல்லின் வடிவமும் இந்தக் கல்லின் வடிவமும் வேறு வேறாக உள்ளதே.... என்று நினைத்துக் கொண்டே வேறு ஒருவரிடம் சென்று அவரிடமும் சிறிது களிமண்ணைக் கொடுத்து, அதே போல் கூறினான். அவர் ஒரு நாவிதர்.  


     அவர் தனது கத்தியை ஒரு உரைகல்லில் வைத்துத் தீட்டிக் கொண்டிருந்தார். அந்த உரைகல் அவரால் அதிகம் உரையப்பட்டு, நடுப்பகுதி தேய்ந்து போய்ச் சற்றுக் குழிவாக இருந்தது. அவர் அந்தக் களிமண்ணைக் கொண்டு ஒரு தட்டையான செவ்வகக் கல்லை உருவாக்கினார். அதன் மேல்பகுதி சொரசொரப்பாக இருந்தது.


     "தம்பி! இந்தக் கல் தான் உலகின் சிறந்த கல். எங்கள் கத்திகளைக் கூர்மைப் படுத்த இதுவே சிறந்த கல்லாக இருக்கும்." என்றார். இளவரசனுக்கு மீண்டும் அதே குழப்பம். அவன் சற்று நகர்ந்து அருகிலிருந்த செங்கல் சூளைக்குச் சென்றான். அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடமும் களிமண்ணைக் கொடுத்து, 'உலகின் மிகச் சிறந்த கல்லின் உருவத்தை'ச் செய்து காட்டச் சொன்னான். 


        அவர் செங்கல்லைப் போன்ற ஒரு கன செவ்வக உருவத்தைச் செய்து இளவரசனிடம் கொடுத்தார். அந்தக் கல்லின் எல்லாப் பக்கங்களிலும் மிகமிகச் சிறிய துளைகள் கொண்டதாக, ஒரு தரமான செங்கல்லைப் போலவே அது இருந்தது. 


    "தம்பி!, இந்தக் கல் சிறப்பாக நீரையும் கலவையையும் உறிஞ்சிப் பிடித்துக் கொள்ளும் தன்மையுடைய முதல்தரமான செங்கல்லைப் போல உருவாக்கியுள்ளேன். இது தான் உலகின் மிகச் சிறந்த கல்." என்றார். இப்போது இளவரசனின் குழம்பிய மனம் தெளிவடைய ஆரம்பித்தது. அவன் தன் தந்தையிடம் சென்று நடந்ததைக் கூறினான்.


       அரசர், "இப்போது என்ன புரிந்து கொண்டாய்?" என்றார். "விலையுயர்ந்த விஷயங்கள் எல்லாம் சிறந்த விஷயங்கள் அல்ல. நமக்கும் நம் வாழ்க்கைக்கும் உதவும் விஷயங்கள், நம்மை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வைத்துக் கொள்ளும் விஷயங்களே சிறந்த விஷயங்கள்." என்று கூறினான் இளவரசன்.

          நம் வாழ்க்கையிலும், இது போலவே, நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் விஷயங்கள், நம்மை நிறைவாக உணர வைக்கும் விஷயங்கள், அவை எவ்வளவு சிறியவைகளாக இருந்தாலும் சிறப்பான விஷயங்களே! நம் உறவுகள், நம் இல்லம், சுற்றுப்புறம், நம் வேலை, அனைத்துமே சிறப்பான விஷயங்கள் என்று நாம் நினைத்தால் அவை யாவும் சிறப்பான விஷயங்களே. நன்றி!

Friday, September 28, 2018

கதை நேரம்! ஆண்டவன் கட்டளை

ஒரு சின்ன கதை பாக்கலாம் இன்னைக்கு.

ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்த முனிவர். அவர் ஒரு நாள் நதிக்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய எலிக்குட்டி தனியாக இருப்பதைக் கண்டார். தாய் இல்லாத அந்த எலிக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு எடுத்தார். அந்தக் குட்டி எலியைத் தனது ஆசிரமத்துக்கு எடுத்துச் சென்று தனது மனைவியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். அவர் மனைவியோ, "எனக்குப் பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும்; அதனால், நீங்கள் இந்த எலிக்குட்டியை, உங்கள் தவ சக்தியை உபயோகித்து ஒரு பெண் குழந்தையாக மாற்றிக் கொடுங்கள்." என்றார்.



