Friday, September 28, 2018

கதை நேரம்! ஆண்டவன் கட்டளை

ஒரு சின்ன கதை பாக்கலாம் இன்னைக்கு.

ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்த முனிவர். அவர் ஒரு நாள் நதிக்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய எலிக்குட்டி தனியாக இருப்பதைக் கண்டார். தாய் இல்லாத அந்த எலிக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு எடுத்தார். அந்தக் குட்டி எலியைத் தனது ஆசிரமத்துக்கு எடுத்துச் சென்று தனது மனைவியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். அவர் மனைவியோ, "எனக்குப் பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும்; அதனால், நீங்கள் இந்த எலிக்குட்டியை, உங்கள் தவ சக்தியை உபயோகித்து ஒரு பெண் குழந்தையாக மாற்றிக் கொடுங்கள்." என்றார்.



           முனிவரும் அவ்வாறே செய்து கொடுக்க, அவர்கள் இருவரும் அந்த எலிக்குட்டியைத் தங்கள் மகளாக வளர்த்தனர். அவளும் வளர்ந்து திருமண வயதை அடைந்தாள். அப்போது ஒரு நாள் இரவு அவள் நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மிக அழகான அந்த நிலவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் தன் தந்தையிடம் சென்று, தன்னை அந்த நிலவுக்குத் திருமணம் செய்து வைக்கும்படிக் கூறினாள். "நிலவு மிகவும் சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது; இரவில் இந்த உலகத்திற்கு ஒளி தரும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருப்பதால், நான் நிலாவையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள். 



         "அப்படியெனில் நீ நிலாவிடமே சென்று கேள்." என்றார். அவளும் நிலாவிடம் சென்று, "இந்த உலகிலேயே நீங்கள் தான் சக்தி வாய்ந்தவராகத் தெரிகிறீர்கள். சரியா?" என்றாள். அதற்கு நிலாவோ, "எனக்கு வெளிச்சம் தருவதே சூரியன் தான். அவர் தான் என்னைவிட சக்தி வாய்ந்தவர்" என்றது. அந்தப் பெண் குழப்பம் அடைந்தாள்; நேராகச் சூரியனிடம் சென்று, "இந்த உலகிலேயே நீங்கள் தான் சக்தி வாய்ந்தவர் என்கிறார்கள். சரியா?" என்று கேட்டாள். அதற்கு சூரியனோ "எனது ஒளியும் வெப்பமும் நிறைந்த கதிர்களை மேகங்கள் மறைத்து விடுகின்றன; மேகங்கள் தான் என்னை விட சக்தி வாய்ந்தவை" என்றார்.




           அந்தப் பெண் மேகத்திடம் சென்று, "சூரியனை விட நீங்கள் சக்தி வாய்ந்தவரா?" என்று கேட்டாள். மேகமோ, "அது ஒரு விதத்தில் தான் சரி. ஏனென்றால் காற்றடித்தால் நான் பஞ்சு போல் பிரிந்து விடுகிறேன். என்னை விடக் காற்று தான் சக்தி வாய்ந்தது." என்றது. 




      பிறகு அந்தப் பெண் காற்றிடம் சென்று, "தாங்கள் மேகத்தை விட சக்தி வாய்ந்தவரா?" என்று குழப்பத்துடன் கேட்டாள். அதற்குக் காற்று, "நான் சக்தி வாய்ந்தவன் தான்; ஆனால் என் பலத்தை மலைகள் எதிர்த்து நிற்கின்றன. மலைகளே என்னை விட சக்தி வாய்ந்தவை." என்றது. பிறகு அவள் மலையிடம் சென்றாள். (சின்னப் பெண் தானே! ஆர்வக் கோளாறு வேறு.) "மலையே! நீங்கள் காற்றை விட பலமானவரா?" என்றாள். அதற்கு மலை சொன்ன பதில் தான் twist! "நான் சக்தி வாய்ந்தவன் தான். ஆனால் என் பலத்தைக் குறைப்பதற்கென்றே சில....
.
.
.
.
.
எலிகள் என் அடிவாரத்தில் இருக்கின்றன. எனக்கென்னவோ அந்த எலிகள் தான் சவாலாகவே இருக்கின்றன." என்று புலம்பியது. :-)




