Wednesday, December 10, 2014

மதியும் நிம்மதியும்

            நிவாஸம் என்றால் நிரந்தரமான வாஸம்; அதாவது நிரந்தரமாக ஒரு இடத்தில் வசிப்பது. வீடுகளுக்குப் பெயர் வைக்கும் போது 'நிவாஸம்' என்று பெயர் வைப்பதைப் பார்த்திருக்கிறோம். (உ-ம்: 'ஆனந்த நிவாஸம்'). திருப்பதி ஏழுமலையானுக்கு 'ஸ்ரீநிவாசன்' என்று பெயர். 'ஸ்ரீ'யாகிய மகாலட்சுமி நிரந்தர வாசம் செய்யும் இடம் ஏழுமலையானிடம் தான். அதனால் தான் அந்தப் பெயர். 'நி' என்பது 'நிரந்தரம்' என்பதன் சுருக்கமே.

ஏழுமலையான் - ஸ்ரீநிவாசன் 

           அப்படிஎன்றால் 'நிம்மதி' என்பதற்கு 'நிரந்தரமான மதி' என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா? மதியூகத்துடன் (அறிவுடன்) எப்போதும் இருந்து வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நிம்மதியாக இருக்கலாம். இங்கே அறிவு என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் அறிவு; அந்த அறிவு நிரந்தரமாக இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்கும்.
#திருப்பதி #ஏழுமலையான் #நிம்மதி 

Tuesday, November 11, 2014

அக்ஷய திரிதியை என்றால் என்ன?


                ஒவ்வொரு தமிழ் வருடம் சித்திரை மாதமும் நகைக் கடைகளால் அடையாளம் காட்டப்படும் திருநாள் தான் அக்ஷய திரிதியை. நகைக் கடைகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகள், பரிசுகள், இலவசங்கள் என்று அள்ளி அள்ளித் தருவதாக  விளம்பரப் படுத்திக் கலகலத்துக் கொண்டாடிவிடும். உண்மையில் இந்த அக்ஷய திரிதியை என்றால் என்ன? தங்கத்திற்கும் இந்த தினத்திற்கும் என்ன சம்பந்தம்? அக்ஷய திரிதியையில் பொன் வாங்கினால் செல்வம் பெருகுமா? சங்கடங்கள் தீருமா?


அருள் தரும் திருமகள் 


            இந்த நாளைப் பற்றிப் புராண, இதிகாச மேற்கோள்கள் பல உண்டு,  பரசுராமர் அவதரித்த தினம், மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் அக்ஷய பாத்திரம் பெற்ற தினம், பாற்கடலில் மகாலட்சுமி அவதரித்து, மகாவிஷ்ணுவை அடைந்த தினம் என்று பல மேற்கோள்கள். சரி... இந்த அக்ஷய திரிதியைக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? 

திரிதியை நிலவு 
                   இந்த வார்த்தையைப் பிரித்துப் பார்த்தால் பொருள் அறியலாம். 'க்ஷய' என்றால் 'தேய்கிற' என்று பொருள். 'அக்ஷய' என்பது அதன் எதிர்ப் பதம். அதாவது, 'வளர்கிற' என்று பொருள். நமது முந்தைய பதிவு ஒன்றில் திதிகள் பற்றிப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரக்கூடிய மூன்றாவது திதி திரிதியை திதி. 'அக்ஷய திரிதியை' என்றால் 'வளர்பிறைத் திரிதியை' என்பது மட்டுமே சாஸ்திரங்கள் கொடுக்கும் விளக்கம். பொதுவாகவே மூன்றாம் பிறையான திரிதியை திதி நல்ல நாளாக மக்களால் பார்க்கப் படுகிறது; ஆகவே அந்தக் காலத்தில் வருடத்தின் முதல் மாதமான சித்திரையின் வளர்பிறை மூன்றாம் நாளில் புதுக்கணக்கை ஆரம்பிப்பதோ தானியங்கள் வாங்குவதோ செய்யப்பட்டிருக்கலாம். மேலும் வேறு ஏதேனும் வாங்குவதும் அந்த நாளில் செய்யப்பட்டிருக்கும்; அதனால் ஒரு துவக்கத்தின் அடையாளமாகவே சித்திரை வளர்பிறை மூன்றாம் நாள் பார்க்கபட்டிருக்கலாம். அதுவே தொடர்ந்தும் இருக்கலாம். தங்கம் மட்டுமே இப்போது விளம்பரமும் வியாபாரமும் படுத்தப் படுகிறது.

