Wednesday, September 24, 2014

பல்லாங்குழி விளையாட்டும் Quantity Analysis-உம்.... A Mind Game!

       பல்லாங்குழி விளையாட்டைப் பத்தி நம்மள்ள நிறைய பேருக்குத் தெரியும். பலர் விளையாடியும் இருப்போம். இது சங்க கால விளையாட்டுகள்ல ஒன்னு. குறிப்பாகப் பெண்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு இது. இளவயதுப் பெண்கள் பல்லாங்குழி விளையாடும்படி ஊக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள். இன்றும் நகரங்களிலும், கிராமங்களிலும் நிறைய இடங்களில் சிறுமிகள் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்.

பல்லாங்குழி விளையாடும் சிறுமிகள்
          பல்லாங்குழிப் பலகையில்  இரண்டு வரிசைகளில் குழிகள் போன்ற அமைப்புகள் இருக்கும். ஒவ்வொரு  வரிசையிலும் ஏழு அல்லது ஒன்பது குழிகள் இருக்கும். சோழிகள் அல்லது புளியங்கொட்டைகளை ஒரே எண்ணிக்கையில் அந்தக் குழிகளில் நிரப்பி விளையாட்டை ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு குழியிலும் இருக்கும் சோழிகளை அள்ளி மீதமிருக்கும் குழிகளில், குழிக்கு ஒன்றாக வரிசையாகப் போட்டுக் கொண்டே வருவார்கள். எந்தக் குழியில் இருந்து எடுத்து விளையாடுவது என்பதில் தான் ஆடுபவரின் புத்திசாலித்தனமும் வெற்றியும் இருக்கிறது.

பல்லாங்குழிப் பலகை
                சோழிகள் தீரும் குழிக்கு அடுத்த குழியில் இருந்து மீண்டும் சோழிகளை எடுத்து விளையாடுவதன் மூலம் ஆட்டம் தொடரும். சோழிகள் முடியும் குழிக்கு அடுத்த குழி காலியான குழியாக இருந்தால், காலியான குழிக்கு அடுத்த குழியில் இருக்கும் அனைத்து சோழிகளையும் ஆடுபவர் எடுத்துத் தன்னுடைய லாபக் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். ஆட்டம் முடியும் போது யாருடைய லாபக் கணக்கில் அதிக சோழிகள் உள்ளனவோ அவரே வெற்றி பெற்றவர். 

           ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது குழிகளில் இருக்கும் சோழிகளின் எண்ணிக்கை சரியாகப் புலப்படாது. அதனால் சோழிகளின் எண்ணிக்கையை எண்ணிப் பார்க்காமலேயே கண்ணில் தெரியும் அளவை வைத்தே தெரிந்து கொண்டு குழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது, இந்தக் குழியில் இருக்கும் சோழிகள் இத்தனை குழிகளுக்கு வரும் என்ற அளவு, கண்ணால் பார்த்தே தீர்மானிக்கப் பட வேண்டும். 

பல்லாங்குழியும் Quantity analysis - உம் 

  பெண்கள் தங்கள் பால்யப் பருவத்தில் விளையாடும் இந்த விளையாட்டானது, பிற்காலத்தில் அவர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது உதவியாக இருக்கிறது. அதாவது, இவ்வளவு பேருக்கு இவ்வளவு அரிசியைத் தொகுப்பிலிருந்து எடுத்து சமைத்தால் இவ்வளவு சாதம் வரும் என்பதைக் கண்ணால் பார்த்தே தீர்மானிப்பதற்கு உதவுகிறது. மேலும் பந்திகளில் உணவு பரிமாறும் போதும் தொகுப்பிலிருந்து எவ்வளவு சாதம் மற்றும் இதர பதார்த்தங்களை எடுத்துச் சென்றால் ஒரு பந்திக்கு வரும் என்பதைக் கண்ணால் கணக்கிட்டே சரியாகச்  முடியும். இவற்றுக்கான பயிற்சியாகத்தான் பல்லாங்குழி விளையாட்டு, பருவமடைந்த பெண்களுக்கான விளையாட்டாக ஆக்கப் பட்டிருக்கிறது. பல்லாங்குழி என்பது அளவிடுதல் பயிற்சி. It is a Quantity Analysis training. அது ஒரு மன விளையாட்டு. (A Mind Game....)
            

பல்லாங்குழி விளையாடும் ஹர்பஜன்
     இங்கே பல்லாங்குழி விளையாடுபவர்கள் ஹர்பஜன், சேவாக், மற்றும் பலர்....

படங்கள் - நன்றி: www.....
#பாரம்பரிய விளையாட்டுக்கள் #பல்லாங்குழி #mind game #quantity analysis 

No comments:

Post a Comment