அவள் மலையடிவாரத்திற்குச் சென்றாள். அங்கே எலிகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவள் உடனே தன் தந்தையிடம் சென்று, "அப்பா! இந்த உலகிலேயே சக்தி வாய்ந்தவை எலிகள்தான் என்று தோன்றுகிறது. என்னை ஒரு எலிக்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள்; மேலும் என்னையும் ஒரு எலியாக மாற்றி விடுங்கள். அப்போதுதான் நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்." என்றாள்.

நம்ம கதை :-)

          முனிவருக்கும் அவர் மனைவிக்கும் அப்போது தான் இறைவனின் திருவிளையாடலே புரிந்தது. அவர் படைத்த எந்த ஒரு விஷயத்தையும் மனிதனால் மாற்ற முடியாது என்பதை உணர்ந்தவர்களாக, தங்கள் மகளை மீண்டும் எலியாக மாற்றினார்கள்.


     And they lived happily forever!

#சிறுகதை  #இறைவன்படைப்பு  #ஆண்டவன்கட்டளை #இயற்கை

நமது வலைப்பக்கத்தின் ஐம்பதாவது பதிவு இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, July 18, 2018

ஆடி 1- தேங்காய் சுடும் நிகழ்வு.

            ஆடி மாதம் தென்னிந்தியாவின் விசேஷமான மாதங்களில் ஒன்றாகும். அந்த மாதம் தெய்வ வழிபாடுகள் மிகுந்த மாதம். மகாபாரதத்தின் குரு ஷேத்திரப் போர் ஆடி மாதம் முதல் நாளில் தொடங்கி, பதினெட்டு நாட்கள் நடந்து முடிந்ததாக இதிகாசம் கூறுகிறது. தென்னகம் முழுவதிலும் உள்ள அம்மன் ஆலயங்களில் பூஜைகள் நடைபெறுவதும், பெண்கள் விரதங்கள் இருப்பதும் இந்த மாதத்தில் நடைபெறும். 
             அவற்றுள் ஒன்றாகத் தான், ஆடி ஒன்றாம் நாள் கொங்கு மண்டலத்தில் சில இடங்களில் 'தேங்காய் சுடும் நிகழ்வு' நடைபெறுகிறது. தேங்காயின் அடிப் பகுதியில் சிறு துளையிட்டு, அதிலுள்ள நீரை முதலில் வெளியேற்றி விடுவார்கள். 
துளையிடப்படும் தேங்காய் 
                 பிறகு அதே துளையின் மூலம் அவல், வெல்லத் தூள், பச்சரிசி, பாசிப் பருப்பு, வெள்ளை எள் ஆகியவற்றை உள்ளே கொட்டுவார்கள். இப்போது  தேங்காயில் இருந்து வெளியேற்றப் பட்ட தண்ணீரை மீண்டும் அதே துளையின் மூலம் உள்ளே ஊற்றிவிடுவார்கள். பின் அழிஞ்சி மரக் குச்சி ஒன்றை முனையில் சீவி இந்தத் துளையில் குத்தி விடுவார்கள்.

தேங்காய் தயார்!
                 
        பின்பு மஞ்சள், குங்குமம் வைத்து இந்தத் தேங்காயைத் தயார் செய்து, தீயில் சுடுவார்கள். 

தேங்காய் சுடுதல் 
           
         இப்படிச் சுட்ட தேங்காயை முதலில் பிள்ளையாருக்கு வைத்துப் படைத்துக் கும்பிடுவார்கள். பின் அதை உடைத்து சாப்பிட வேண்டியது தான்! 
சரி... இந்த நிகழ்வு ஆடி ஒன்றாம் தேதி ஏன் நடத்தப் படுகிறது? இது காரண காரியம் இல்லாமல் விளையாட்டாக நடப்பதில்லை. மகாபாரதப் போரில், தர்மத்தின் வெற்றிக்காக தன்னையே பலியாகக் கொடுத்த 'அரவான்' என்னும் ஒரு வீரனை நினைவில் கொள்வதற்காகத் தான் இந்த நிகழ்வு நடக்கிறது.

