Friday, December 4, 2015

தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு ஏன்?

  நமது நடைமுறையில் பொதுவாக அஷ்டமி திதி அமையும் நாட்களை சுபகாரியங்களுக்குத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவார்கள். 'அஷ்டமியில் தொடங்கினால் கஷ்டத்தில் முடியும்'  என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று கொஞ்சம் விபரம் அறிந்தவர்களிடம் கேட்டால் ஒரு விஷயத்தைக் கூறுவார்கள். 'அஷ்டமி அன்னைக்கு எல்லா சாமியும் சிவனைக் கும்பிடப் பொய் விடுவார்கள். நாம் நல்ல காரியம் செய்யும் பொது எந்த தெய்வத்தைத் துணைக்கு அழைத்தாலும் அவர்களால் நமக்கு நன்மை செய்ய வர முடியாமல் போய் விடும்.' என்று கூறுவார்கள். இது ஒரு பக்கம் என்றால் அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் தீராத வினையும் தீர்ந்து விடும் என்கிறார்கள். 

   எல்லா சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக, வடகிழக்கு மூலையான ஈசான்ய மூலையில், நாயைத் தனது வாகனமாகக் கொண்டு, நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிப்பவர் இந்த பைரவ மூர்த்தி. இவரே சிவபெருமானின் இருப்பிடமான கைலாசத்தின் காவல் தெய்வமாக அறியப்படுகிறார். பைரவரின் அனுமதியைப் பெற்றே சிவ தரிசனம் பெற யாராலும் இயலும் என்பது இந்து மத நம்பிக்கை. 


பைரவர் 
      அஷ்டமியன்று தெய்வங்கள் அனைவரும் சிவ தரிசனம் பெற வேண்டியும் சிவ பூஜை செய்ய வேண்டியும் சிவ பெருமானின் இருப்பிடமான கைலாசத்தை நோக்கி வருவார்கள். பூஜை செய்யும் வேளையில் கைகளில் ஆயுதங்களை வைத்திருப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. மேலும் பிரார்த்தனை செய்யும் வேளையில் தங்கள் சக்திகள் அனைத்தையும் களைந்து, சாமானியவர்களாக இருப்பதும் தெய்வங்கள் அனைவரும் பின்பற்றும் நியதி. அதனால் தெய்வங்கள் அனைவரும் தங்கள் கைகளில் உள்ள ஆயுதங்கள் மற்றும் தங்களிடமுள்ள சக்திகள் அனைத்தையும் காவல் தெய்வமான பைரவரிடம் ஒப்படைத்து விட்டுக் கைலாசத்திற்குள் பிரவேசிப்பார்கள். 

காவல் தெய்வம் பைரவர்
    அவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்கும் பொழுது, தெய்வங்கள் அனைத்தும் பைரவரிடம், தங்களின் அருளை வேண்டி வரும் பக்தர்களுக்கும் ஆபத்தில் தங்களைத் துணைக்கு அழைக்கும் அடியவர்களுக்கும் தங்களுடைய இடத்தில் இருந்து உதவி செய்யுமாறு வேண்டுகிறார்கள். தானும் அவ்வாறே செய்வதாக பைரவரும் ஒவ்வொரு தெய்வத்துக்கும் வாக்களிக்கிறார். அந்த வாக்கின் படி அனைத்து தெய்வங்களின் சக்தியையும் பெற்றவராகவும், எல்லா தெய்வங்களின் பிரதிநிதியாகவும் அஷ்டமியன்று பைரவர் திகழ்கிறார். அதனால் அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபடும் பயன் ஏற்படும் என்று ஐதீகமாகிறது. குறிப்பாகத் தேய்பிறை அஷ்டமிக் காலத்தில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பானதாகப் பின்பற்றப் படுகிறது. 
#பைரவர் #அஷ்டமி 

Monday, November 23, 2015

பாரதியா? வாலியா?

