Sunday, December 31, 2017

நாட்காட்டிகள் - சில தகவல்கள்!

           காலண்டர் என்று நாம் அழைக்கும் 'நாட்காட்டிகள்' ஒவ்வொரு நாளிலும் நாம் தவிர்க்க முடியாத விஷயங்களில் ஒன்று. புத்தாண்டு என்றாலே நம் நண்பர்கள், வணிக நிறுவனங்கள்  நமக்குப் பரிசளிக்கும் பொருட்களாக நாட்குறிப்புகளும் (டைரிகள்), நாட்காட்டிகளுமே இருக்கின்றன. தினசரி நாட்காட்டிகள், மாத நாட்காட்டிகள், ஆன்லைன் நாட்காட்டிகள் என்று நாம் பல விதங்களிலும் இன்று எளிதில் அவற்றை உபயோகிக்கிறோம்.

            கிறிஸ்தவ மதம் இந்த உலகிற்கு அளித்த மிகப் பெரிய கொடை தான் இன்று உலகம் முழுவதும் பொதுவாகப் பின்பற்றப்படும் கிரிகோரியன் நாட்காட்டிகள். பேப்பர்களின் புழக்கம் அரிதாக இருந்த (கி.மு.) பழைய காலங்களில் தேவாலயங்களே தேதிகளை மக்களுக்குத் தெரியப்படுத்தின. நாட்காட்டிகள் பலமுறை பல்வேறு மன்னர்களால் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. அந்த மாற்றங்களை Calendar Reforms அல்லது Calendrical Reforms என்று அழைக்கிறார்கள்.

கிரிகோரியன் நாட்காட்டி 2018

        இன்று நாம் உபயோகப்படுத்தும் காலண்டர்களில் ஒரு சிறிய முரண்பாட்டைக் காண முடியும். மாதங்களின் பெயர்களை உற்று கவனிக்கும் போது சிலருக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். அதாவது, ஆங்கில நாட்காட்டிகளில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் மாதங்களின் பெயர்கள் கிரேக்க மற்றும் ரோமானிய மொழி வார்த்தைகள். ரோமானிய மொழியில்: 

          "செப்டா" என்றால் ஏழு. ஆனால் செப்டம்பர் என்பது ஒன்பதாவது மாதம்.
          "ஆக்டோ" என்றால் எட்டு. ஆனால் அக்டோபர் என்பது பத்தாவது மாதம்.
         "நோவா" என்றால் ஒன்பது. ஆனால் நவம்பர் என்பது பதினொன்றாவது மாதம்.
         "டெக்கா" என்றால் பத்து. ஆனால் டிசம்பர் என்பது பன்னிரண்டாவது மாதம்.

இந்த முரண்பாடு அல்லது வேறுபாடு எப்படி ஏற்பட்டது? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். 

மன்னர் ஜூலியஸ் சீசர்

            உண்மையில் கி.மு. காலத்து ரோமானிய நாட்காட்டியில் ஆரம்பத்தில் பத்து மாதங்களே இருந்தன. அதனால் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இருக்கும் மாதங்கள் முறையே ஏழு முதல் பத்தாம் மாதங்களாகவே இருந்தன. ஜூலியஸ் சீசர் என்ற ரோமானிய மன்னர் ஒரு போரில் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக ரோமானிய மதகுருக்கள் JULY என்ற மாதத்தை வருடத்தின் ஏழாவது மாதமாகப் புதிதாகச் சேர்த்தார்கள். பின்பும், ஜூலியஸ் சீசரின் மறைவுக்குப் பிறகு ஆகஸ்டஸ் என்ற ரோமானிய மன்னனின் சிறந்த ஆட்சி நிர்வாகத்தைப் போற்றும் விதமாக AUGUST என்ற மாதத்தை வருடத்தின் எட்டாவது மாதமாகச் சேர்த்தன கிரேக்க நாட்டுத் தேவாலயங்கள்.

மன்னர் ஆகஸ்டஸ்

           மேலும், புதிதாகச் சேர்க்கப்பட்ட இரண்டு மாதங்களுமே சமமாக இருக்க வேண்டும் (இரண்டு மன்னர்களின் கவுரவத்தையும் முன்னிட்டு) என்கிற எண்ணத்தில் தான் இரண்டு மாதங்களிலும் 31 நாட்கள் இருக்கும் படியாக நாட்காட்டிகள் வடிவமைக்கப்பட்டன. (அதற்காகத் தான் February மாதத்தில் இருந்து இரண்டு நாட்களை எடுத்து இந்த இரண்டு மாதங்களிலும் இணைக்கப்பட்டன என்றும் ஒரு தகவல் உள்ளது.)