சுட்ட தேங்காய் 

          அரவான் - அர்ஜுனன் மற்றும் (உலுப்பி என்கிற) அரவக்கன்னி ஆகியோரின் மகன் ஆவான். ஒரு மனிதனுக்கு வேண்டிய சகல லட்சணங்களும் பொருந்தியவனாக அவன் இருந்ததால், அவனைப் போர்க்களத்துக்கு பலியாகக் கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்று பாண்டவர்களுக்குத் தெரிகிறது. ஆகவே அரவான் பலியிடப் படுகிறான். பலியிடப்படும் முன் தனது இறுதி ஆசையாக ஒன்றை அவன் கேட்கிறான். "நான் பலியிடப் படுவதால் என் தந்தைக்குக் கிடைக்கும் வெற்றியை நான் காண விரும்புகிறேன். அதனால் என் தலையை மட்டும் ஒரு உயரமான ஒரு இடத்தில் (குத்தி) வைத்து விட வேண்டும்" என்கிறான். 

அரவான் சிலை 
             
         அவனது ஆசை ஏற்கப் பட்டு, நிறைவேற்றப் பட்ட நாள் ஆடி ஒன்றாம் நாள். அதை நினைவு கூறவே ஆடி ஒன்று அன்று தேங்காயைக் குச்சியில் சொருகி, கோவிலில் வைக்கும் வழக்கம் பின் பற்றப் படுகிறது. அதைத் தீயில் வாட்டும் வழக்கம் நாளடைவில் வந்து விட்டது. 

அரவான்

            தமிழகத்தில் திரவுபதி அம்மன் கோவில்கள் அனைத்திலும் அரவானின் தலை, தனி தெய்வமாக வணங்கப் படுகிறது.

#ஆடிமாதம் #ஆடி1 #தேங்காய்சுடும்நிகழ்வு #அரவான் #மகாபாரதம் #பாரதப்போர்


Friday, May 4, 2018

திருசெந்தூர்.

           முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருசெந்தூர். அதன் முந்தைய பெயர் 'சீரலைவாய்' அல்லது 'திருச்சீரலைவாய்'. 'சீரான அலைகள் உருவாகும் கடலை வாசலாகக் கொண்ட ஊர்' என்பது தான் இதன் அர்த்தம். இது ஒரு கடல் சார்ந்த இடம்.

திருச்சீரலைவாய் 

              முருகப் பெருமான் சூரன் என்ற அசுரனைப் போரிட்டு அழிப்பதற்காக, ஒரு போர்வீரனாக, படைத்தளபதியாக, இந்த ஊரில் இருந்துதான் புறப்பட்டுச் சென்றார். வீரத்துடனும், நெற்றியில் செந்தூரத்துடனும் காட்சி தந்ததால் அவர் 'செந்தில் குமரன்' என்று அழைக்கப் பட்டார். அதன் காரணமாகவே இந்த ஊர் 'செந்தூர்' அல்லது 'திருச்செந்தூர்' என்று அழைக்கப் படுகிறது.

போர்க்கோலத்தில் திருசெந்தூர் முருகன் 

             கடலின் சீற்றமான 'சுனாமி' க்குத் தமிழில் 'கடல் கோள்' என்று பெயர். அதாவது, கடல் நிலத்தினைக் 'கொள்ளுதல்' அல்லது 'தனக்காக எடுத்துக் கொள்வது' என்று பொருள். இது வரை தமிழகத்தில் நடந்த அத்தனை கடல் கோள் (சுனாமி) களிலும் திருசெந்தூர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. (2004 ஆம் ஆண்டு சுனாமியிலும் திருசெந்தூர் மட்டுமே பாதுகாப்பாக இருந்த கடற்கரை நகரமாகும்.)