 


இந்த இரு வேறு கவிஞர்கள் எழுதிய, பெரும் வெற்றியடைந்த இரு வேறு பாடல்களைக் கேட்கும் போது ஒரு விஷயம் சிந்திக்க வைக்கிறது. முதலில் பாரதி: 

"விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்."
மனம் நினைத்த வேகத்தில், நினைத்த விஷயத்தை உடல் செய்து விட வேண்டும் என்கிறார்.

    கவிஞர் வாலி தனது "கண் போன போக்கிலே கால் போகலாமா?" என்ற பாடலில்
                             "மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?"
மனம் நினைத்ததையெல்லாம் மனிதன் செய்தால் என்ன ஆகும்? தோல்வி, வேதனை தான் மிஞ்சும் என்கிறார். எது சரி என்று தெரியவில்லை. கால நிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப இந்த இரண்டு கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். #வாலி #பாரதியார் .



Saturday, September 19, 2015

உள்ளூர் பெண்ணும் வெளியூர் மண்ணும் ஆகாது!

     இன்று மக்கள் சேமிப்பை விட முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். Investment Solutions என்ற பெயரில் எந்த விதமான முதலீடுகளை ஒருவர் மேற்கொள்ளலாம் என்ற அறிவுரைகள் கூறப்படுகின்றன. அனால் நமது வாழ்வியலில் முதலீடு பற்றிய அறிவுரைகள் தினசரி உபயோகப்படுத்தும் பழமொழிகளில் கூறப்படுகின்றன. "உள்ளூர் பெண்ணும் வெளியூர் மண்ணும் ஆகாது"  என்று என் தாத்தா அடிக்கடி கூறுவார். இதற்கு அர்த்தம் என்று அவர் கூறியது இது தான்: உள்ளூரில் பெண் எடுத்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு என்று வரும் பொழுது உடனேயே அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று விடுவாளாம். மேலும் உள்ளூர் என்பதால் அவள் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீடு சென்றது அனைவருக்கும் தெரிந்து விடுமாம். அதுவே வெளியூரில் இருந்து எடுத்த பெண்ணாக இருந்தால் அவ்வளவு சுலபமாக தூரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்குச் செல்ல முடியாது; துணை யாரும் இன்றி பெண்கள் வெகு தூரம் பயணம் செய்ய பயப்படுவார்கள். அதனால் பிரச்சனைகளை அனுசரித்துக் கொண்டு கணவன் வீட்டிலேயே இருப்பார்கள். அதனால் உள்ளூரில் பெண் எடுப்பதை விட வெளியூரில் பெண் எடுப்பதே சரியானது.

மண்ணும் பெண்ணும் 

             அடுத்து, வெளியூர் மண் (நிலம்) என் வேண்டாம்? வெளியூரில் நிலம் வாங்கினால் அது நம்முடைய பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாமல் இருக்க நேரிடும். வெளியூர் நிலத்தைப் பராமரிக்க நாம் வேறு யாருடைய உதவியையாவது கேட்க வேண்டி இருக்கும். அந்த நிலத்தினால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போவதற்கும், சில பிரச்சனைகளை சந்திப்பதற்கும் வேண்டி வரலாம். அதனால் தான் வெளியூரில் நிலம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். 

             "உள்ளுரில் பெண்ணும் வெளியூரில் மண்ணும் ஆகாது" என்பது சரியான அறிவுரை தானே!


#அறிவுரை #பழமொழி 

Tuesday, July 14, 2015

சனிக் கிழமைகளில் காகத்திற்கு உணவு அளிப்பதும் - உடல் ஆரோக்கியமும்!

                      சனிக் கிழமைகளிலும் அமாவாசை நாட்களிலும் காகத்திற்கு உணவு வைப்பது என்பது நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த நல்ல பழக்கங்களில் ஒன்று. அமாவாசை நாட்களில் இறந்த நமது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகக் காகங்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது. சனிக் கிழமைகளில் சனி பகவானின் அருளைப் பெறுவதற்காக, காகத்திற்கு உணவு அளிக்கப் படுகிறது. சனி பகவானின் வாகனம் காகம்; நமது இந்து சாஸ்திரத்தில்  சனி பகவானை 'ஆயுள் காரகன்' என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, 'சனியின் அருள் இருந்தால் ஆயுள் மேன்மை அடையும்; ஆயுள் அதிகரிக்கும்' என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. ஆயுள் என்பது ஆரோக்கியத்தைச் சார்ந்த விஷயம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஒருவருக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது மருத்துவ உண்மை. 