அதனால் தான் மாதங்களின் பெயர்களில் ஏற்பட்டிருக்கும் இந்த முரண்பாடு உருவானது.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

#புத்தாண்டுநல்வாழ்த்துக்கள் #காலண்டர் #நாட்காட்டி #கிறிஸ்தவமதம் #CalendarReform #CalandricalReform #கிரிகோரியன்நாட்காட்டி #ஜூலியஸ்சீசர் #ஆகஸ்டஸ் 




Sunday, December 17, 2017

சனிபகவான் - சில விவரங்கள்!

                  வரும் 19.12.2017 செவ்வாய்க் கிழமை (ஹேவிளம்பி, மார்கழி 4) அன்று சனிப் பெயர்ச்சி. சனி பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்கிறார். அவரவர் ராசிகளுக்கு என்னன்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கிறது. இந்த முறை மீம் மற்றும் வீடியோ வடிவங்களில் பலன்கள் வெளிவந்திருக்கின்றன. நிறையப் பேர் படித்து முடித்து விட்டோம். இப்போ சனிப் பெயர்ச்சியின் கதாநாயகனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான நேரம்.

  • சனி பகவான் சூரியனில் இருந்து (பூமியில் இருந்தும்) மிகவும் தள்ளி அமைந்திருக்கும் கிரகம். அதனால் சுற்றுப் பாதை மிகவும் பெரியது (Huge Orbit). அதனாலேயே ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகம். (இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள்). மந்தன் (Slower planet) என்று அழைக்கப்படுகிறார்.
  • வெளிவட்டம் (Outer Ring) உடைய ஒரே கிரகம் சனி தான்.
சனிக் கோள் 
  • சனி பகவான் நீல நிறம் அல்லது கருப்பு நிற உடல் கொண்டவர் என்று நம்பப்படுகிறார். அவர் காகத்தைத் தனது வாகனமாகக் கொண்டு இருப்பவர். அதனால் தான் சனிக் கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். அதற்கான காரணத்தையும் இங்கே படிக்கலாம். 
காக வாகனத்தில் சனி பகவான் 
  • சனியை 'நீதிக்கோள்' என்று ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். அவர் ஒரு நீதிமான் ஆவார். நமது செயல்கள் விளைவிக்கும் நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன்களைக் கண்டிப்பும் கறாருமாகக் கொடுக்கிறார். அதனால் தான் பயம் கலந்த மரியாதையுடன் அவர் பார்க்கப் படுகிறார்.
  • ஒருவரது சுய ஜாதகத்தில் சனி பகவான் வலிமையாக (ஆட்சி அல்லது உச்ச நிலைகள் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.) இருந்தால் அவர்கள் கண்டிப்பான சுபாவம் உடையவர்களாகவும் நியாயவாதிகளாகவும் இருக்கிறார்கள்.
சந்தனக் காப்பு 
  • "எல்லாப் புகழும் இறைவனுக்கே!" என்பார்கள். இந்தக் கலியுகத்தில் எல்லா இகழ்ச்சிகளும் (திட்டு வாங்குறார்!) சனீஸ்வரனுக்குத் தான். அவரவர் சுய ஜாதகத்தில் வேறு கிரகத்தினால் (உதாரணம் - ராகு, கேது) ஏற்படும் பிரச்சினைகளுக்குக் கூடச் சாதாரணமாக "சனி பிடிச்சு ஆட்டுது" என்று திட்டுகிறோம். (ஏனென்றால் இது கலியுகம். சனிக்கு இன்னொரு பெயர் கலி.)
  • சனி பகவான் ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனியாக நம்மைப் பாடாய்ப் படுத்துகிறார். அவரைப் பற்றிய பழமொழிகளையும் அவற்றின் அர்த்தங்களையும் அடுத்த பாகத்தில் படிக்கலாம்.
  •              
  • எள், நல்லெண்ணெய், கருப்பு மற்றும் நீல நிற உடைகள் மட்டும் அல்லாமல், சிறந்த உழைப்பாளிகளையும் சனி பகவானுக்குப் பிடிக்கும்.
#சனிப்பெயர்ச்சி2017  #சனிபகவான் #SaturnTransit2017 #சனிப்பெயர்ச்சிபலன்கள்2017





Monday, December 4, 2017

இறைவனுக்கு இதயத்தில் இடமளிப்போம்!

     இறைவனின் இடம் எது? அவர் எங்கே இருக்கப் பிரியப்படுகிறார்? கோவிலிலா? நம் வீட்டுப் பூஜை அறையிலா? இல்லை. நம் இதயத்தில். மகாபாரதத்தில் அந்த முக்கிய நிகழ்வு - அஸ்தினாபுரத்தின் அரண்மனையில், அரச சபையில், சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்கடிக்கப் படுகிறார்கள். நாட்டினை இழந்து அனைவரும் அடிமைகள் ஆகிறார்கள். திரௌபதியும் அடிமைகள் பட்டியலில் சேருகிறாள். 