திருசெந்தூர் கோவில் 

                  கடலுக்குள் என்ன நடந்தாலும் இந்த ஊரில் மட்டும் கடல் அலைகள் ஆட்டம் காணாமல் சீராகவே இருக்கும் என்பதை அறிந்து, தமிழ் அறிஞர்கள் இந்த ஊருக்கு 'சீரலைவாய்' என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இது தான் தமிழ் நாகரீகத்தின் (தீர்க்க தரிசனம்) காலக் கணிப்பு!

#திருசெந்தூர் #திருச்சீரலைவாய் #சீரலைவாய் #சுனாமி
#முருகன் #தீர்க்கதரிசனம் #காலக்கணிப்பு #தமிழ்நாகரீகம் 
#Thiruchendur #Murugan #Tsunami



Friday, April 13, 2018

இனிய ஐந்தாம் ஆண்டு!

       
   

      நம்முடைய வலைப்பக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்திருக்கிறது. வாசக நண்பர்களின் ஆர்வம், ஆதரவு மற்றும் வாழ்த்துக்களுடன் இனிமையான ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நமது வலைப்பக்கம். மகிழ்ச்சி.


Wednesday, March 14, 2018

தங்கமே தங்கம்!

      தங்கம்... அநேகப் பெண்களால் விரும்பப் படும் உலோகம். இப்போது அதன் விலைமதிப்பைப் பொறுத்து, பெரும்பாலானவர்களாலும் விரும்பப் படும் உலோகமாக உள்ளது. விரும்பப் படுவதொடு மட்டுமல்லாமல், இன்றைய வாழ்வியலில் பல குடும்பங்களை, குடும்பங்களின் பொருளாதார பலத்தினை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாகவே உள்ளது. இவையனைத்தையும் தாண்டி, ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் ஆளும் சக்தி இந்தத் தங்கம் தான். அதாவது ஒரு நாடு, தன்னிடம் இருப்பு வைத்திருக்கும் தங்கத்தின் அளவுக்கு மட்டுமே பணத்தை அச்சிட முடியும். ஆக, ஒரு அரசாங்கத்திடம் இருக்கும் தங்கத்தின் அளவு தான் அந்த நாட்டின் பொருளாதார நிலையை நிர்ணயிக்கிறது.

தங்கம்
         பழங்காலத்தில் இருந்தே தங்கத்தில் ஆபரணங்கள், பொருட்கள் செய்து உபயோகிப்பதை இந்தியர்கள் மட்டுமல்லாது பல நாடுகளிலும் பின்பற்றி உள்ளனர். தங்கத்தைப் பெரிதாக மதிப்பதற்குக் காரணம் அதன் உறுதித் தன்மை மற்றும் நிலைப்புத் தன்மை (durability) தான். தங்கம் மென்மையான உலோகம் என்று தான் நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அதன் வேதித் தன்மைகளைப் பொறுத்து, அது அதிக உறுதியான உலோகம்.
         
தங்கத்தில் பாத்திரம் 
       தங்கம் காற்றில் கருக்காது; நீரிலோ மற்ற திரவங்களிலோ கரையாது; மண்ணில் எத்தனை நாட்கள் புதையுண்டு இருந்தாலும் மட்கிப்போகாது. தங்கத்தின் இந்த உறுதித் தன்மையின் காரணமாகத் தான் மக்கள், தாங்கள் வெகு காலம் உபயோகிக்க விரும்பிய பொருட்களைத் தங்கத்தில் செய்து உபயோகித்தனர். அதனாலேயே எவ்வளவு விலை கொடுத்தும் தங்கத்தையோ தங்கத்தினால் ஆன பொருட்களையோ வாங்கினார்கள். 

இரும்பு உபயோகம் 

           தங்கத்தை விட இரும்பின் உபயோகம் அதிகம் தான். இன்றைய சிறு வீட்டு உபயோகப் பொருட்கள் முதல், மிகப்பெரும் இயந்திரங்கள் வரை இரும்பு  தான் அதிகம். ஆனால், 'நிலைப்புத் தன்மை' என்ற விதத்தில் இரும்பு மிக உறுதியற்ற உலோகம். காற்றிலும் தண்ணீரிலும் துருப்பிடித்துக் கரைந்து போகும்; தொடர்ந்து மண்ணில் புதையுண்டால் மட்கி அழியும். அழியும் பொருளுக்கு விலையும் குறைவாகவே உள்ளது.

