Tuesday, November 11, 2014

அக்ஷய திரிதியை என்றால் என்ன?


                ஒவ்வொரு தமிழ் வருடம் சித்திரை மாதமும் நகைக் கடைகளால் அடையாளம் காட்டப்படும் திருநாள் தான் அக்ஷய திரிதியை. நகைக் கடைகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகள், பரிசுகள், இலவசங்கள் என்று அள்ளி அள்ளித் தருவதாக  விளம்பரப் படுத்திக் கலகலத்துக் கொண்டாடிவிடும். உண்மையில் இந்த அக்ஷய திரிதியை என்றால் என்ன? தங்கத்திற்கும் இந்த தினத்திற்கும் என்ன சம்பந்தம்? அக்ஷய திரிதியையில் பொன் வாங்கினால் செல்வம் பெருகுமா? சங்கடங்கள் தீருமா?


அருள் தரும் திருமகள் 


            இந்த நாளைப் பற்றிப் புராண, இதிகாச மேற்கோள்கள் பல உண்டு,  பரசுராமர் அவதரித்த தினம், மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் அக்ஷய பாத்திரம் பெற்ற தினம், பாற்கடலில் மகாலட்சுமி அவதரித்து, மகாவிஷ்ணுவை அடைந்த தினம் என்று பல மேற்கோள்கள். சரி... இந்த அக்ஷய திரிதியைக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? 

திரிதியை நிலவு 
                   இந்த வார்த்தையைப் பிரித்துப் பார்த்தால் பொருள் அறியலாம். 'க்ஷய' என்றால் 'தேய்கிற' என்று பொருள். 'அக்ஷய' என்பது அதன் எதிர்ப் பதம். அதாவது, 'வளர்கிற' என்று பொருள். நமது முந்தைய பதிவு ஒன்றில் திதிகள் பற்றிப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரக்கூடிய மூன்றாவது திதி திரிதியை திதி. 'அக்ஷய திரிதியை' என்றால் 'வளர்பிறைத் திரிதியை' என்பது மட்டுமே சாஸ்திரங்கள் கொடுக்கும் விளக்கம். பொதுவாகவே மூன்றாம் பிறையான திரிதியை திதி நல்ல நாளாக மக்களால் பார்க்கப் படுகிறது; ஆகவே அந்தக் காலத்தில் வருடத்தின் முதல் மாதமான சித்திரையின் வளர்பிறை மூன்றாம் நாளில் புதுக்கணக்கை ஆரம்பிப்பதோ தானியங்கள் வாங்குவதோ செய்யப்பட்டிருக்கலாம். மேலும் வேறு ஏதேனும் வாங்குவதும் அந்த நாளில் செய்யப்பட்டிருக்கும்; அதனால் ஒரு துவக்கத்தின் அடையாளமாகவே சித்திரை வளர்பிறை மூன்றாம் நாள் பார்க்கபட்டிருக்கலாம். அதுவே தொடர்ந்தும் இருக்கலாம். தங்கம் மட்டுமே இப்போது விளம்பரமும் வியாபாரமும் படுத்தப் படுகிறது.

அக்ஷய திரிதியை விற்பனை 

              இந்த நாளில் தான தருமங்கள் செய்வது நல்லது என்பதும் உண்மை; அது ஏனோ பிரபலமாகவில்லை. முனிவர்கள் யாகங்கள் செய்ய ஆரம்பிக்கத் தேர்ந்தெடுப்பதும் இந்த நாளைத்தான். இந்த நாளில் இறைவனின் அருளைப் பெற வேண்டுமானால் தங்கம் வாங்க வேண்டும் என்ற நம்பிக்கை தவறு. தங்கம் வாங்க முடிந்தவர்களுக்கு ஒரு விதமான அருளையும் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு விதமான அருளையும் இறைவன் வழங்குவதில்லை; அவன் அருள் அந்த வானத்தைப் போன்று அனைவருக்கும் பொதுவானது.
#அக்ஷய திரிதியை #தங்கம்

Tuesday, November 4, 2014

ராமரும் தீபாவளியும்

    தீபாவளி என்பது ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதைத்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய நாள் என்று புராணக் குறிப்புகள் கூறுகின்றன. ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் சதுர்த்தசி நாள் (அதாவது அமாவாசைக்கு முந்தைய நாள்) தீபாவளியாகவும், வட இந்திய மாநிலங்களில் அமாவாசை நாளே தீபாவளியாகவும் கொண்டாடப் படுகிறது. சில நேரங்களில் சதுர்த்தசி திதி அடுத்த நாளிலும் தொடர்ந்தால் வட இந்திய, தென்னிந்திய தீபாவளிகள் இரண்டும் ஒரே நாளில் கொண்டாடப் படுகின்றன. 
        அமாவாசை அன்று தீபாவளியைக் கொண்டாடுவதற்குக் காரணம் உண்டு. ராமாயணக் காவியத்தில் ஒரு ஐப்பசி மாத அமாவசை அன்று தான் ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் தமது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்து அயோத்திக்குத் திரும்புகின்றனர். அயோத்தி மக்களும் அந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாகத் தங்கள் வீடுகளில் விளக்கேற்றித் தங்கள் மகிழ்ச்சியை ராமர், சீதை மற்றும் லட்சுமணருக்குத் தெரிவித்தனர்.