          பிறகு நடந்தது என்ன? நாட்டின் அரசியை அடிமையாக்கிச் சிரிக்கிறார்கள்; அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து வருகிறார்கள். அவள் அழுது புலம்பி அங்கிருந்த பெரியவர்களிடம் எல்லாம் நியாயம் கேட்டும் யாரும் அவளுக்கு உதவிக்கு வரவில்லை. மந்திரி சபையின் நடுக் கூடத்தில் அவள் ஆடையைப் பிடித்து இழுத்து அவமானப் படுத்துகிறார்கள்.  

திரௌபதி
               இறைவனை உதவிக்கு அழைக்கிறாள். கிருஷ்ண பகவானின் பக்தை அவள். என்னென்னவோ கூறி அழைக்கிறாள்; "கோகுலத்தில் பிறந்தவனே, துவாரகையில் வாழ்பவனே, தாமரை போன்ற கண்களை உடையவனே...." என்றெல்லாம் அழைக்கிறாள். இறைவன் வரவில்லை. கடைசியாக, "என் இதயத்தில் குடியிருப்பவனே" (சமஸ்கிருத ஸ்லோகத்தில் 'ஹிருதய வாஸி' என்று சொல்லப்பட்டுள்ளது.) என்று அழைக்கிறாள். உடனடியாகக் கிருஷ்ணன் அங்கே தோன்றி, ஆடை கொடுத்துக் காப்பாற்றுகிறார். 

கிருஷ்ணர்
                   சரி. கிருஷ்ணர் வர ஏன் இவ்வளவு தாமதம்? தனது பக்தைக்கு ஏற்படப் போகும் கஷ்டங்கள் அவருக்குத் தெரியாதா? அல்லது, அவளுக்குத் துன்பம் ஏற்பட்ட முதல் நொடியிலேயே அவர் ஏன் வரவில்லை? அவ்வளவு அழைத்தும் வரவில்லையே... ஏன்?
                    அவர் சோதிக்கிறார்; நம் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறோமா என்று சோதிக்கிறார். அவர் அதையே விரும்புகிறார். "எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது? போன மாதம் தானே அந்தக் கோவிலுக்குப் போனேன்; வருடா வருடம் அங்கே செல்கிறேனே..." என்று புலம்புவதற்கு முன், நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம் -நம் இதயத்தில் இறைவனுக்கு இடம் கொடுத்திருக்கிறோமா என்று. நாம் அதைச் செய்து விட்டாலே தெளிவாகி விடலாம். சுபம்!

#திரௌபதி #கிருஷ்ணர் #மகாபாரதம்
#இதயத்தில்இடமளிப்போம்



Wednesday, November 8, 2017

சகுனங்கள் எல்லாம் இயற்கை தரும் செய்திகள்!

            அன்றாட வாழ்வில் சகுனம் பார்ப்பதைப் பலர் கடைப்பிடிக்கிறோம். பகுத்தறிவாளர்கள் இதை மூட நம்பிக்கை என்று கூறுகிறார்கள் - இதில் ஒரு கலையும் அறிவியலும் இருப்பது புரியாமல்!

               மனிதர்கள் நமக்குத் தெரிந்த மொழிகளால் பேசுகிறோம். சொல்பவரின் மொழி கேட்பவருக்குத் தெரியவில்லை என்றால் சைகைகளால் தாங்கள் சொல்ல வந்ததைப் பகிர முயற்சி செய்வார்கள். சகுனங்களும் இது போலத்தான். நம்மைச் சுற்றி இருக்கும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் நம்மிடம் பேசுகின்றன.ஆனால் இவை மனிதர்களின் மொழியில் பேசுவதில்லை. மிருகங்களும், பறவைகளும் சைகை மொழியில் பேசுகின்றன; தாவரங்கள் சில விஷயங்களைக் குறிப்பால் உணர்த்துகின்றன. இவைகளையே சகுனங்கள் என்கிறோம்.

1. பூனை குறுக்கே சென்றால் காரியத்தடை:

        பொதுவாகவே நாய்கள் தங்கள் எஜமானர்களோடு மிகுந்த நன்றியுணர்வும் நட்புணர்வும் கொண்டவை. நாய்களுக்கு இருக்கும் ஒரு விசேஷமான அறிவைக் கொண்டு சில சமயம் தங்கள் எஜமானர்களுக்கு ஏற்படப் போகும் விபரீதங்களைக் கூட முன்னரே அறிந்து எச்சரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவை.