காக வாகனத்தில் சனீஸ்வரர் 
                ஆரோக்கியம் என்பது சுற்றுச் சூழல் சார்ந்த விஷயமும் கூட. சுற்றுபுறத் தூய்மை நன்றாக இருக்கும் இடத்தில் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். காகங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கும் பணியைச் செய்பவையாகும். (அதனால் தான் காக்கைகளை 'சுத்தம் செய்யும் பறவைகள்' - Scavenger Birds என்று அழைக்கிறார்கள்.) நமது வீட்டைச் சுற்றியிருக்கும் குப்பைகள், மற்றும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றைத் தனது உணவாக்கிக் கொள்ளும் தன்மை காகங்களுக்கு உள்ளது. வாரம் ஒருமுறை உணவு வைக்கப்படும் வீடுகளைச் சுற்றிக் காகங்கள் திரிந்து கொண்டே இருக்கும்.

காகங்களுக்கு அளிக்கப் படும் உணவு 
                           தனக்கு வைக்கப் படும் உணவையும் தனியாக உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து வந்து சாப்பிடுபவை காகங்கள். அவை உணவைச் சாப்பிட்டுவிட்டு, சுற்றுப்புறத்தில் இருக்கும் அழுக்குகளையும் சாப்பிட்டுச் சுத்தப்படுத்துகின்றன. காகங்கள் திரிந்து கொண்டே இருக்கும் வீடுகளின் சுற்றுபுறம் தூய்மையாக இருக்கும். இதனால் அந்த வீட்டில் வாழும் மனிதர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது. ஆயுளும் காக்கப் படுகிறது. வாரம் ஒரு முறையாவது உணவு அளிக்கப் படுவதால் காக்கை இனமும் காக்கப் படுகிறது.
                 
             அறிவியல் பூர்வமான விளக்கங்களாக சொல்லப்படாமல், மத நம்பிக்கையாக, குறிப்பால் உணர்த்தப் பட்டிருக்கும் உன்னதமான ஒரு பழக்கத்தைத் தான் நாம் இன்றளவும் கடைப்பிடிக்கிறோம்.

 #சனி #சனி பகவான் #ஆரோக்கியம் 

Friday, May 15, 2015

திருமாலின் தசாவதாரமும் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் பகுதி-2 (Thirumal's Dasavathaaram and the Theory of Evolution Part-2)

              திருமாலின் முதல் ஐந்து அவதாரங்களை முதல் பகுதியில் பார்த்தாயிற்று. அதன் தொடர்ச்சி இந்தக் கட்டுரை.

             6. பரசுராம அவதாரமாகிய குகைகளில் வாழ்ந்த மனிதன் என்னும் நிலை:

                 திருமாலின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம் ஆகும். இந்து புராணத்தின் படி இவர் ஜமத்கனி என்ற முனிவரின் மகனாகப் பிறந்து, தனது தந்தையின் உத்தரவின் படி ஒழுக்கத்தில் சிறு தவறு செய்த தனது தாயைக் கொன்று, பிறகு தனது தந்தையிடம் வரம் வாங்கித் தாயை உயிர்ப்பிக்க வைத்தார்.

பரசுராம அவதாரம் 
    பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் படி, பரசுராம அவதாரம் என்பது குகைகளில் மறைந்து வாழ்ந்த மனிதன் என்ற நிலை. குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் மிருகங்களின் தோலை உடையாகப் பயன்படுத்தினர். கூரான ஆயுதங்களைத் தற்காப்புக்காகவும் வேட்டையாடவும் பயன்படுத்தினர்.