        அப்போது முதல் ஐப்பசியில் தீபங்கள் ஏற்றி வைத்துக் கொண்டாடும் பழக்கம்   நடைமுறைக்கு வந்துள்ளது. நாம் தமிழ்நாட்டில் கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். வட மாநிலங்களில் தீபாவளியன்றே தீபங்கள் ஏற்றிக் கொண்டாடி விடுகிறார்கள்; அதற்குக் காரணம் இது தான்.

           தீபாவளி என்ற வார்த்தையின் விளக்கமும் இதையே கூறுகிறது. 'ஆவளி' என்றால் 'வரிசை' என்று அர்த்தம். (உதாரணத்திற்கு, '1008 நாமாவளி'  என்பது 1008 நாமங்களின், அதாவது பெயர்களின் வரிசை) 'தீபாவளி' என்பது 'தீபங்களின் வரிசை' என்ற அர்த்தத்தில் கூறப்பட்டது தான். 

              
தீபாவளிக் கொண்டாட்டம் 

              கிருஷ்ண அவதாரத்திற்கு முந்தின அவதாரம் ராம அவதாரம்; அதனால் ராமர் தீபாவளி கொண்டாடியிருக்க மாட்டார் என்று சிலர் சொல்வது உண்டு.  ஆனால் ராமரால், ராமருக்காகத் தான் முதன் முதலில் தீபாவளி உருவானதும் கொண்டாடப் பட்டதும் என்பது தான் இதிகாச உண்மை.   


#தீபாவளி #ராமர் #கிருஷ்ணர்

Wednesday, September 24, 2014

பல்லாங்குழி விளையாட்டும் Quantity Analysis-உம்.... A Mind Game!

       பல்லாங்குழி விளையாட்டைப் பத்தி நம்மள்ள நிறைய பேருக்குத் தெரியும். பலர் விளையாடியும் இருப்போம். இது சங்க கால விளையாட்டுகள்ல ஒன்னு. குறிப்பாகப் பெண்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு இது. இளவயதுப் பெண்கள் பல்லாங்குழி விளையாடும்படி ஊக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள். இன்றும் நகரங்களிலும், கிராமங்களிலும் நிறைய இடங்களில் சிறுமிகள் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்.

பல்லாங்குழி விளையாடும் சிறுமிகள்
          பல்லாங்குழிப் பலகையில்  இரண்டு வரிசைகளில் குழிகள் போன்ற அமைப்புகள் இருக்கும். ஒவ்வொரு  வரிசையிலும் ஏழு அல்லது ஒன்பது குழிகள் இருக்கும். சோழிகள் அல்லது புளியங்கொட்டைகளை ஒரே எண்ணிக்கையில் அந்தக் குழிகளில் நிரப்பி விளையாட்டை ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு குழியிலும் இருக்கும் சோழிகளை அள்ளி மீதமிருக்கும் குழிகளில், குழிக்கு ஒன்றாக வரிசையாகப் போட்டுக் கொண்டே வருவார்கள். எந்தக் குழியில் இருந்து எடுத்து விளையாடுவது என்பதில் தான் ஆடுபவரின் புத்திசாலித்தனமும் வெற்றியும் இருக்கிறது.

பல்லாங்குழிப் பலகை
                சோழிகள் தீரும் குழிக்கு அடுத்த குழியில் இருந்து மீண்டும் சோழிகளை எடுத்து விளையாடுவதன் மூலம் ஆட்டம் தொடரும். சோழிகள் முடியும் குழிக்கு அடுத்த குழி காலியான குழியாக இருந்தால், காலியான குழிக்கு அடுத்த குழியில் இருக்கும் அனைத்து சோழிகளையும் ஆடுபவர் எடுத்துத் தன்னுடைய லாபக் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். ஆட்டம் முடியும் போது யாருடைய லாபக் கணக்கில் அதிக சோழிகள் உள்ளனவோ அவரே வெற்றி பெற்றவர். 

           ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது குழிகளில் இருக்கும் சோழிகளின் எண்ணிக்கை சரியாகப் புலப்படாது. அதனால் சோழிகளின் எண்ணிக்கையை எண்ணிப் பார்க்காமலேயே கண்ணில் தெரியும் அளவை வைத்தே தெரிந்து கொண்டு குழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது, இந்தக் குழியில் இருக்கும் சோழிகள் இத்தனை குழிகளுக்கு வரும் என்ற அளவு, கண்ணால் பார்த்தே தீர்மானிக்கப் பட வேண்டும். 

பல்லாங்குழியும் Quantity analysis - உம் 

  பெண்கள் தங்கள் பால்யப் பருவத்தில் விளையாடும் இந்த விளையாட்டானது, பிற்காலத்தில் அவர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது உதவியாக இருக்கிறது. அதாவது, இவ்வளவு பேருக்கு இவ்வளவு அரிசியைத் தொகுப்பிலிருந்து எடுத்து சமைத்தால் இவ்வளவு சாதம் வரும் என்பதைக் கண்ணால் பார்த்தே தீர்மானிப்பதற்கு உதவுகிறது. மேலும் பந்திகளில் உணவு பரிமாறும் போதும் தொகுப்பிலிருந்து எவ்வளவு சாதம் மற்றும் இதர பதார்த்தங்களை எடுத்துச் சென்றால் ஒரு பந்திக்கு வரும் என்பதைக் கண்ணால் கணக்கிட்டே சரியாகச்  முடியும். இவற்றுக்கான பயிற்சியாகத்தான் பல்லாங்குழி விளையாட்டு, பருவமடைந்த பெண்களுக்கான விளையாட்டாக ஆக்கப் பட்டிருக்கிறது. பல்லாங்குழி என்பது அளவிடுதல் பயிற்சி. It is a Quantity Analysis training. அது ஒரு மன விளையாட்டு. (A Mind Game....)
            

பல்லாங்குழி விளையாடும் ஹர்பஜன்
     இங்கே பல்லாங்குழி விளையாடுபவர்கள் ஹர்பஜன், சேவாக், மற்றும் பலர்....

படங்கள் - நன்றி: www.....
#பாரம்பரிய விளையாட்டுக்கள் #பல்லாங்குழி #mind game #quantity analysis 

Friday, September 5, 2014

Warm or Cold? வரவேற்பு எப்படி?

    ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் வார்த்தைகளும் வாக்கிய அமைப்புக்களும் (பேச்சு வழக்கு என்று சொல்கிறோமல்லவா? அது) அந்தந்த மொழி பேசப்படும் நாடு அல்லது நிலப் பகுதியின் புவியியல் அமைப்பையும் அங்கு நிலவும் தட்ப வெப்ப நிலையையும் பொறுத்தே அமைகிறது. குளிர் நாடுகளில் வெப்பம் என்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகவும் வெப்ப நாடுகளில் குளிர்ச்சி என்பது  மகிழ்ச்சி தரும் விஷயமாகவும் இருக்கிறது. சில மொழிகளின் வாக்கிய அமைப்புக்களில் இதனை உணர முடிகிறது.
        குளிர் நாடுகளில் புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் வெப்ப நாடுகளில் வேறு மாதிரியான அர்த்தத்தைத் தருகின்றன. உதாரணத்திற்கு, ஆங்கிலம் குளிர் நாடான இங்கிலாந்தின் மொழி. அங்கே "அன்பான வரவேற்பு" என்பதை "Warm Welcome" என்கிறார்கள். வார்த்தையில் மட்டுமில்லாமல் பழக்கத்திலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள். கைகளைக் குலுக்குவதில் ஒரு இதமான வெப்பத்தினை வரவேற்கப்படுபவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் அன்பை வெளிப்படுத்தி வரவேற்கிறார்கள். அதுவே "Warm Welcome"!

Warm Welcome
                 வெப்பப் பிரதேசமான தமிழ் நாட்டில் குளிர்ச்சியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். நமது வாக்கிய அமைப்பில் "அகம் குளிர்ந்த வரவேற்பு", "அகமும் முகமும் குளிர வரவேற்கிறோம்" போன்ற வார்த்தைகளைப் பார்க்கிறோம். திருமண மண்டபங்களில் பன்னீர் தெளித்தும், குளிர்ச்சியான சந்தனம் கொடுத்தும் வரவேற்பு கொடுக்கப் படுகிறது. அது "குளிர்ந்த வரவேற்பு"!

குளிர்ந்த வரவேற்பு 

                       இப்போது சொல்லுங்கள்..... Warm or Cold? உங்கள் வரவேற்பு எப்படி?

படங்கள் - நன்றி: www ......!

Friday, August 22, 2014

யோகி, போகி, ரோகி.... யார்?