           முனிவரும் அவ்வாறே செய்து கொடுக்க, அவர்கள் இருவரும் அந்த எலிக்குட்டியைத் தங்கள் மகளாக வளர்த்தனர். அவளும் வளர்ந்து திருமண வயதை அடைந்தாள். அப்போது ஒரு நாள் இரவு அவள் நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மிக அழகான அந்த நிலவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் தன் தந்தையிடம் சென்று, தன்னை அந்த நிலவுக்குத் திருமணம் செய்து வைக்கும்படிக் கூறினாள். "நிலவு மிகவும் சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது; இரவில் இந்த உலகத்திற்கு ஒளி தரும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருப்பதால், நான் நிலாவையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள். 



         "அப்படியெனில் நீ நிலாவிடமே சென்று கேள்." என்றார். அவளும் நிலாவிடம் சென்று, "இந்த உலகிலேயே நீங்கள் தான் சக்தி வாய்ந்தவராகத் தெரிகிறீர்கள். சரியா?" என்றாள். அதற்கு நிலாவோ, "எனக்கு வெளிச்சம் தருவதே சூரியன் தான். அவர் தான் என்னைவிட சக்தி வாய்ந்தவர்" என்றது. அந்தப் பெண் குழப்பம் அடைந்தாள்; நேராகச் சூரியனிடம் சென்று, "இந்த உலகிலேயே நீங்கள் தான் சக்தி வாய்ந்தவர் என்கிறார்கள். சரியா?" என்று கேட்டாள். அதற்கு சூரியனோ "எனது ஒளியும் வெப்பமும் நிறைந்த கதிர்களை மேகங்கள் மறைத்து விடுகின்றன; மேகங்கள் தான் என்னை விட சக்தி வாய்ந்தவை" என்றார்.




           அந்தப் பெண் மேகத்திடம் சென்று, "சூரியனை விட நீங்கள் சக்தி வாய்ந்தவரா?" என்று கேட்டாள். மேகமோ, "அது ஒரு விதத்தில் தான் சரி. ஏனென்றால் காற்றடித்தால் நான் பஞ்சு போல் பிரிந்து விடுகிறேன். என்னை விடக் காற்று தான் சக்தி வாய்ந்தது." என்றது. 




      பிறகு அந்தப் பெண் காற்றிடம் சென்று, "தாங்கள் மேகத்தை விட சக்தி வாய்ந்தவரா?" என்று குழப்பத்துடன் கேட்டாள். அதற்குக் காற்று, "நான் சக்தி வாய்ந்தவன் தான்; ஆனால் என் பலத்தை மலைகள் எதிர்த்து நிற்கின்றன. மலைகளே என்னை விட சக்தி வாய்ந்தவை." என்றது. பிறகு அவள் மலையிடம் சென்றாள். (சின்னப் பெண் தானே! ஆர்வக் கோளாறு வேறு.) "மலையே! நீங்கள் காற்றை விட பலமானவரா?" என்றாள். அதற்கு மலை சொன்ன பதில் தான் twist! "நான் சக்தி வாய்ந்தவன் தான். ஆனால் என் பலத்தைக் குறைப்பதற்கென்றே சில....
.
.
.
.
.
எலிகள் என் அடிவாரத்தில் இருக்கின்றன. எனக்கென்னவோ அந்த எலிகள் தான் சவாலாகவே இருக்கின்றன." என்று புலம்பியது. :-)




அவள் மலையடிவாரத்திற்குச் சென்றாள். அங்கே எலிகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவள் உடனே தன் தந்தையிடம் சென்று, "அப்பா! இந்த உலகிலேயே சக்தி வாய்ந்தவை எலிகள்தான் என்று தோன்றுகிறது. என்னை ஒரு எலிக்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள்; மேலும் என்னையும் ஒரு எலியாக மாற்றி விடுங்கள். அப்போதுதான் நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்." என்றாள்.