பரசுராமரின் உருவ அமைப்பு 
                     பரசுராமரின் உருவ அமைப்பும் தாடி, மீசையும் கூரிய ஆயுதங்களும் கொண்டு குகைகளில் வாழ்ந்த மனிதன் என்னும்படியாகவே இருக்கிறது. மேலும் இவர் சாகா வரம் பெற்றவர் என்று குறிப்பிடப்படுகிறார். இன்றும் பழங்குடி இனங்கள் சில இதே போன்ற தோற்றம் கொண்டவர்களாக இருப்பதையே இந்து புராணம் 'சாகா வரம்' என்று குறிப்பிடுகிறது.


              7.  ராம அவதாரம் என்னும் 'வில் அம்பு கொண்டு வேட்டையாடி வாழ்ந்த மனிதன்' என்னும் நிலை:

                 புராணத்தின் படி ராம அவதாரம் திருமாலின் ஏழாவது அவதாரமாகும். ராமர் அயோத்தி என்ற நகரத்தில், தசரதன் என்ற அரசருக்கும் கோசலை என்ற அரசிக்கும் முதல் மகனாகப் பிறந்தவர்.

ராமரின் உருவ அமைப்பு 

               வில் வித்தையில் சிறந்தவராக இருந்து, ராவணன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்று தர்மத்தை நிலைநாட்டியவர். ராமரின் உருவ அமைப்பு, வில் அம்புடன் கூடிய  மனிதனின் தோற்றமாக இருக்கிறது.



               குகைகளில் வாழ்ந்த மனிதன் தனக்குக் கிடைத்த உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தான். பரிணாம வளர்ச்சியில் தனது வாழ்வாதாரத்திற்குத் தேவையான உணவை வேட்டையாடி உண்ணும் நிலையை மனிதன் அடைந்ததையே ராமரின் உருவ அமைப்பு காட்டுகிறது.

                        8. பலராம அவதாரமாகிய 'கையில் ஏர் பிடித்த விவசாயி' என்னும் நிலை:

                           பலராமர் மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம் ஆவார். இவர் பகவான் கிருஷ்ணருக்கு அண்ணனாக, மன்னர் வசுதேவருக்கும் அரசி தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர். அவர் தனது அவதாரத்தில் தேனுகன், பிரலம்பன் என்ற அசுரர்களை அழித்து மாவீரராக வாழ்ந்து தருமத்தை நிலை நாட்டினார்.

பலராம அவதாரம் 
                          பலராமரின் உருவ அமைப்பு கையில் ஏர் பிடித்து நிற்கும்படி அமைந்துள்ளது. இது பரிணாம வளர்ச்சியின் முக்கியமான கட்டமாகிய 'விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன்' என்னும் நிலையைக் குறிக்கிறது.

பலராமரின் உருவ அமைப்பு 
                    விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனிதன் அதன் பின்னர் விவசாயம் செய்து வாழ ஆரம்பித்தான். தனது வாழ்வாதாரத்திற்குத் தேவைப்படும் தானியங்கள் முதலியவற்றைத் தானே விளைவித்தும், வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு போன்ற விலங்குகளை வளர்த்தும் வாழ்ந்த மனிதனையே பலராம அவதாரம் குறிக்கிறது.
           
   9. ஸ்ரீகிருஷ்ண அவதாரமாகிய 'சமூக அமைப்பில் சுகபோகங்களுடன் வாழ்ந்த  மனிதன்' என்னும் நிலை:

             ஸ்ரீகிருஷ்ண அவதாரம் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாவார். இவர் மன்னர் வசுதேவருக்கும் அரசி தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர். தனது அவதாரத்தில் தனது தாய்மாமனான கம்சனை வதம் செய்தார். மேலும் நரகாசுரனை வதைத்து தருமத்தை நிலைநாட்டிய நிகழ்வையே நமது பாரதத் திருநாட்டில் 'தீபாவளி' என்ற பண்டிகையாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.
துவாபர யுகத்தின் முடிவு கிருஷ்ண அவதாரத்தில் தான் நடந்தது. மகாபாரதப் போரில் தருமத்தின் பக்கம் ஒற்றை ஆளாக நின்று ஆதரித்து வெற்றியைக் கொடுத்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்.
கிருஷ்ணர் 
       கிருஷ்ணரின் உருவ அமைப்பு சர்வ அலங்காரத்துடன் கூடிய ஒரு மனிதனின் தோற்றமாகும். 'உலகின் அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து வாழ்ந்த மனிதன்' என்ற நிலையையே கிருஷ்ண அவதாரம் குறிக்கிறது.