"ஒரு வேளை உண்பான் யோகி
 இரு வேளை உண்பான் போகி
 மூவேளை உண்பான் ரோகி"
          என்று உணவு உண்ணுதலைப் பற்றி எடுத்துரைக்கிறது சித்த மருத்துவம். 
  ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் யோகமாம்; யோகம் என்பதற்கு 'அதிர்ஷ்டம்' என்ற அர்த்தமும் இருக்கிறது. உணவை ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே உண்டு அதிலேயே அப்படியே வாழ முடிந்தவன், வாழத் தெரிந்தவன் யோகி - அதிர்ஷ்டசாலி.
    இரண்டு வேளை சாப்பிடுபவன் போகியாம்; போகம் என்றால் சுகமாக, வசதியாக வாழ்வது. வசதியாக வாழ முடிபவன், வாழ விரும்புகிறவன் இரண்டு வேளை சாப்பிடலாமாம். 
        மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகியாம்; ரோகம் என்றால் நோய். மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாளியாவான். 

           ஆனால் நாம் டீ, காபி சேர்த்து குறைந்தது ஐந்து வேளை சாப்பிடுகிறோம். 

                     
                        சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்து விட்டனர்; நல்லவேளை...   

                                                                                                Posted By: Kiruthika Vishnu.
#சித்தர்கள் #யோகி #போகி #ரோகி 

Saturday, August 9, 2014

தேரை ஓட்டுவது இங்கே யார்?



    
     மகாபாரதக் கதையில் போர்க் களத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டுகிறார். (பார்த்திபனாகிய அர்ஜுனனுக்கு சாரதியானதார். அதனாலேயே அவர் பெயர் பார்த்தசாரதி.) அர்ஜுனனை வெற்றி பெறச் செய்கிறார். இளவரசன் அர்ஜுனனுக்கு தேரோட்டிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதா? கிருஷ்ணர் ஏன் தேரை ஓட்ட வேண்டும்? அவர் வெறும் டிரைவரா? இல்லை. Driving Force. அர்ஜுனன் தனது தேரை ஓட்டுபவனாக பகவானை நினைக்கவில்லை. தன்னைச் செலுத்தும் விசையாக பகவானை நினைத்தான். வழிகாட்டியாக ஏற்றான். வெற்றியை அடைந்தான்.

He is the Driving Force.
             அர்ஜுனன் என்னும் மனம் வாழ்க்கை என்னும் தேரைக் கடவுளிடம் ஒப்படைக்கும் போது தான் வெற்றியை அடையும். வாழ்க்கை என்னும் வண்டியை அவனிடம் ஒப்படைத்து விட்டால் போதும். வண்டியிலே பிரேக் சரியாக வேலை செய்கிறதா? என்ன வேகத்தில் ஓட்டுவது? பெட்ரோல் எப்போது தீரும்? அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வானே! It is as simple as that. அவன் நாம் போக நினைக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பான். என் வண்டியை நானே ஓட்டிக் கொள்ளவும் முடியும். அப்போது எல்லாப் பொறுப்புக்களும் என்னுடையது அல்லவா? எனக்கு இது போல்  tension-free travel கிடைக்குமா? கடவுள் நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் அது இல்லாமல் வாழ்வதற்கும் இதுவே வித்தியாசம். 

                                                                                      Posted By: Kiruthika Vishnu.

Tuesday, July 1, 2014

அயன்னா சூர்யா... 'அயம்'ன்னா?

           அயம் என்றால் இரும்பு. 'அயன்' என்கிற சொல்லை 'இரும்பு மனிதன்' என்ற அர்த்தத்தில் அந்தத் திரைப்படத்தில் பயன் படுத்தி இருக்கலாம். ('அயன்' என்கிற சொல் கடவுள் பிரம்மாவையும் குறிக்கும்.)

அயன் 

அயம் 

           வெந்தயத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் தான் அதற்கு 'வெந்த+அயம்'='வெந்தயம்' என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.
   
வெந்தயம் (Fenugreek)
             கீழே இருக்கும் அட்டவணை வெந்தயத்தில் இருக்கும் தாது உப்புக்களின் பட்டியல்.

வெந்தயம் சத்துப் பட்டியல் 

                   100 கிராம் வெந்தயத்தில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் இரும்புச் சத்தில் 419% இருக்கிறது. அதாவது 20 கிராம் வெந்தயம் மட்டுமே ஒரு நாளைக்குத் தேவையான இரும்புச் சத்தினைக் கொடுத்து விடுகிறது.

                  இங்கிலீஷ்ல 'அயர்ன் மேன்' னா தான் 'இரும்பு மனிதன்'.  தமிழ்ல சின்னதா 'அயன்' னு சொன்னாலே இரும்பு மனிதன் தான்.   
                   
                                                                                         Posted By: Kiruthika Vishnu.
#அயன் #அயம் #வெந்தயம்