Friday, May 27, 2016

ஆயில்யம் நட்சத்திரப் பெண்கள் மாமியாருக்கு 'ஆகாதவர்கள்' இல்லை!

      தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் பார்க்கும் பெற்றோர் சில பெண்களை நட்சத்திரத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து நிராகரித்து விடுகிறார்கள். ஆயில்யம் நட்சத்திரம் அவற்றுள் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. "ஆயில்யம் நட்சத்திரப் பெண் மாமியாருக்கு ஆகாது" என்ற ஒரு பழமொழி(?)க்கான பாதி அர்த்தத்தை வைத்துக் கொண்டு முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் தவறாக அர்த்தம் கொள்ளப் படும் பழமொழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆயில்யம் நட்சத்திரப் பெண்களைப் பற்றி ஜோதிட நூல்கள் எதிலும் தவறாகக் கூறப்படவில்லை.

         ஆயில்யம் நட்சத்திரம் புதனின் நட்சத்திரம். புதன் நுண்கலைகள், கணிதம், தர்க்க வாதம் (லாஜிக்காகப் பேசுவது), சிறந்த கல்வி இவற்றுக்கெல்லாம் அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கலைகள், கணிதம், கல்வி போன்றவற்றில் இயற்கையாகவே திறமை உடையவர்களாக இருப்பார்கள். 

    'Creative Arts' எனப்படும் படைப்புக் கலைகளில் ஒன்றான சமையல் கலையில் ஆர்வம் மிக்கவர்களாகவும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்; வீட்டை அழகாகப் பராமரிப்பார்கள்; குடும்பத்தின் கணக்கு வழக்குகளில் ஆர்வம் காட்டுவார்கள்;  கேள்வி கேட்பார்கள். இந்தப் பெண்ணின் திருமணத்திற்கு முன் இந்த உரிமைகள் எல்லாம் அவள் மாமியாரின் கையில் அதுவரை இருந்திருக்கும்.  






     ஆகவே ஆயில்யம் நட்சத்திரப் பெண்கள் சமையலறை உரிமையை எடுத்துக் கொள்வது, கணக்கு வழக்குகளில் கேள்வி கேட்பதெல்லாம் மாமியாருக்குப் பிடிக்காது. ஆகவே "ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணைக் கண்டாலே மாமியாருக்கு ஆகாது (பிடிக்காது)" என்ற கருத்து தான் இவ்வாறு வேறு ஒரு தவறான அர்த்தத்தைக் கொடுக்கிறது. 


      இதற்குப் பரிகாரம் சொல்வதாக ஒன்றைச் சொல்லுவார்கள். "மாமியார் இல்லாத வீட்டிலே கொடுத்தால் இந்தப் பெண்கள் மகாராணியாக வாழ்வார்கள்" என்பார்கள். அதுவும் உண்மை தான். குடும்பத்தின் தலைமையை ஏற்று நடத்த ஒரு பெண் இல்லாத வீட்டிற்கு இந்த நட்சத்திரப் பெண்கள் கிடைப்பது அவர்களுக்கும் அதிர்ஷ்டம்; அந்தப் பெண்ணுக்கும் அதிர்ஷ்டம் தான். 


         இது போன்ற தவறான கருத்துக்களால் தாமதத் திருமணம் இந்த நட்சத்திரப் பெண்களுக்கு நடக்கின்றன. இருந்தாலும் மன வலிமையோடு இவர்கள் இருக்கக் காரணம் ஆயில்யம் நட்சத்திரம் அமைந்திருக்கும் ராசி கடகம். அந்த ராசியில் இருக்கும் சந்திர பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் மன உறுதி மிக்க பெண்களாக இவர்களைப் படித்திருக்கிறார் இறைவன். அவர் படைப்பில் அனைத்திற்கும் அர்த்தம் உண்டு.

#ஆயில்யம்நட்சத்திரம், #வரன், #மாமியார் 

Wednesday, April 13, 2016

துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 


தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

         அனைவருக்கும் பூந்தோட்டத்தின் துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வியாழக்கிழமை பிறக்கும் இந்த ஆண்டு  குரு அருளும் திரு அருளும் பெற்ற சிறந்த ஆண்டாக இருக்க இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இந்த ஆண்டின் ராஜாவாக சுக்கிரன் இருப்பதால் விவசாயிகளுக்குப் பொன்னான ஆண்டாகவும், மந்திரியாகவும் சேனாதிபதியாகவும் புதன் பதவி வகிக்கப் போவதால் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நல்ல ஆண்டாகவும் இருக்கும். சுபம்!

#துன்முகி #துர்முகி #புத்தாண்டுவாழ்த்துக்கள்

Monday, March 28, 2016

ஜோதிடம் - அர்த்தமும் விளக்கமும்.