நம்ம கதை :-)

          முனிவருக்கும் அவர் மனைவிக்கும் அப்போது தான் இறைவனின் திருவிளையாடலே புரிந்தது. அவர் படைத்த எந்த ஒரு விஷயத்தையும் மனிதனால் மாற்ற முடியாது என்பதை உணர்ந்தவர்களாக, தங்கள் மகளை மீண்டும் எலியாக மாற்றினார்கள்.


     And they lived happily forever!

#சிறுகதை  #இறைவன்படைப்பு  #ஆண்டவன்கட்டளை #இயற்கை

நமது வலைப்பக்கத்தின் ஐம்பதாவது பதிவு இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, July 18, 2018

ஆடி 1- தேங்காய் சுடும் நிகழ்வு.

            ஆடி மாதம் தென்னிந்தியாவின் விசேஷமான மாதங்களில் ஒன்றாகும். அந்த மாதம் தெய்வ வழிபாடுகள் மிகுந்த மாதம். மகாபாரதத்தின் குரு ஷேத்திரப் போர் ஆடி மாதம் முதல் நாளில் தொடங்கி, பதினெட்டு நாட்கள் நடந்து முடிந்ததாக இதிகாசம் கூறுகிறது. தென்னகம் முழுவதிலும் உள்ள அம்மன் ஆலயங்களில் பூஜைகள் நடைபெறுவதும், பெண்கள் விரதங்கள் இருப்பதும் இந்த மாதத்தில் நடைபெறும். 
             அவற்றுள் ஒன்றாகத் தான், ஆடி ஒன்றாம் நாள் கொங்கு மண்டலத்தில் சில இடங்களில் 'தேங்காய் சுடும் நிகழ்வு' நடைபெறுகிறது. தேங்காயின் அடிப் பகுதியில் சிறு துளையிட்டு, அதிலுள்ள நீரை முதலில் வெளியேற்றி விடுவார்கள். 
துளையிடப்படும் தேங்காய் 
                 பிறகு அதே துளையின் மூலம் அவல், வெல்லத் தூள், பச்சரிசி, பாசிப் பருப்பு, வெள்ளை எள் ஆகியவற்றை உள்ளே கொட்டுவார்கள். இப்போது  தேங்காயில் இருந்து வெளியேற்றப் பட்ட தண்ணீரை மீண்டும் அதே துளையின் மூலம் உள்ளே ஊற்றிவிடுவார்கள். பின் அழிஞ்சி மரக் குச்சி ஒன்றை முனையில் சீவி இந்தத் துளையில் குத்தி விடுவார்கள்.

தேங்காய் தயார்!
                 
        பின்பு மஞ்சள், குங்குமம் வைத்து இந்தத் தேங்காயைத் தயார் செய்து, தீயில் சுடுவார்கள். 

தேங்காய் சுடுதல் 
           
         இப்படிச் சுட்ட தேங்காயை முதலில் பிள்ளையாருக்கு வைத்துப் படைத்துக் கும்பிடுவார்கள். பின் அதை உடைத்து சாப்பிட வேண்டியது தான்! 
சரி... இந்த நிகழ்வு ஆடி ஒன்றாம் தேதி ஏன் நடத்தப் படுகிறது? இது காரண காரியம் இல்லாமல் விளையாட்டாக நடப்பதில்லை. மகாபாரதப் போரில், தர்மத்தின் வெற்றிக்காக தன்னையே பலியாகக் கொடுத்த 'அரவான்' என்னும் ஒரு வீரனை நினைவில் கொள்வதற்காகத் தான் இந்த நிகழ்வு நடக்கிறது.

சுட்ட தேங்காய் 

          அரவான் - அர்ஜுனன் மற்றும் (உலுப்பி என்கிற) அரவக்கன்னி ஆகியோரின் மகன் ஆவான். ஒரு மனிதனுக்கு வேண்டிய சகல லட்சணங்களும் பொருந்தியவனாக அவன் இருந்ததால், அவனைப் போர்க்களத்துக்கு பலியாகக் கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்று பாண்டவர்களுக்குத் தெரிகிறது. ஆகவே அரவான் பலியிடப் படுகிறான். பலியிடப்படும் முன் தனது இறுதி ஆசையாக ஒன்றை அவன் கேட்கிறான். "நான் பலியிடப் படுவதால் என் தந்தைக்குக் கிடைக்கும் வெற்றியை நான் காண விரும்புகிறேன். அதனால் என் தலையை மட்டும் ஒரு உயரமான ஒரு இடத்தில் (குத்தி) வைத்து விட வேண்டும்" என்கிறான். 