பூனை

அது போலவே பூனைகள் தாங்கள் வாழும் வீட்டுடன் பற்று கொண்டவை. அவைகளின் மனம் எப்போதும் அந்த வீட்டில் நடக்கக் கூடிய நிகழ்வுகளைப் பற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும். நாம் திட்டமிடும் காரியங்களைப் பற்றியும் அதில் இருக்கும் தடைகளைப் பற்றியும் அவை முன்கூட்டியே அறிகின்றன. நாம் புறப்படும் போது அந்தத் தடையை நமக்குச் சுட்டிக் காட்டித் தடுக்கும் பொருட்டே பூனை நமக்குக் குறுக்கே செல்கிறது. இன்றும் தென் மாவட்டங்களின் சில சமூகங்களில் பூனையை "வீட்டுச் சாமி" என்று அழைக்கின்றனர்.

2. பன்றிமேல் ஏற்றிய வண்டி ஆகாது; விற்றுவிட வேண்டும்:

              பன்றிகள் மனிதர்களின் ரகசியங்களுடன் தொடர்பு கொண்டவை; ஒரு வாகனத்துக்கு ஏற்படக் கூடிய விபத்தை அறியும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.

பன்றி
                     தங்களின் உயிரைக் கொடுத்து நமக்கு வரப்போகும் இன்னல்களைத் தெரிவிப்பவை பன்றிகள். அதனால் தான் பன்றி மேல் ஏறிய வாகனத்தை விற்று விடச் சொல்லும் பழக்கம் இருக்கிறது. அந்த வாகனத்தைப் புதிதாக வாங்குபவர்களுக்கு எந்தக் கெடுதலும் கிடையாது.

3. காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தாளி வருவர்:

               இதுவும் ஒரு விலங்குகளின் ஒரு விதமான அறிவும் அதைத் தொடர்ந்த சைகையும் தான்.

காகம்
                 தமிழ் ஜோதிடத்தில் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அந்த ஐந்து பறவைகளில் காகமும் ஒன்று. காகங்களுக்கு இருக்கும் உள்ளுணர்வும் நுண்ணறிவுமே வீட்டுக்கு வரும் விருந்தாளிகளைப் பற்றி நமக்கு சைகையில் உணர்த்த உதவுகிறது.

4.  வாழை மரம் வடக்கேஅல்லது கிழக்கே குலை தள்ளினால் நல்லது:

               மிருகங்கள், பறவைகள் போலவே தாவரங்களும் நம்முடன் உரையாடுகின்றன; வாழை மரம் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ குலை தள்ளுவது நல்லது என்பதும் வீட்டில், அல்லது அந்தப் பகுதியில் நடக்கப் போகும் நல்ல விஷயத்தைக் குறிப்பால் உணர்த்துவதாகவே இருக்கிறது.

குலை தள்ளிய வாழை மரம் 
                    இதுபோல் நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் நமக்கு எதோ செய்தி இருக்கிறது. புரிந்து தெளிவதில் தான் இருக்கிறது பகுத்தறிவு. ஒதுக்கித் தள்ளுவதில் இல்லை!

Thursday, August 24, 2017

விநாயகர் சதுர்த்தி!

எதில் வேண்டுமானாலும் செய்யுங்கள் - நம் விநாயகரை!

             அது மஞ்சள்தூளோ, மாட்டுச்சாணமோ, பச்சரிசி மாவோ, களிமண்ணோ - உங்களுக்கு எது விருப்பமோ, எது வசதியோ - அதில் ஒரு கூம்பு உருவத்தைப் பிடித்து வையுங்கள். அல்லது உங்களால் விநாயகரின் உருவம் போலவே உருவாக்கும் வழியிருந்தால்.... உருவாக்குங்கள் உங்கள் மனதில் முழுமுதல் கடவுளாக வீற்றிருக்கும் விநாயகரை!
   
            விநாயகர் எளிமையின் வடிவம். அருகம்புல்லைக் கூட அவருக்குப் படைக்கலாம். நெய்யில் செய்த இனிப்புப் பதார்த்தங்களையும் அவருக்குச் சுவைக்கக் கொடுக்கலாம். அவருக்கு எல்லாம் ஒன்று தான். எருக்கம்பூவும், வாசனை மிக்க மல்லிகையும் அவருக்கு முன் சமமே. 

விநாயகர் சதுர்த்தி பூஜை 

        விநாயகர் சதுர்த்தி என்பது ஆவணி மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்த நான்காவது திதியான சதுர்த்தியன்று வருகிறது. அன்றைய நாளில் தான் விநாயகர் பிறந்ததாக நம்பிக்கை. அன்றைய நாளில் வீட்டில் உள்ள விநாயகர் படங்கள், சிலைகளையோ, அல்லது உங்கள் விருப்பப்படி ஒரு விநாயகரைச் செய்தோ, வழிபடுங்கள் - பிறகு ஏதேனும் நீர்நிலைகளில் கரைத்து விடலாம். ஆற்றிலோ, கடலிலோ உங்கள் கிணற்றிலோ கரைப்பது நம் விருப்பமே.