             ஜோதிடம் என்பது பலரும் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நேரங்களில் பார்க்க நினைக்கும் விஷயம். ஒருவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு, அப்போது இருந்த கிரக நிலைகளை ஆராய்ந்து தற்கால பலன்களை ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது மட்டுமே ஜோதிடம் என்று நினைத்தால் அதில் உண்மை இல்லை. வானில் உலவும் கிரகங்களை மட்டுமே வைத்துப் பலன் கூறுவது மட்டுமே ஜோதிடம் இல்லை. அந்தக் கலையின் (அல்லது அறிவியலின்) பெயர் வான சாஸ்திரம் அல்லது வானவியல் அல்லது வானியல் ஆரூடம்.  இன்றைய நவீன வானவியல், செயற்கைக் கோள் துணை கொண்டு ஆராய்ந்து கூறும் அதே விஷயங்களை இந்து மதம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கி விட்டது. 

அறிவியல் காட்டும் கிரகங்களின் அமைப்பு 

இந்துக் கோவில்களின் நவகிரக அமைப்பு 

                       சரி. இப்போது நாம் கூற வருவது அது அல்ல. ஜோதிடம் என்றால் என்ன என்பதைத் தான் நாம் விளக்க முற்படுகிறோம். நாம் மேலே பார்த்த வான சாஸ்திரம் ஜோதிடத்தின் ஒரு பகுதி மட்டுமே. வான சாஸ்திரம் போலவே - சகுனங்கள், உடற்கூறு லட்சணம், தீர்க்க தரிசனம், வாஸ்து சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம், மருத்துவம், வானிலை, பட்சி சாஸ்திரம் என்று பல பிரிவுகளை உள்ளடக்கியது தான் ஜோதிடம் என்னும் க(டல்)லை. ஒரு தேர்ந்த ஜோதிடரிடம் மேற்கண்ட அனைத்து விஷயங்களிலும் தன்னை நாடி வரும் மனிதர்களின் சந்தேகங்களுக்கு விடைகள் இருந்தன. 

ஜோதி

                        'ஜோதி இருக்கும் இடம்' என்பதையே 'ஜோதிடம்' என்று அந்தக் கால மக்கள் அழைத்தனர். சில கேள்விகளும் சந்தேகங்களும் ஒருவரை இருளில் வைத்திருக்கும் போது ஒளி என்னும் ஜோதியைத் தேடிச் செல்லும் வேலையைத் தான் 'ஜோதிடம் பார்த்தல்' என்று அழைத்திருக்கிறார்கள். பொதுவாக இருட்டில் இருக்கும் மக்கள் தான் ஜோதியைத் தேடிச் செல்ல வேண்டும். ஜோதி அவர்களைத் தேடி வராது. 
             
            (ஆனால் இன்றைய ஜோதிடம் நவீனமாகி, தன்னுடைய இதர பிரிவுகளை இழந்து வான சாஸ்திரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. உடல் கூற்றியல், வான சாஸ்திரம், மருத்துவம் என்று அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையே.)


#jothidam, #ஜோதிடம் #தமிழ்ஜோதிடம் 

Monday, March 21, 2016

நூல் அறிமுகம் மற்றும் மதிப்புரை



புத்தகத்தின் பெயர் : அறிவியல் பூர்வமான இந்து சமயம்.

ஆசிரியர்                      :  Er. N. P. A. ரவி, சேலம்.


       
             'அறிவியல் பூர்வமான இந்து சமயம்' ஒரு ஆய்வு நூல். இந்தப் புத்தகம் இந்து மதக் கோட்பாடுகளை அணுவியல் (Atomic Science) அடிப்படையில் ஆராய்ந்து, தக்க உருவகங்களுடன் ஒருங்கிணைத்து எழுதப்பட்ட நூலாகும். இந்து சமயத்தின் முதன்மைக் கடவுள்களான பிரம்மா, மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய கடவுள்களை முறையே புரோட்டான் (Proton), நியூட்ரான் (Neutron) மற்றும் எலெக்ட்ரான் (Electron) ஆகிய அணுக்கூறுகளாக (Subatomic Particles) ஆய்ந்தறிந்து கூறியிருக்கிறார். அதற்கான விளக்கங்கள் மற்றும் அறிவியல் பலுக்கல்களைப்  (Scientific Interpretations) புத்தகத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். இந்த மூன்று பெரும் கடவுள்களின் துணைவிகளாகிய சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் பார்வதி ஆகிய கடவுள்களும் அணுவியல் கோட்பாடுகளின் மற்ற அம்சங்கள் என்பதையும் புத்தகம் விளக்குகிறது. இந்துக்கள் வணங்கும் பிற தெய்வங்களாகிய விநாயகர், முருகர், ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பன் ஆகிய கடவுள்களுக்கான அணுவியல் விளக்கங்களும் அவற்றை ஆசிரியர் கையாண்டிருக்கும் முறையும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
                     