அரவான் சிலை 
             
         அவனது ஆசை ஏற்கப் பட்டு, நிறைவேற்றப் பட்ட நாள் ஆடி ஒன்றாம் நாள். அதை நினைவு கூறவே ஆடி ஒன்று அன்று தேங்காயைக் குச்சியில் சொருகி, கோவிலில் வைக்கும் வழக்கம் பின் பற்றப் படுகிறது. அதைத் தீயில் வாட்டும் வழக்கம் நாளடைவில் வந்து விட்டது. 

அரவான்

            தமிழகத்தில் திரவுபதி அம்மன் கோவில்கள் அனைத்திலும் அரவானின் தலை, தனி தெய்வமாக வணங்கப் படுகிறது.

#ஆடிமாதம் #ஆடி1 #தேங்காய்சுடும்நிகழ்வு #அரவான் #மகாபாரதம் #பாரதப்போர்


Friday, May 4, 2018

திருசெந்தூர்.

           முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருசெந்தூர். அதன் முந்தைய பெயர் 'சீரலைவாய்' அல்லது 'திருச்சீரலைவாய்'. 'சீரான அலைகள் உருவாகும் கடலை வாசலாகக் கொண்ட ஊர்' என்பது தான் இதன் அர்த்தம். இது ஒரு கடல் சார்ந்த இடம்.

திருச்சீரலைவாய் 

              முருகப் பெருமான் சூரன் என்ற அசுரனைப் போரிட்டு அழிப்பதற்காக, ஒரு போர்வீரனாக, படைத்தளபதியாக, இந்த ஊரில் இருந்துதான் புறப்பட்டுச் சென்றார். வீரத்துடனும், நெற்றியில் செந்தூரத்துடனும் காட்சி தந்ததால் அவர் 'செந்தில் குமரன்' என்று அழைக்கப் பட்டார். அதன் காரணமாகவே இந்த ஊர் 'செந்தூர்' அல்லது 'திருச்செந்தூர்' என்று அழைக்கப் படுகிறது.

போர்க்கோலத்தில் திருசெந்தூர் முருகன் 

             கடலின் சீற்றமான 'சுனாமி' க்குத் தமிழில் 'கடல் கோள்' என்று பெயர். அதாவது, கடல் நிலத்தினைக் 'கொள்ளுதல்' அல்லது 'தனக்காக எடுத்துக் கொள்வது' என்று பொருள். இது வரை தமிழகத்தில் நடந்த அத்தனை கடல் கோள் (சுனாமி) களிலும் திருசெந்தூர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. (2004 ஆம் ஆண்டு சுனாமியிலும் திருசெந்தூர் மட்டுமே பாதுகாப்பாக இருந்த கடற்கரை நகரமாகும்.)

திருசெந்தூர் கோவில் 

                  கடலுக்குள் என்ன நடந்தாலும் இந்த ஊரில் மட்டும் கடல் அலைகள் ஆட்டம் காணாமல் சீராகவே இருக்கும் என்பதை அறிந்து, தமிழ் அறிஞர்கள் இந்த ஊருக்கு 'சீரலைவாய்' என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இது தான் தமிழ் நாகரீகத்தின் (தீர்க்க தரிசனம்) காலக் கணிப்பு!

#திருசெந்தூர் #திருச்சீரலைவாய் #சீரலைவாய் #சுனாமி
#முருகன் #தீர்க்கதரிசனம் #காலக்கணிப்பு #தமிழ்நாகரீகம் 
#Thiruchendur #Murugan #Tsunami



Friday, April 13, 2018

இனிய ஐந்தாம் ஆண்டு!

       
   

      நம்முடைய வலைப்பக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்திருக்கிறது. வாசக நண்பர்களின் ஆர்வம், ஆதரவு மற்றும் வாழ்த்துக்களுடன் இனிமையான ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நமது வலைப்பக்கம். மகிழ்ச்சி.