ஏன் கரைக்கிறார்கள்?
   
                இன்றைக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான கோவில்கள் இல்லாத காலத்தில், கோவில்களுக்குச் செல்லப் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில், யார் எங்கிருந்தாலும் ஒரு விநாயகர் உருவத்தைத் தங்களது வீட்டிலேயே உருவாக்கி வைத்து வழிபடுவதே இந்த முறையாகும். பின்னர் எந்த ஒரு தீட்டும் படாமல் இருக்க வேண்டி, அந்த விநாயகர் உருவத்தைக் கரைத்து விடுகின்றனர். 

கரைக்கக் கூடிய களிமண் விநாயகர்

என்ன பிடிக்கும் விநாயகருக்கு?

                    விநாயகருக்கு எல்லாமே சமம் தான் என்றாலும், ஓடு உடைய பழங்கள், உணவுப் பண்டங்களை ('Shell and Kernel' objects) விநாயகர் சதுர்த்தியன்று அவருக்குப் படைப்பது சிறப்பு. அதாவது தேங்காய், மாதுளம்பழம், பூர்ணம் வைக்கப்பட்ட கொழுக்கட்டை போன்றவைகளைப் படைக்கலாம். ஒரு மணி நெல்லோ, ஒரு நிலக்கடலைக் காயோ படைத்தாலும் அவருக்கு மகிழ்ச்சியே. 

கொழுக்கட்டை

"வெளியில் இருக்கும் உடல் மட்டுமே உனக்கு உரியது; உள்ளே இருக்கும் உயிர் (ஆத்மா) கடவுளுக்கு உரியது" என்பதை உணர்த்தவே இந்த ஓடு உடைய பொருட்களைத் தன் விருப்பமாக வைத்திருக்கிறார் விநாயகர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

                ஆனால் இன்று விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிக விமரிசையாகவும் மிகுந்த பொருட்செலவில் ஆடம்பரமாகவும் கொண்டாடப் படுகின்றன. மேலும் வேறு சில சர்ச்சைகளையும் பிரச்சினைகளையும் கூட இந்த ஊர்வலங்கள் ஏற்படுத்தி விட்டன. இவையெல்லாம் தவிர்க்கப்பட்டு, தத்துவங்கள் பின்பற்றப் படுவது மட்டுமே சிறப்பானதாக இருக்கும்.


#விநாயகர்சதுர்த்தி #விநாயகர் #பிள்ளையார் #விசர்ஜனம்
#ganeshchathurthi 

Saturday, August 12, 2017

மேட்டூர் ஆடிப்பெருக்கு விழா

                     காவிரி நதி பாயும் எங்கள் செக்கானூர், மேட்டூர் அணையிலிருந்து வெளிவரும் தண்ணீரினால் பயன் பெறும் ஊர்களில் ஒன்றாகும். எங்கள் ஊரில் ஆடி 18 என்பது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். காவிரியின் புது நீருக்குத் தரப்படும் ஒரு வரவேற்பு இது என்றாலும், பாரதப் போரின் இறுதி நாளும் இதுவே என்பதால் சற்றுக் கூடுதல் சிறப்பானது இந்த நாள்.

                     ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆற்றில் முளைப்பாரி விடும் நிகழ்வுக்காக ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்கு முன்பே தானியங்களைக் கொண்டு முளைப்பாரி விதைக்கப் பட்டு விடும். பின்பு ஆடி மாதம் பதினெட்டாம் தேதியன்று ஆற்றங்கரைக்குச் சென்று காவிரி நீரை வணங்கிப் புது நீரில் குளிப்பார்கள். 

ஆற்று மண்ணில் செய்த பஞ்ச பாண்டவர் உருவங்கள்

                      பிறகு ஆற்று மண்ணை எடுத்து 6 சிறு கூம்புகள் போல் இடுவார்கள். அவை பஞ்ச பாண்டவர்களான தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும் ஆறாவது சிலை திரவுபதியையும் குறிக்கும். அந்த ஆறாவது கூம்பு உருவத்திற்கு மட்டும் பெண்கள் உபயோகிக்கும் சில பொருட்களால் அலங்கரிக்கிறார்கள். (சிலர் ஒரே ஒரு கூம்பு உருவத்தை மட்டும் இடுவார்கள். அப்படியெனில் அது காவிரித் தாயைக் குறிக்கும்.) அந்த மண் உருவங்களுக்கு மஞ்சள், குங்குமம், பூக்கள் வைத்து, தெய்வச் சிலைகளைப் பூசிப்பது போல் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பின்பு முளைப்பாரியை ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வழிபாட்டை முடித்து விடுவோம்.