                 'இந்து' என்ற பெயர் வானவியல் அடிப்படையில் நிலவினைக் குறிக்கிறது என்பதையும் இந்துக்கள் அனைவரும் நிலவு என்னும் ஒரே அன்னையின் பிள்ளைகள் என்பதையும் இந்தப் புத்தகம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அந்த விதத்தில் சகோதரத்துவத் தத்துவம் இந்து மதத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது உலகிற்குச் சொல்லப் பட்டுள்ளது. 

                         திருப்பதி திருமலைக் கோவிலின் வரலாறு, அந்த வரலாற்றின் அறிவியல் அர்த்தம் ஆகியவை நூலில் அற்புதமாகக் கூறப்பட்டுள்ளன. அவை திருப்பதி தேவஸ்தானத்தினரால் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டும் இவ் ஆய்வு நூலினை 1௦௦௦ பிரதிகள் என்ற எண்ணிக்கையில் அச்சிட நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

                       இந்நூலில் சிதம்பரம் கோவிலின் வரலாறு, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் அனைத்தும் விளக்கப் பட்டுள்ளன. தமிழில் இப்படி ஒரு ஆய்வு நூல் வெளியாகி இந்து சமயத்தின் அணுவியல் கருத்துக்கள் தமிழில் பதிவாகி இருப்பது அற்புதம். 

                        நூலின் ஆசிரியர் ஒரு கட்டிடப் பொறியாளர். ஆய்வு நூல் என்பதால் ஆசிரியர் 'அறிமுக எழுத்தாளர்' என்கிற வட்டத்திற்குள் வரவில்லை. அறிவியல் அறிக்கை போல் இல்லாமல் சாதாரண உரைநடையாகவே புத்தகம் படிக்க சுவாரசியமாகச் செல்கிறது. 


#இந்துமதம் #இந்துமதத்தில்அறிவியல் #அணுவியல்


Friday, December 4, 2015

தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு ஏன்?

  நமது நடைமுறையில் பொதுவாக அஷ்டமி திதி அமையும் நாட்களை சுபகாரியங்களுக்குத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவார்கள். 'அஷ்டமியில் தொடங்கினால் கஷ்டத்தில் முடியும்'  என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று கொஞ்சம் விபரம் அறிந்தவர்களிடம் கேட்டால் ஒரு விஷயத்தைக் கூறுவார்கள். 'அஷ்டமி அன்னைக்கு எல்லா சாமியும் சிவனைக் கும்பிடப் பொய் விடுவார்கள். நாம் நல்ல காரியம் செய்யும் பொது எந்த தெய்வத்தைத் துணைக்கு அழைத்தாலும் அவர்களால் நமக்கு நன்மை செய்ய வர முடியாமல் போய் விடும்.' என்று கூறுவார்கள். இது ஒரு பக்கம் என்றால் அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் தீராத வினையும் தீர்ந்து விடும் என்கிறார்கள். 

   எல்லா சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக, வடகிழக்கு மூலையான ஈசான்ய மூலையில், நாயைத் தனது வாகனமாகக் கொண்டு, நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிப்பவர் இந்த பைரவ மூர்த்தி. இவரே சிவபெருமானின் இருப்பிடமான கைலாசத்தின் காவல் தெய்வமாக அறியப்படுகிறார். பைரவரின் அனுமதியைப் பெற்றே சிவ தரிசனம் பெற யாராலும் இயலும் என்பது இந்து மத நம்பிக்கை. 


பைரவர் 
      அஷ்டமியன்று தெய்வங்கள் அனைவரும் சிவ தரிசனம் பெற வேண்டியும் சிவ பூஜை செய்ய வேண்டியும் சிவ பெருமானின் இருப்பிடமான கைலாசத்தை நோக்கி வருவார்கள். பூஜை செய்யும் வேளையில் கைகளில் ஆயுதங்களை வைத்திருப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. மேலும் பிரார்த்தனை செய்யும் வேளையில் தங்கள் சக்திகள் அனைத்தையும் களைந்து, சாமானியவர்களாக இருப்பதும் தெய்வங்கள் அனைவரும் பின்பற்றும் நியதி. அதனால் தெய்வங்கள் அனைவரும் தங்கள் கைகளில் உள்ள ஆயுதங்கள் மற்றும் தங்களிடமுள்ள சக்திகள் அனைத்தையும் காவல் தெய்வமான பைரவரிடம் ஒப்படைத்து விட்டுக் கைலாசத்திற்குள் பிரவேசிப்பார்கள். 