            தன்னுடைய உறுதித் தன்மையாலும் (Strength) நிலைப்புத் தன்மையாலும் (Durability) தங்கம் உலகை ஆளும் பொருளாக இருக்கிறது. Gold rules the world Economy thanks to its Strength and Durability.

      தங்கம் போல் இருக்க வேண்டும் என்று விரும்பினால், 'தங்கமாகவே இருங்கள்'. - அதாவது, எப்போதும் உறுதியாகவும், அழியாத குணங்கள் கொண்டவர்களாகவும் இருங்கள்.

#தங்கம் #இரும்பு #பொருளாதாரநிலை
#Gold #Iron
# NationalEconomy



Tuesday, February 13, 2018

பக்திப் பாடல்களும் இறை உருவங்களும்.

     நமது இந்து மதக் கோவில்களில் வழிபாடுகளின் போது இறைவனைப் போற்றிப் பாடல் பாடி வணங்குவது சிறந்த ஒரு அம்சமாகும். இப்போதும் புராதானக் கோவில்களில் திருப்பதிகம் மற்றும் அந்தந்தக் கோவில்களுக்கான பாடல்களைப் பாடுவதற்கென்றே 'ஓதுவார்கள்' நியமிக்கப் படுகின்றனர். பெரும்பாலும் இறைவனைப் போற்றிப் பாடும் பாடல்கள் இறைவனின் பெருமைகளைப் பற்றியும் அவரின் (அழகிய) உருவ அமைப்பையும்  குறித்ததாகவே உள்ளன. இறைவனின் உருவம் இந்து மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். இந்துக் கடவுள்களின் உருவ அமையபுகளில் பல்வேறு குறிப்புகளும் மனித வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களும் உள்ளன. தமிழ்க் கடவுள்  முருகனின் உருவ அமைப்பில் இருக்கும் குறிப்புகளை நமது முந்தைய கட்டுரை ஒன்றில்  பார்த்திருக்கிறோம்.

சிவபெருமான் உருவம்
            சரி. உருவ அமைப்பைக் குறிக்கும் பாடல்கள் ஏன் அதிகம் எழுதப்பட்டன? அந்தப் பாடல்களைக் கோவில்களில் பாடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது? 
  தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் நாம் எப்போது வேண்டுமானாலும் (கணினியிலோ, கைப்பேசிகளிலோ) கடவுள் உருவங்களைப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. மேலும் இன்று அனைத்து வீடுகளிலும் கடவுள் படங்கள் உள்ளன. ஆனால் பழங்காலங்களில் கோவில்களில் மட்டுமே கடவுள் சிலைகள் இருந்தன. சில வசதி படைத்தவர்களின் வீடுகளில் மட்டுமே கடவுள் படங்கள் ஓவியங்களாக இருந்தன. 


            சாமானியர்கள் இறைவனைக் காண வேண்டும் என்றால் கோவிலுக்குச் சென்றால் மட்டுமே சாத்தியம். அப்போது கிடைக்கும் சில நொடிகள் அல்லது நிமிட நேரம் மட்டுமே இறைவனைக் காண்பது  என்பது சாத்தியம் ஆகிறது. என்றாலும் ஒரு பக்தரின் மனதில் இறைவனின் உருவத்தை நிலையாக நினைவு வைத்திருக்க வேண்டுமானால் அது இறைவனின் உருவத்தை விளக்கிக் கூறும் பாடல்கள் மூலமாகவே சாத்தியம் ஆகிறது. அதற்காகவே அது போன்ற பாடல்கள் எழுதப் பட்டன; தினந்தோறும் பக்தர்களுக்குப் பாடப் பட்டன.  