கிருஷ்ணரின் உருவ அமைப்பு 
                     இந்து மதத்தில் கிருஷ்ணர் தனிப்பெரும் கடவுளாகக் கருதப்பட்டுக் கொண்டாடப் படுகிறார். உலகில் துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கக் காரணமாக கிருஷ்ணர் விளங்கினார். உலகெங்கும் இவருக்குத் தனியாகக் கோவில்கள் காணப் படுகின்றன.

                 10. கல்கி அவதாரம்:
                         
                     திருமாலின்  பத்தாவதும் கடைசியுமான அவதாரம் இந்தக் கல்கி அவதாரமாகும். கல்கி அவதாரம் இனி தான் நிகழ இருக்கிறது என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். கலியுகத்தில் அதர்மம் அதிகரித்து, தர்மத்திற்கு சோதனையான காலம் ஏற்படும் போது கல்கி அவதாரம் நிகழ்ந்து அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலை நாட்டப்படும் என்று தசாவதாரம் கூறுகிறது.

கல்கி அவதாரம் 
                         கல்கி அவதாரத்தின் உருவ அமைப்பு வெள்ளை நிறக் குதிரையில் கையில் வாள் கொண்டுள்ள ஒரு போர் வீரனின் வடிவமாக இருக்கிறது. பரிணாம வளர்ச்சித் தத்துவத்தில் இது குறிக்கும் மனிதனின் நிலை என்ன என்று யூகிக்க முடியவில்லை.

                          திருமாலின் ஒவ்வொரு அவதாரமும் பரிணாம வளர்ச்சியின் ஒரு நிலை தான்.


#தசாவதாரம் #பரிணாம வளர்ச்சி #தத்துவம் #Theory of evolution 

Monday, April 6, 2015

திருமாலின் தசாவதாரமும் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் (Thirumaal's Dasaavathaaram and the Theory of Evolution)

           இந்து சமயத்தின் பிரதான கடவுள்கள் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் பிரம்மா, மஹாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆவார்கள். இவர்களில் மஹாவிஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால் இதுவரை ஒன்பது அவதாரங்கள் எடுத்திருப்பதாகவும் பத்தாவது அவதாரமாக 'கல்கி' என்ற அவதாரத்தைக் கலியுகத்தில் எடுப்பார் என்றும் வேதங்கள் கூறுகின்றன. அதனால் திருமாலுக்கு 'தசாவதார மூர்த்தி' என்று பெயரிட்டுள்ளனர் இந்துக்கள். இந்தப் பத்து அவதாரங்கள் என்பவை வரிசையாக: மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்களாகும். இந்தப் பத்து அவதாரங்களும் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு நிலைகளாக அமைந்திருக்கின்றன. ஒரு செல் உயிரினத்தில் ஆரம்பித்து ஆறறிவு பெற்ற மனிதன் வரையிலான பரிணாம வளர்ச்சியையே இந்து மதத்தில் 'திருமாலின் பத்து அவதாரங்கள்' என்று இந்து மதம் குறிப்பதாக உள்ளது.

திருமாலின் பத்து அவதாரங்கள் 
  1. மச்ச அவதாரமாகிய மீன் நிலை:
         பத்து அவதாரங்களிலும் முதன்மையான அவதாரம் இந்த மச்ச அவதாரம். சோமுகாசுரன் என்ற அசுரன் நான்கு வேதங்களையும் கடலில் வீச, வேதங்களைக் காக்க மச்சமாக (மீன்) அவதரித்தார் திருமால்.