அக்ஷய திரிதியை விற்பனை 

              இந்த நாளில் தான தருமங்கள் செய்வது நல்லது என்பதும் உண்மை; அது ஏனோ பிரபலமாகவில்லை. முனிவர்கள் யாகங்கள் செய்ய ஆரம்பிக்கத் தேர்ந்தெடுப்பதும் இந்த நாளைத்தான். இந்த நாளில் இறைவனின் அருளைப் பெற வேண்டுமானால் தங்கம் வாங்க வேண்டும் என்ற நம்பிக்கை தவறு. தங்கம் வாங்க முடிந்தவர்களுக்கு ஒரு விதமான அருளையும் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு விதமான அருளையும் இறைவன் வழங்குவதில்லை; அவன் அருள் அந்த வானத்தைப் போன்று அனைவருக்கும் பொதுவானது.
#அக்ஷய திரிதியை #தங்கம்

Tuesday, November 4, 2014

ராமரும் தீபாவளியும்

    தீபாவளி என்பது ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதைத்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய நாள் என்று புராணக் குறிப்புகள் கூறுகின்றன. ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் சதுர்த்தசி நாள் (அதாவது அமாவாசைக்கு முந்தைய நாள்) தீபாவளியாகவும், வட இந்திய மாநிலங்களில் அமாவாசை நாளே தீபாவளியாகவும் கொண்டாடப் படுகிறது. சில நேரங்களில் சதுர்த்தசி திதி அடுத்த நாளிலும் தொடர்ந்தால் வட இந்திய, தென்னிந்திய தீபாவளிகள் இரண்டும் ஒரே நாளில் கொண்டாடப் படுகின்றன. 
        அமாவாசை அன்று தீபாவளியைக் கொண்டாடுவதற்குக் காரணம் உண்டு. ராமாயணக் காவியத்தில் ஒரு ஐப்பசி மாத அமாவசை அன்று தான் ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் தமது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்து அயோத்திக்குத் திரும்புகின்றனர். அயோத்தி மக்களும் அந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாகத் தங்கள் வீடுகளில் விளக்கேற்றித் தங்கள் மகிழ்ச்சியை ராமர், சீதை மற்றும் லட்சுமணருக்குத் தெரிவித்தனர்.



        அப்போது முதல் ஐப்பசியில் தீபங்கள் ஏற்றி வைத்துக் கொண்டாடும் பழக்கம்   நடைமுறைக்கு வந்துள்ளது. நாம் தமிழ்நாட்டில் கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். வட மாநிலங்களில் தீபாவளியன்றே தீபங்கள் ஏற்றிக் கொண்டாடி விடுகிறார்கள்; அதற்குக் காரணம் இது தான்.

           தீபாவளி என்ற வார்த்தையின் விளக்கமும் இதையே கூறுகிறது. 'ஆவளி' என்றால் 'வரிசை' என்று அர்த்தம். (உதாரணத்திற்கு, '1008 நாமாவளி'  என்பது 1008 நாமங்களின், அதாவது பெயர்களின் வரிசை) 'தீபாவளி' என்பது 'தீபங்களின் வரிசை' என்ற அர்த்தத்தில் கூறப்பட்டது தான். 