முளைப்பாரி 

                   ஊர்க்கோவிலில் இருக்கும் அம்மன் சிலையை ஆற்றுப் புது நீரில் கழுவிப் பூஜை செய்து மீண்டும் கோவிலுக்குக் கொண்டு சென்று வைப்பதும் எங்கள் ஊரில் நடக்கும். இது வருடா வருடம் எங்கள் ஊரில் நடக்கும் எளிமையான நிகழ்வு. இந்த வருடமும் இறைவனின் அருளால் இது எளிமையாகவும் நிறைவாகவும் நடந்தது.

#ஆடிப்பெருக்கு #மேட்டூர் #ஆடி18 #பஞ்சபாண்டவர் #திருவிழா 

Thursday, August 10, 2017

13 என்றால் மர்மம்???

              பொதுவாகவே 13 என்ற எண் உலகின் பல்வேறு நாடுகளிலும் மர்ம எண்ணாகக் கருதப்படுகிறது. (இந்துக்களை, அதிலும் தமிழர்களைப் பொறுத்தவரை 8 என்ற எண் மீது தான் சற்று பயம். அது சனீஸ்வரனின் எண் என்பதால் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறோம்.) ஆனாலும் உலகமெங்குமே மர்மத்தையும் பயத்தையும் விளைவித்து, தவிர்க்கப் படும் எண்ணாகப்  13 ஆம் எண் விளங்குகிறது. அதற்குக் காரணம் ஒரு விஷயமாகத் தான் இருக்க முடியும். அது ஆதி மனிதர்களின் மன நிலை மட்டுமே.

பதிமூன்று
                    நம் பயத்திற்கும் ஆதி மனிதன் பயத்திற்கும் என்ன தொடர்புன்னு கேட்கிறீங்களா? இருக்கு. மரபு வழி அறிவு (Gene Knowledge) என்பது நம் முன்னோர்களிடமிருந்து இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் அறிவு ஆகும். அது போலவே சிலரின் மீது கருணை, சில விஷயங்களின் மீது பயம்.... இவையெல்லாமும் நம் ஆழ்மனதில் இருக்கும் மரபு வழி அறிவு சார்ந்த விஷயங்களே! (Gene knowldegeன்னா..... ஸ்ருதிஹாசன் 'ஏழாம் அறிவு' படத்திலே ஆராய்ச்சி பண்ணுவாரே! அதே..... தான்.)

ஆதி மனிதன்

                  மனித இனம் தோன்றிய காலத்தில் சில விஷயங்களைக் (சில மிருகங்கள், மரங்கள், தான் வளர்க்கும் கால்நடைகள் போன்றவற்றை....) கணக்கிட மனிதன் எண்களைப் புழக்கத்தில் கொண்டு வந்தான். அப்போது அவனுக்கு எண்ணிக்கைக்கு உதவியாக இருந்தவை கைகளும் கால்களும் தான். ஆதி மனிதர்கள் கை விரல்களில் பத்து எண்ணிக்கை வரை எண்ணக் கற்றுக் கொண்டார்கள். அதற்கு அடுத்த இரு எண்ணிக்கைகளுக்கு இரண்டு கால்களையும் பயன் படுத்திக் கொண்டார்கள். பன்னிரண்டு வரை ஆயிற்று. அடுத்த எண்ணாகிய பதிமூன்றை எண்ணுவதற்கு எதுவுமில்லை. அப்போது எப்படி எண்ணுவது என்பது தான் பதிமூன்றைப் பற்றிய முதல் மர்மமாக இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில்  ஏற்பட்ட பயம் மனிதனின் மூளையில் அப்படியே பதிந்து விட்டது.
                       
ஆதி மனிதனும் அவன் கால்நடைகளும் 

                       அப்போதிருந்தே மனித இனம் பதிமூன்று என்ற எண்ணைக் கையாளுவதைப் பற்றிய பயத்தைக் கொண்டிருந்தது. ஆதி காலத்திலிருந்தே பதிமூன்றை முடித்த அளவு தவிர்த்திருக்கிறார்கள். பிறகு எண்ணிக்கைக்கென்று பல்வேறு கருவிகளை மனிதன் கண்டுபிடித்து விட்டான். கணிதம் என்பது இன்று எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் இந்த பயம் மட்டும் இன்னும் மாறவில்லை.

