Monday, May 12, 2014

தங்கம் குடித்த தமிழர்கள்

         தலைப்பைப் பார்த்தவுடன் மலைத்து விட்டீர்களா? 'தங்கம் திடப் பொருள்; அதைக் குடிக்க முடியுமா?' என்ற ஆராய்ச்சியில் ரொம்பவும் இறங்கி விட வேண்டாம். காவிரி நதி நீர் குடித்து வாழ்ந்த தமிழர்கள் தான் 'தங்கம் குடித்த தமிழர்கள்'.
         தமிழகத்தில் நதிகளின் பெயர்கள் பெண்பால் பெயர்கள் என்பது பலருக்கும் தெரிந்த தகவல் தான். அவை காரணப் பெயர்களும் கூட. காவிரிக்கு 'பொன்னி' என்றும், பொருணை நதிக்கு 'தாமிரபரணி' என்ற பெயரும் வந்ததற்கு, தமிழர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையே காரணம். அறிவியல் அர்த்தத்துடனேயே சொற்கள் அமைக்கப் பட்டுப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. காவிரி நதி நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத் தாது சற்று அதிக அளவில் இருந்திருக்கிறது. (இன்றும் இருக்கலாம்.) காவிரி ஆற்று மணலில் தங்கத் துகள்கள் இருந்திருக்கின்றன. திருஞான சம்பந்தர் தனது தேவாரப் பாடல் ஒன்றில் 'பொன்கரை பொறு பழங்காவிரி' என்று காவிரி நதிக்கரை மணலில் பொன் துகள்கள் இருந்ததை ஊர்ஜிதப் படுத்துகிறார்.
    அதே போல் பொருணை ஆற்று நீரில் தாமிரத் தாது அதிக அளவில் இருந்திருக்கிறது. அதனால் பொருணை ஆற்றுக்கு 'தாமிரபரணி' என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

                                           
                                                               மின்னும் மணல்

          படத்தில் இருப்பது பொன்னி நதிக்கரை மணலோ தாமிரபரணி நதி மணலோ இல்லை. மூணாறு நதி மணல். காவிரி மணலையும் தாமிரபரணி மணலையும் நிறைய இழந்து விட்டோம். இப்போது மண்ணெல்லாம் மின்னுவது மலையாளக் கரையோரம் தான். (கேரளாவில் ஆற்று மணல் அள்ள அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.)


                   இது தற்போது இருக்கும் காவிரி ஆறு. எங்கள் ஊர் காவிரி ஆற்றின் கரையோரம் இருப்பதால் தற்போது தங்கம் குடிக்கும் தமிழர்களில் நானும் ஒருத்தி.
              
டெயில் பீஸ்:

     வைகை நதியின் பெயருக்கு புராணக் கதையொன்று உண்டு. சிவபெருமானின் மீனாட்சி திருக்கல்யாணத்தில் மதுரையில் ஏற்பட்ட தண்ணீர்ப் பஞ்சம் தீர ஆகாய கங்கையே சிவன் கை வைத்த இடத்தில் தோன்றியதாகவும், அதனாலேயே "வை-கை" என்ற பெயர் வந்ததாம்.

Posted by: Kiruthika Vishnu.
#காவேரி #பொன்னி #தங்கம் #பெயர்க்காரணம் 

No comments:

Post a Comment