              
தீபாவளிக் கொண்டாட்டம் 

              கிருஷ்ண அவதாரத்திற்கு முந்தின அவதாரம் ராம அவதாரம்; அதனால் ராமர் தீபாவளி கொண்டாடியிருக்க மாட்டார் என்று சிலர் சொல்வது உண்டு.  ஆனால் ராமரால், ராமருக்காகத் தான் முதன் முதலில் தீபாவளி உருவானதும் கொண்டாடப் பட்டதும் என்பது தான் இதிகாச உண்மை.   


#தீபாவளி #ராமர் #கிருஷ்ணர்

Wednesday, September 24, 2014

பல்லாங்குழி விளையாட்டும் Quantity Analysis-உம்.... A Mind Game!

       பல்லாங்குழி விளையாட்டைப் பத்தி நம்மள்ள நிறைய பேருக்குத் தெரியும். பலர் விளையாடியும் இருப்போம். இது சங்க கால விளையாட்டுகள்ல ஒன்னு. குறிப்பாகப் பெண்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு இது. இளவயதுப் பெண்கள் பல்லாங்குழி விளையாடும்படி ஊக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள். இன்றும் நகரங்களிலும், கிராமங்களிலும் நிறைய இடங்களில் சிறுமிகள் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்.

பல்லாங்குழி விளையாடும் சிறுமிகள்
          பல்லாங்குழிப் பலகையில்  இரண்டு வரிசைகளில் குழிகள் போன்ற அமைப்புகள் இருக்கும். ஒவ்வொரு  வரிசையிலும் ஏழு அல்லது ஒன்பது குழிகள் இருக்கும். சோழிகள் அல்லது புளியங்கொட்டைகளை ஒரே எண்ணிக்கையில் அந்தக் குழிகளில் நிரப்பி விளையாட்டை ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு குழியிலும் இருக்கும் சோழிகளை அள்ளி மீதமிருக்கும் குழிகளில், குழிக்கு ஒன்றாக வரிசையாகப் போட்டுக் கொண்டே வருவார்கள். எந்தக் குழியில் இருந்து எடுத்து விளையாடுவது என்பதில் தான் ஆடுபவரின் புத்திசாலித்தனமும் வெற்றியும் இருக்கிறது.

பல்லாங்குழிப் பலகை
                சோழிகள் தீரும் குழிக்கு அடுத்த குழியில் இருந்து மீண்டும் சோழிகளை எடுத்து விளையாடுவதன் மூலம் ஆட்டம் தொடரும். சோழிகள் முடியும் குழிக்கு அடுத்த குழி காலியான குழியாக இருந்தால், காலியான குழிக்கு அடுத்த குழியில் இருக்கும் அனைத்து சோழிகளையும் ஆடுபவர் எடுத்துத் தன்னுடைய லாபக் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். ஆட்டம் முடியும் போது யாருடைய லாபக் கணக்கில் அதிக சோழிகள் உள்ளனவோ அவரே வெற்றி பெற்றவர். 

           ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது குழிகளில் இருக்கும் சோழிகளின் எண்ணிக்கை சரியாகப் புலப்படாது. அதனால் சோழிகளின் எண்ணிக்கையை எண்ணிப் பார்க்காமலேயே கண்ணில் தெரியும் அளவை வைத்தே தெரிந்து கொண்டு குழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது, இந்தக் குழியில் இருக்கும் சோழிகள் இத்தனை குழிகளுக்கு வரும் என்ற அளவு, கண்ணால் பார்த்தே தீர்மானிக்கப் பட வேண்டும். 