காவல் தெய்வம் பைரவர்
    அவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்கும் பொழுது, தெய்வங்கள் அனைத்தும் பைரவரிடம், தங்களின் அருளை வேண்டி வரும் பக்தர்களுக்கும் ஆபத்தில் தங்களைத் துணைக்கு அழைக்கும் அடியவர்களுக்கும் தங்களுடைய இடத்தில் இருந்து உதவி செய்யுமாறு வேண்டுகிறார்கள். தானும் அவ்வாறே செய்வதாக பைரவரும் ஒவ்வொரு தெய்வத்துக்கும் வாக்களிக்கிறார். அந்த வாக்கின் படி அனைத்து தெய்வங்களின் சக்தியையும் பெற்றவராகவும், எல்லா தெய்வங்களின் பிரதிநிதியாகவும் அஷ்டமியன்று பைரவர் திகழ்கிறார். அதனால் அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபடும் பயன் ஏற்படும் என்று ஐதீகமாகிறது. குறிப்பாகத் தேய்பிறை அஷ்டமிக் காலத்தில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பானதாகப் பின்பற்றப் படுகிறது. 
#பைரவர் #அஷ்டமி 

Monday, November 23, 2015

பாரதியா? வாலியா?

 


இந்த இரு வேறு கவிஞர்கள் எழுதிய, பெரும் வெற்றியடைந்த இரு வேறு பாடல்களைக் கேட்கும் போது ஒரு விஷயம் சிந்திக்க வைக்கிறது. முதலில் பாரதி: 

"விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்."
மனம் நினைத்த வேகத்தில், நினைத்த விஷயத்தை உடல் செய்து விட வேண்டும் என்கிறார்.

    கவிஞர் வாலி தனது "கண் போன போக்கிலே கால் போகலாமா?" என்ற பாடலில்
                             "மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?"
மனம் நினைத்ததையெல்லாம் மனிதன் செய்தால் என்ன ஆகும்? தோல்வி, வேதனை தான் மிஞ்சும் என்கிறார். எது சரி என்று தெரியவில்லை. கால நிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப இந்த இரண்டு கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். #வாலி #பாரதியார் .



Saturday, September 19, 2015

உள்ளூர் பெண்ணும் வெளியூர் மண்ணும் ஆகாது!

     இன்று மக்கள் சேமிப்பை விட முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். Investment Solutions என்ற பெயரில் எந்த விதமான முதலீடுகளை ஒருவர் மேற்கொள்ளலாம் என்ற அறிவுரைகள் கூறப்படுகின்றன. அனால் நமது வாழ்வியலில் முதலீடு பற்றிய அறிவுரைகள் தினசரி உபயோகப்படுத்தும் பழமொழிகளில் கூறப்படுகின்றன. "உள்ளூர் பெண்ணும் வெளியூர் மண்ணும் ஆகாது"  என்று என் தாத்தா அடிக்கடி கூறுவார். இதற்கு அர்த்தம் என்று அவர் கூறியது இது தான்: உள்ளூரில் பெண் எடுத்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு என்று வரும் பொழுது உடனேயே அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று விடுவாளாம். மேலும் உள்ளூர் என்பதால் அவள் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீடு சென்றது அனைவருக்கும் தெரிந்து விடுமாம். அதுவே வெளியூரில் இருந்து எடுத்த பெண்ணாக இருந்தால் அவ்வளவு சுலபமாக தூரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்குச் செல்ல முடியாது; துணை யாரும் இன்றி பெண்கள் வெகு தூரம் பயணம் செய்ய பயப்படுவார்கள். அதனால் பிரச்சனைகளை அனுசரித்துக் கொண்டு கணவன் வீட்டிலேயே இருப்பார்கள். அதனால் உள்ளூரில் பெண் எடுப்பதை விட வெளியூரில் பெண் எடுப்பதே சரியானது.

மண்ணும் பெண்ணும் 

             அடுத்து, வெளியூர் மண் (நிலம்) என் வேண்டாம்? வெளியூரில் நிலம் வாங்கினால் அது நம்முடைய பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாமல் இருக்க நேரிடும். வெளியூர் நிலத்தைப் பராமரிக்க நாம் வேறு யாருடைய உதவியையாவது கேட்க வேண்டி இருக்கும். அந்த நிலத்தினால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போவதற்கும், சில பிரச்சனைகளை சந்திப்பதற்கும் வேண்டி வரலாம். அதனால் தான் வெளியூரில் நிலம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். 

             "உள்ளுரில் பெண்ணும் வெளியூரில் மண்ணும் ஆகாது" என்பது சரியான அறிவுரை தானே!


#அறிவுரை #பழமொழி