மச்ச அவதாரம் 

                          மனித சிருஷ்டிக்கு அடித்தளமாக விளங்குபவை வேதங்கள் தான். உயிர்கள் படைக்கப் படுவது தொடர்வதற்காக முதன்முதலில் மீனாக அவதரித்தார் திருமால். 

மச்ச அவதார அமைப்பு 

             டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் உலகின் முதல் உயிர் நீரில் இருந்தே தோன்றியதாகக் கூறுகிறது. 'நீர் வாழ்வன' இனமான மீனாக மகாவிஷ்ணு முதல்  அவதாரம் எடுத்ததன் மூலம் பரிணாம வளர்ச்சித் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

        2. கூர்ம அவதாரமாகிய ஆமை நிலை:

கூர்ம அவதாரம் 
     ஒரு முறை தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டிப் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முயற்சி செய்தனர். அப்போது திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, அந்த முயற்சிக்கு உதவி செய்தார். 
                   
கூர்ம அவதாரச் சிலை
            ஆமை என்பது நீர், நிலம் இரண்டிலும் வாழக் கூடியது.  பரிணாம வளர்ச்சியில் 'நீர் வாழ்வன' இனத்திலிருந்து 'நீர், நில வாழ்வன' இனத்திற்கு உயர்ந்த வளர்ச்சி நிலையை உணர்த்துகிறது.

         3. வராக அவதாரமாகிய பன்றி நிலை:
                   
வராக அவதாரம்
                  வராக (பன்றி) அவதாரம்  மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாகும். இரண்யாட்சகன் என்னும் அசுரன் பூமிப்பரப்பை சமுத்திரத்திற்குள் தூக்கி எறிந்துவிட்டு பாதாளத்தில் ஒளிந்து கொண்டான். மகாவிஷ்ணு பன்றியாக உருவம் எடுத்துப் பாதாளம் சென்று இரண்யாட்சகனுடன் போரிட்டு உலகத்தைக் காப்பாற்றினார்.

வராக அவதாரம் சிலை 
                    பன்றி என்பது நிலத்தில் வாழும்  உடையது.  பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் பொறுத்தவரை 'நீர் மற்றும் நில வாழ்வன' என்ற நிலையிலிருந்து 'நில வாழ்வன' என்ற நிலைக்கு உயர்ந்ததை வராக அவதாரம் குறிக்கிறது.

     4. நரசிம்ம அவதாரமாகிய மிருகமும் மனிதனும் சேர்ந்த நிலை:

                நரசிம்ம அவதாரம் திருமாலின் நான்காவது அவதாரமாகும். அது உடலின் மேல்பாதி சிங்கமும் இடுப்புக்குக் கீழே மனித உருவமும் கொண்ட அவதாரமாகும். 'பிரகலாதன்' என்ற தனது சின்னஞ்சிறு பக்தனைக் காக்க, அவனது தந்தையும் அசுர குலத்தின் அரசனுமான 'இரணியன்' என்ற அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநிறுத்திய அவதாரமே நரசிம்ம அவதாரமாகும்.

நரசிம்ம அவதாரம் 

              பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் பொறுத்த வரை 'நில வாழ்வன' இனத்தில் சிறிய விலங்கினமான (பன்றி) வராக இனத்தில் இருந்து அதன் மேல் நிலையான சிங்க இனத்திற்கு மாறி, பின்னர் மனிதனாக மாற ஆரம்பித்த நிலையைக் குறிப்பதே நரசிம்ம அவதாரமாகும்.

நரசிம்ம அவதாரம் சிலை 
                         பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியமான நிலையான மனித இனம் தோன்றுதல் இந்த அவதாரத்தில் இருந்து ஆரம்பிப்பதால் நரசிம்மர் பல இடங்களில் தனிப் பெரும் கடவுளாகக் கருதப்படுகிறார்.

     5. வாமன அவதாரமாகிய 'குள்ள மனிதன்' என்னும் நிலை:

                   வாமன அவதாரம் என்பது நான்கு அடி உயரம் உடைய குள்ள மனிதன் என்ற நிலை ஆகும். 