சிவ பெருமானின் உருவம்:

            1. தலையில் கங்கை மற்றும் பிறைச் சந்திரன் (நிலா)
            2. நெற்றியில் திருநீறு மற்றும் ஞானக்கண் 
            3. கழுத்தில் பாம்பு
            4. உடலில் புலித் தோல்
            5. அருகில் காளைமாடு (நந்தி)

சிவபெருமானின் உருவ அமைப்பு 

இதை ஒரு பக்தர் நினைவில் வைத்துக் கொள்ளும் விதத்தில் ஒரு கதை போல ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளனர்.

          "சிவன் ஒரு சமயம் தன் நெற்றியில் திருநீற்றினை நெற்றியில் இட்டுக் கொண்ட போது அதன் சில துளிகள் அவர் கழுத்தில் இருக்கும் பாம்பின் கண்களில் பட்டன. அதனால் பாம்பு நிலை தடுமாறிப் பெருமூச்சு ஒன்றினைச் செய்ய, அந்தப் பெருமூச்சின் வெப்பத்தின் காரணமாக, குளிர்ந்த குணமுடைய சந்திரன் உருகி வழிந்தது; சந்திரன் உருகி சிவனின் உடலில் இருந்த புலித்தோலின் மீது பட்டு, அந்தப் புலித்தோல் உயிர் பெற்று அசைந்ததாம். திடீரென்று தோன்றிய புலியைக் கண்ட காளை மாடு பயத்தில் மிரண்டது." என்று சிவனின் திரு உருவத்தை பக்தர்களின் மனதில் பதிய வைக்கிறது அந்தப் பாடல்.

இன்றைய மகா சிவராத்திரியில் அனைவருக்கும் சிவன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

#இந்துக்கடவுள் #மகாசிவராத்திரி #சிவராத்திரி #சிவன் #சிவஉருவம்

 


Sunday, January 28, 2018

பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தார். ஆனால் ஏன்?

             நாம் பள்ளிப் பாடமாகப் படித்தது தான் இந்த "முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள் பாரி!" என்கிற சொற்றொடர். அந்தக் கதையையும் நாம் படித்திருக்கிறோம். அதாவது - பாரி மன்னன் (கடையேழு வள்ளல்களில் ஒருவர்) ஒரு வள்ளல். துன்பம், கஷ்டம் என்று யார் வந்து உதவி கேட்டாலும் உடனே உதவி செய்து விடுவார்; ஒரு முறை அவர் தனது தேரில் சுற்றுப் பயணம் செய்த போது ஒரு முல்லைக் கொடி, பற்றிப் படர கொம்பு இல்லாமல் இருந்ததைப் பார்க்கிறார். அந்த முல்லைக் கொடிக்கு உதவி செய்யும் விதமாக, தான் ஏறி வந்த தேரையே நிறுத்தி, அது பற்றிப் படர வழி செய்தார். இது தான் வரலாற்றில் நாம் படித்த கதை.

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன் 
                      அதனாலேயே அவர் வள்ளலாகப் போற்றப் படுகிறார். எல்லாம் சரி. பாரி மன்னர் இதைக் கொஞ்சம் யோசித்துச் செய்திருக்கலாம். அருகில் இருக்கும் மரத்தின்  மீது படர விட்டிருக்கலாம்; அல்லது தனது தேரோட்டியின் மூலம் ஒரு கொழு கொம்போ குச்சியோ நட்டிருக்கலாம். தன் தேரை ஏன் கொடுக்க வேண்டும்?

சிலை 
                           தேர் என்பது ஒரு செயலாற்றத்தக்க சாதனம் - operable machine. ஆனால் ஒரு முல்லைக் கொடி படருவதற்கு ஒரு passive structure (செயல் படாத அமைப்பு) போதும். மன்னர் ஒரு நல்ல பொருளை வீணடித்து விட்டார். பாரி மன்னர் Resource utilizationஐ  இன்னும் நன்றாக யோசித்துச் செய்திருக்கலாம்.

#ResourceUtilization #பாரிமன்னர் #வேள்பாரி #பாரிவள்ளல்