                            இப்போது நமக்குத் தான் எண்ணத் தெரியமே. இனி (முடிந்தவரை) பயம் வேண்டாம். :-)

#13 #மர்மஎண்பதிமூன்று #பதிமூன்று #ஆதிமனிதன் #மர்மம் #திகில்  

Wednesday, May 31, 2017

மாடுகள்..... அரசுகள்..... போராட்டங்கள்!

          இந்திய நாட்டின் வரலாற்றில் மாடுகளை முதன்மைப்படுத்திய கிளர்ச்சிகளும் போராட்டங்களும், அவை ஏற்படுத்திய மாற்றங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மனு நீதிச் சோழன் என்னும் சோழ மன்னன், கன்றை அரண்மனைத் தேரில் பலி கொடுத்த ஒரு பசுவின் குற்றச்சாட்டுக்குத் தலை வணங்கி, தனது மகனையே தேர்க்காலில் பலி கொடுத்து நீதியை நிலை நாட்டினான். (இது destruction. இரு தரப்புக்குமே நஷ்டம். மன்னன் வேறு ஏதேனும் செய்திருக்கலாம்.) இச்சம்பவம் தமிழர்கள் பின்பற்றிய நீதிமுறை மற்றும் சமுதாயச் சமநிலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அனைவராலும் போற்றப்படுகிறது.

மனு நீதிச் சோழன் 

                   இதெல்லாமே இருந்தாலும் 'இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்' என்று அழைக்கப்படும் மீரட் புரட்சி, மாட்டினை முன்னிறுத்தி நடந்த புரட்சியே. மீரட் புரட்சிக்கு (1857 ஆம் ஆண்டு) முன்னோடியாகவும் காரணமாகவும் இருந்தது தமிழகத்தில் நடந்த (1806 ஆம் ஆண்டு) வேலூர் சிப்பாய்க் கலகம் தான். அது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

                       ஆங்கில அரசாங்கம் இந்தியச் சிப்பாய்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்துத் தங்கள் படை பலத்தைப் பெருக்கினார்கள். அப்போது பிரிட்டிஷ் படையில் இந்துக்களும் முஸ்லிம்களும் மட்டுமே படை வீரர்களாக இருந்தனர். படை வீரர்கள் துப்பாக்கியைக் கையாளும் போது அவர்களது வலது கையால் துப்பாக்கி ட்ரிக்கரைப் பிடித்திருப்பார்கள்; இடது கை துப்பாக்கியைத் தாங்கிப் பிடிப்பதற்கும் தோட்டாக்களை மாற்றுவதற்கும் பயன் படும்.


                  ஒரு கையால் தோட்டா மாற்ற இயலாது. தோட்டாக்கள் ஒரு வித வழவழப்பான பசைப்பொருள் (கிரீஸ்) தடவப்பட்டு, உறையில் இடப்பட்டிருக்கும். அந்த கிரீஸ் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பினால் செய்யப்பட்டிருந்ததாக இருந்தது. தோட்டாவின் மேலிருக்கும் உரையைப் பற்களினால் மட்டுமே கடித்துத் திறக்க முடியும். அப்படித் திறக்கும் போது அந்த கிரீஸ் வாயில் படும் என்பதால் இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்கள் அந்தத் துப்பாக்கிகளைப் பயன்படுத்த மறுத்தனர். (இந்துக்களுக்கு மாடு தெய்வம்; முஸ்லிம்களுக்கு பன்றி வெறுப்புக்குரிய விலங்கு.) இது பெரிய எதிர்ப்பாக மாறி, மிகப்பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. அது தான் மீரட் சிப்பாய்க் கலகம் என்று பெயர் பெற்றது.

மீரட் புரட்சி (1857)

                             அடுத்து, 'தை எழுச்சி', 'மெரீனா புரட்சி' என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சுய எழுச்சிப் போராட்டம். ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 23 ஆம் தேதி வரை தொடர்ந்த தமிழ் இளைஞர்களின் 'ஜல்லிக்கட்டு ஆதரவு மற்றும் நாட்டு மாட்டினங்களைக் காத்தல்' போராட்டம், சமீப காலத்தில் மாடுகளை முன்னிறுத்திச் செய்யப்பட பெரும் போராட்டமாகும்.

நாட்டு மாடு 

                சிறிய பேரணியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் லட்சக்கணக்கான மக்களைத் தானாக ஒருங்கிணைத்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவி, மிகப்பெரும் மக்கள் இயக்கமாக மாறியது. இந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடத்தப்படவும் 'விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில்' திருத்தங்கள் கொண்டு வரவும் மத்திய மாநில அரசுகள் ஆவண செய்தன.

தை எழுச்சிப் போராட்டம் 
                           மாட்டினை முன்னிறுத்திய நிகழ்வுகளும் போராட்டங்களும் நாட்டிற்குப் புதிது அல்ல. பார்ப்போம்.
                         