வாமன அவதாரம் 
                     தசாவதாரத்தில் இது ஐந்தாவது அவதாரமாகும். இந்த அவதாரத்தில் 'மகாபலி' என்ற  அசுரர் குலச் சக்கரவர்த்தி செய்த யாகத்திற்கு தானம் வாங்கும் பிராமணராய் வந்து மூன்று அடி நிலத்தைத் தானமாக வேண்டினார் மகாவிஷ்ணு. 

வாமன மூர்த்தி 
                        பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்த நிலையில் பூமியை ஒரு அடியாகவும் வானத்தை ஒரு அடியாகவும் அளந்து, மூன்றாவது அடியை மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனுக்கு முக்தி கொடுத்து தருமத்தை நிலை நாட்டினார் திருமால் என்னும் மகாவிஷ்ணு.

வாமன அவதாரம் சிலை 

                   பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் படி விலங்கு நிலையில் இருந்து மனித நிலைக்கு முழுவதுமாக மாறிய நிகழ்வுதான் வாமன அவதாரம். நரசிம்ம அவதாரத்தில் விலங்கும் மனிதனும் சேர்ந்த நிலை இருந்தது. வாமன அவதாரத்தில் முழு மனிதனாக மாறிய நிலை வந்து விட்டது.
 
படங்கள்: www......
Pictures Courtesy: www......

          (மீதமுள்ள ஐந்து அவதாரங்கள் அடுத்த பதிவில் தொடரும்.) 

#தசாவதாரம் #பரிணாம வளர்ச்சித் தத்துவம் #TheoryofEvolution


Thursday, February 5, 2015

சூரியனின் ஏழு குதிரைகளும் ஒளியின் ஏழு நிறங்களும்.

         இந்து மதத்தில் சூரியனை இறைவனாகவும், நவக்கிரகங்களில் முதல் கிரகமாகவும் வைத்து வழிபாடு செய்கிறார்கள். அவரே வெப்பம் மற்றும் ஒளியின் கடவுள். இந்து மத நம்பிக்கையில் சூரிய பகவானின் வாகனமாக ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏழு குதிரைகள் உடைய ரதத்தில் சூரிய பகவான் 
     பழைய கோவில்களில் சூரிய பகவானுக்கென்று தனி சன்னிதி அமைக்கப்பெற்று அதில் அவர் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இருப்பது போல் சிலைகள் அமைக்கப் பட்டிருப்பதைப் பார்க்கின்றோம்.


             
                   இந்த ஏழு குதிரைகள் எதற்கு? ஒரு குதிரை போதாதா? இதில் ஒளியின் தத்துவத்தை ஒளிக் கடவுளின் சிலை வடிவமைப்பில் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சூரியனின் ஒளி வெள்ளை நிறமுடையது. உண்மையில் வெள்ளொளி என்பது ஏழு நிறங்களின் தொகுப்பே. அவை  - ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு (VIBGYOR - Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red) ஆகியவையே.


Dispersion of light in a glass prism 

ஏழு  நிறங்களாகப் பிரியும் வெள்ளை ஒளி 

        Prism எனப்படும் பட்டகத்தில் வெள்ளொளி உட்புகும் போது அது ஏழு வண்ணங்களாகப் பிரியும். வானவில்லின் தத்துவமும் அதுவே. மழை பெய்யும் போது மழை நீர் பட்டகம் போல் செயல் பட்டு வெள்ளொளியை ஏழு வண்ணங்களாகப் பிரிக்கிறது. அதாவது வானவில்லில் தோன்றும் ஏழு வண்ணங்களும் வெள்ளை ஒளியில் இருக்கும் ஏழு வண்ணங்களாகும்.  

வானவில்லின் ஏழு வண்ணங்கள் 

              வெள்ளை நிறத்தை வழங்கும்  ஒளிக் கடவுளான சூரிய பகவானுக்கு ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரை வடிவமைத்ததன் மூலம் 'வெள்ளொளியில் இருக்கும் ஏழு வண்ணங்கள்' தத்துவம் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. இது நமது முன்னோர்களால் கோவில்களில் பாதுகாத்து வைத்துச் செல்லப்பட்ட  அறிவியல்.


