Tuesday, November 11, 2014

அக்ஷய திரிதியை என்றால் என்ன?


                ஒவ்வொரு தமிழ் வருடம் சித்திரை மாதமும் நகைக் கடைகளால் அடையாளம் காட்டப்படும் திருநாள் தான் அக்ஷய திரிதியை. நகைக் கடைகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகள், பரிசுகள், இலவசங்கள் என்று அள்ளி அள்ளித் தருவதாக  விளம்பரப் படுத்திக் கலகலத்துக் கொண்டாடிவிடும். உண்மையில் இந்த அக்ஷய திரிதியை என்றால் என்ன? தங்கத்திற்கும் இந்த தினத்திற்கும் என்ன சம்பந்தம்? அக்ஷய திரிதியையில் பொன் வாங்கினால் செல்வம் பெருகுமா? சங்கடங்கள் தீருமா?


அருள் தரும் திருமகள் 


            இந்த நாளைப் பற்றிப் புராண, இதிகாச மேற்கோள்கள் பல உண்டு,  பரசுராமர் அவதரித்த தினம், மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் அக்ஷய பாத்திரம் பெற்ற தினம், பாற்கடலில் மகாலட்சுமி அவதரித்து, மகாவிஷ்ணுவை அடைந்த தினம் என்று பல மேற்கோள்கள். சரி... இந்த அக்ஷய திரிதியைக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? 

திரிதியை நிலவு 
                   இந்த வார்த்தையைப் பிரித்துப் பார்த்தால் பொருள் அறியலாம். 'க்ஷய' என்றால் 'தேய்கிற' என்று பொருள். 'அக்ஷய' என்பது அதன் எதிர்ப் பதம். அதாவது, 'வளர்கிற' என்று பொருள். நமது முந்தைய பதிவு ஒன்றில் திதிகள் பற்றிப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரக்கூடிய மூன்றாவது திதி திரிதியை திதி. 'அக்ஷய திரிதியை' என்றால் 'வளர்பிறைத் திரிதியை' என்பது மட்டுமே சாஸ்திரங்கள் கொடுக்கும் விளக்கம். பொதுவாகவே மூன்றாம் பிறையான திரிதியை திதி நல்ல நாளாக மக்களால் பார்க்கப் படுகிறது; ஆகவே அந்தக் காலத்தில் வருடத்தின் முதல் மாதமான சித்திரையின் வளர்பிறை மூன்றாம் நாளில் புதுக்கணக்கை ஆரம்பிப்பதோ தானியங்கள் வாங்குவதோ செய்யப்பட்டிருக்கலாம். மேலும் வேறு ஏதேனும் வாங்குவதும் அந்த நாளில் செய்யப்பட்டிருக்கும்; அதனால் ஒரு துவக்கத்தின் அடையாளமாகவே சித்திரை வளர்பிறை மூன்றாம் நாள் பார்க்கபட்டிருக்கலாம். அதுவே தொடர்ந்தும் இருக்கலாம். தங்கம் மட்டுமே இப்போது விளம்பரமும் வியாபாரமும் படுத்தப் படுகிறது.

அக்ஷய திரிதியை விற்பனை 

              இந்த நாளில் தான தருமங்கள் செய்வது நல்லது என்பதும் உண்மை; அது ஏனோ பிரபலமாகவில்லை. முனிவர்கள் யாகங்கள் செய்ய ஆரம்பிக்கத் தேர்ந்தெடுப்பதும் இந்த நாளைத்தான். இந்த நாளில் இறைவனின் அருளைப் பெற வேண்டுமானால் தங்கம் வாங்க வேண்டும் என்ற நம்பிக்கை தவறு. தங்கம் வாங்க முடிந்தவர்களுக்கு ஒரு விதமான அருளையும் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு விதமான அருளையும் இறைவன் வழங்குவதில்லை; அவன் அருள் அந்த வானத்தைப் போன்று அனைவருக்கும் பொதுவானது.
#அக்ஷய திரிதியை #தங்கம்

Tuesday, November 4, 2014

ராமரும் தீபாவளியும்

    தீபாவளி என்பது ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதைத்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய நாள் என்று புராணக் குறிப்புகள் கூறுகின்றன. ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் சதுர்த்தசி நாள் (அதாவது அமாவாசைக்கு முந்தைய நாள்) தீபாவளியாகவும், வட இந்திய மாநிலங்களில் அமாவாசை நாளே தீபாவளியாகவும் கொண்டாடப் படுகிறது. சில நேரங்களில் சதுர்த்தசி திதி அடுத்த நாளிலும் தொடர்ந்தால் வட இந்திய, தென்னிந்திய தீபாவளிகள் இரண்டும் ஒரே நாளில் கொண்டாடப் படுகின்றன. 
        அமாவாசை அன்று தீபாவளியைக் கொண்டாடுவதற்குக் காரணம் உண்டு. ராமாயணக் காவியத்தில் ஒரு ஐப்பசி மாத அமாவசை அன்று தான் ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் தமது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்து அயோத்திக்குத் திரும்புகின்றனர். அயோத்தி மக்களும் அந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாகத் தங்கள் வீடுகளில் விளக்கேற்றித் தங்கள் மகிழ்ச்சியை ராமர், சீதை மற்றும் லட்சுமணருக்குத் தெரிவித்தனர்.



        அப்போது முதல் ஐப்பசியில் தீபங்கள் ஏற்றி வைத்துக் கொண்டாடும் பழக்கம்   நடைமுறைக்கு வந்துள்ளது. நாம் தமிழ்நாட்டில் கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். வட மாநிலங்களில் தீபாவளியன்றே தீபங்கள் ஏற்றிக் கொண்டாடி விடுகிறார்கள்; அதற்குக் காரணம் இது தான்.

           தீபாவளி என்ற வார்த்தையின் விளக்கமும் இதையே கூறுகிறது. 'ஆவளி' என்றால் 'வரிசை' என்று அர்த்தம். (உதாரணத்திற்கு, '1008 நாமாவளி'  என்பது 1008 நாமங்களின், அதாவது பெயர்களின் வரிசை) 'தீபாவளி' என்பது 'தீபங்களின் வரிசை' என்ற அர்த்தத்தில் கூறப்பட்டது தான். 

              
தீபாவளிக் கொண்டாட்டம் 

              கிருஷ்ண அவதாரத்திற்கு முந்தின அவதாரம் ராம அவதாரம்; அதனால் ராமர் தீபாவளி கொண்டாடியிருக்க மாட்டார் என்று சிலர் சொல்வது உண்டு.  ஆனால் ராமரால், ராமருக்காகத் தான் முதன் முதலில் தீபாவளி உருவானதும் கொண்டாடப் பட்டதும் என்பது தான் இதிகாச உண்மை.   


#தீபாவளி #ராமர் #கிருஷ்ணர்