#மாடுகள் #போராட்டம் #மீரட்புரட்சி #சுதந்திரப்போராட்டம்

Tuesday, February 7, 2017

மிருகங்களைப் பலியிடும் போது துலுக்குக் கேட்பது ஏன்?

                 இந்து சமயத்தில் 'பலி கொடுத்தல்' என்பது பிரபலமாக உள்ள ஒரு சடங்காகும். 'ஆகமம்' என்று அழைக்கப்படும் இந்து மத விதித் தொகுப்புகளில் பலி கொடுத்தல் சடங்குகள் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இந்த வழக்கம் தொன்று தொட்டுப் பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக அம்மன், முனியப்பன் போன்ற தெய்வங்களுக்கு சிற்றுயிர்களான கோழி, ஆடு, பன்றி போன்றவற்றைக் கோவில்களுக்குக் கொண்டு சென்று தெய்வங்களின் முன்னிலையில் அவைகளைக் கொன்று பலியிடுவது நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அவ்வாறு பலியிடப்படும் உயிர்கள் இறைவனின் திருவடியைச் சென்றடையும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.

பலி கொடுத்தல் சடங்கு 

                         அவ்வாறு பலி கொடுக்கக் கொண்டு செல்லப்படும் விலங்குகளை மாலையிட்டு உரிய மரியாதையுடன் அழைத்து வருகிறார்கள். மேலும் அந்த மிருகத்தை வெட்டுவதற்கு முன் 'துலுக்குக் கேட்பது' என்கிற உபசடங்கு செய்கிறார்கள். அதாவது அந்த ஆட்டையோ கோழியையோ வெட்டுவதற்கு முன் அது தனது தலையை உதற வேண்டும். முடி குத்திட்டு நிற்கும் மிருகத்தைப் பொதுவாக வெட்டுவதில்லை. 

அம்மன் கோவில் 

                      இந்தத் 'துலுக்குக் கேட்கும்' முறை எதற்காகப் பின்பற்றப் படுகிறது? இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்திற்குச் செல்லும் முன்னர் நமது உடலில் இருக்கும் 'அட்ரினல்' என்கிற சுரப்பியைப் பற்றியும் அது சுரக்கும் 'அட்ரினலின்' என்ற ஹார்மோனைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். நமது உடலில் சிறுநீரகத்தின் மேற்பகுதியில் அளவில் சிறிய ஒரு ஜோடி சுரப்பிகள் 'அட்ரினல்' என்ற பெயரில் உள்ளன. அதன் வேலை என்னவென்றால், ஆபத்துக் காலங்கள், உயிரைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணங்களில் நமது உடலின் சக்தியை அதிகப் படுத்துவது தான். பல்வேறு வேதி மாற்றங்களை நமது உடலில் இந்த அட்ரினலின் ஹார்மோன் செய்கிறது. 

               இந்த அட்ரினலின் ஹார்மோன், பலியிடப் போகும் அந்த மிருகங்களின் உடலில் சுரந்து அந்தக் கோழியையோ ஆட்டையோ ஒரு அசாதாரண நிலையில் வைத்திருக்கும். அந்த நிலையில் உள்ள இறைச்சி நாம் உண்ணத் தகுந்ததல்ல.அந்த மிருகங்களின் மனதில் ஏற்படும் பயத்தின் காரணமாகவே அட்ரினலின் சுரப்பு ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் அவைகளின் பயம் தெளிந்து சாதாரண நிலைக்கு வருகின்றன. அதற்கு அறிகுறியாகத் தனது தலையைக் குலுக்குகிறது. அவைகளின் மிரண்ட கண்கள் சாதாரண நிலைக்கு வருவதை நாம் கவனிக்க முடியும். அப்போது அட்ரினலின் சுரப்புக் குறைவதால் அந்த மிருகத்தின் இறைச்சி உண்ணத் தகுந்ததாக ஆகிறது. இதுவே 'துலுக்குக் கேட்கும்' சடங்கின் அர்த்தமும் அறிவியலும்.


டெயில் பீஸ்: 

                முஸ்லிம்கள் ஹலால் செய்த இறைச்சியை மட்டுமே உண்ணுவதும் இந்த 'அட்ரினல்' விவகாரம் காரணமாகத்தான். ஹலாலில் வலி உணர்த்தும் நரம்பினை முதலில் அறுப்பதாலும் பெரும்பான்மையான ரத்தத்தை வெளியேற்றி விடுவதாலும் அந்த இறைச்சி உண்ணத் தகுந்ததாக ஆகிறது.

#அட்ரினலின் #மிருகபலி #பலிகொடுத்தல்சடங்கு