#சூரியன் #சூரிய பகவான் #VIBGYOR #ஏழு குதிரைகள் 

Saturday, January 3, 2015

Manager or the Resources? (வளங்களா? நிர்வாகியா?) வெற்றி பெற்றவன் தேர்வு செய்தது எதை?

        புராணங்களில் வரும் நிகழ்வுகள் கதைகளாகக் கூறப்படும் போது அந்தக் கதைகளில் வரும் தத்துவங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது கதைகளைச் சொல்பவர்கள் கைகளிலும் இருக்கிறது; நம்முடைய புராணக் கதைகளும் நிர்வாக மற்றும் மேலாண்மைத் தத்துவங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுத்துக் கூறுபவை தான். நிர்வாகவியலில் வளங்களும் (Resources) அவற்றை முறையாக நிர்வகிக்க நிர்வாகிகளும் (Manager) இன்றியமையாத விஷயங்கள். ஒரு நிறுவனம் வெற்றி பெற இரண்டுமே சிறப்பாக இருத்தல் அவசியம். போர்க்களத்தைப் பொறுத்தவரை படைபலம் தான் வளம்; படையை நடத்திச் செல்லும் தளபதிதான் நிர்வாகி.

       மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் யுத்தம் மூள்கிறது. இரு தரப்பிற்கும் பொதுவாக இருக்கும் கிருஷ்ணனிடம் உதவி கேட்கச் செல்கிறார்கள். பாண்டவர் தரப்பின் அர்ஜுனனும் கௌரவர் தரப்பின் துரியோதனனும். (கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருக்க, துரியோதனன் தலைப் பக்கமும் அர்ஜுனன் கால் பக்கமும் அமர்ந்த கதை வேறு - அது நமக்குத் தெரிந்ததே!)

         
              கிருஷ்ணன் அவர்கள் இருவரிடமும் பேசிய Deal தான் இங்கே முக்கியம். "ஒரு புறம் எனது படைபலம் - உலகின் மிகச் சிறந்த படைகளுள் ஒன்று. பல்லாயிரம் பயிற்சி பெற்ற வீரர்கள், குதிரை, யானை, ரதங்கள், அவர்களுக்கான சிறப்பாகப் பராமரிக்கப் பட்ட ஆயுதங்கள், இத்யாதிகள்; மறுபுறம் நிராயுதபாணியாக நான் மட்டுமே. இப்போது நீங்கள் இருவரும் உங்களுக்கு எது வேண்டுமென்று தேர்வு செய்யுங்கள்." என்று கூறுகிறார்.



              "What do you want? A very good resource - or an eminent, excellent, extraordinary manager? Choose between the two." துரியோதனன் படைபலத்தை, அதாவது வளங்களைத் (Resources) தேர்வு செய்கிறான்; அர்ஜுனன் தேர்வு செய்வது ஸ்ரீ கிருஷ்ணனை - சிறந்ததொரு நிர்வாகியை (Manager).


           இறுதியில் போரில் ஜெயித்தவர்கள் யார் என்பதும் அது ஸ்ரீ கிருஷ்ணரால் மட்டுமே சாத்தியப்பட்டது என்பதும் மகாபாரதம் அறிந்த அனைவருக்குமே தெரியும். இதில் மெய்ஞ்ஞானம் கூறுவது "புற  உலகத்தில் எது இருந்தாலும் அதை இயக்குபவன் இறைவன்; அந்த மெய்ஞ்ஞானம் கிடைத்து விட்டால் வெற்றி பெரும் மார்க்கமும் உனக்குப் புலப்படும். வெற்றியும் பெறுவாய்" என்பதே. 
        நிர்வாகவியல் தத்துவம் "வளங்கள் வளங்கள் தான்; சிறப்பான நிர்வாகியே வெற்றிக்கு வழி வகுப்பவன். (Resources are resources; It is with the good manager to utilize and succeed.)" 
#மனித வளம் #மேலாண்மை #மேலாளர் #கிருஷ்ணர் #அர்ஜுனன்