பல்லாங்குழியும் Quantity analysis - உம் 

  பெண்கள் தங்கள் பால்யப் பருவத்தில் விளையாடும் இந்த விளையாட்டானது, பிற்காலத்தில் அவர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது உதவியாக இருக்கிறது. அதாவது, இவ்வளவு பேருக்கு இவ்வளவு அரிசியைத் தொகுப்பிலிருந்து எடுத்து சமைத்தால் இவ்வளவு சாதம் வரும் என்பதைக் கண்ணால் பார்த்தே தீர்மானிப்பதற்கு உதவுகிறது. மேலும் பந்திகளில் உணவு பரிமாறும் போதும் தொகுப்பிலிருந்து எவ்வளவு சாதம் மற்றும் இதர பதார்த்தங்களை எடுத்துச் சென்றால் ஒரு பந்திக்கு வரும் என்பதைக் கண்ணால் கணக்கிட்டே சரியாகச்  முடியும். இவற்றுக்கான பயிற்சியாகத்தான் பல்லாங்குழி விளையாட்டு, பருவமடைந்த பெண்களுக்கான விளையாட்டாக ஆக்கப் பட்டிருக்கிறது. பல்லாங்குழி என்பது அளவிடுதல் பயிற்சி. It is a Quantity Analysis training. அது ஒரு மன விளையாட்டு. (A Mind Game....)
            

பல்லாங்குழி விளையாடும் ஹர்பஜன்
     இங்கே பல்லாங்குழி விளையாடுபவர்கள் ஹர்பஜன், சேவாக், மற்றும் பலர்....

படங்கள் - நன்றி: www.....
#பாரம்பரிய விளையாட்டுக்கள் #பல்லாங்குழி #mind game #quantity analysis 

Friday, September 5, 2014

Warm or Cold? வரவேற்பு எப்படி?

    ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் வார்த்தைகளும் வாக்கிய அமைப்புக்களும் (பேச்சு வழக்கு என்று சொல்கிறோமல்லவா? அது) அந்தந்த மொழி பேசப்படும் நாடு அல்லது நிலப் பகுதியின் புவியியல் அமைப்பையும் அங்கு நிலவும் தட்ப வெப்ப நிலையையும் பொறுத்தே அமைகிறது. குளிர் நாடுகளில் வெப்பம் என்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகவும் வெப்ப நாடுகளில் குளிர்ச்சி என்பது  மகிழ்ச்சி தரும் விஷயமாகவும் இருக்கிறது. சில மொழிகளின் வாக்கிய அமைப்புக்களில் இதனை உணர முடிகிறது.
        குளிர் நாடுகளில் புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் வெப்ப நாடுகளில் வேறு மாதிரியான அர்த்தத்தைத் தருகின்றன. உதாரணத்திற்கு, ஆங்கிலம் குளிர் நாடான இங்கிலாந்தின் மொழி. அங்கே "அன்பான வரவேற்பு" என்பதை "Warm Welcome" என்கிறார்கள். வார்த்தையில் மட்டுமில்லாமல் பழக்கத்திலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள். கைகளைக் குலுக்குவதில் ஒரு இதமான வெப்பத்தினை வரவேற்கப்படுபவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் அன்பை வெளிப்படுத்தி வரவேற்கிறார்கள். அதுவே "Warm Welcome"!

Warm Welcome
                 வெப்பப் பிரதேசமான தமிழ் நாட்டில் குளிர்ச்சியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். நமது வாக்கிய அமைப்பில் "அகம் குளிர்ந்த வரவேற்பு", "அகமும் முகமும் குளிர வரவேற்கிறோம்" போன்ற வார்த்தைகளைப் பார்க்கிறோம். திருமண மண்டபங்களில் பன்னீர் தெளித்தும், குளிர்ச்சியான சந்தனம் கொடுத்தும் வரவேற்பு கொடுக்கப் படுகிறது. அது "குளிர்ந்த வரவேற்பு"!

குளிர்ந்த வரவேற்பு 

                       இப்போது சொல்லுங்கள்..... Warm or Cold? உங்கள் வரவேற்பு எப்படி?

படங்கள் - நன்றி: www ......!

Friday, August 22, 2014

யோகி, போகி, ரோகி.... யார்?

"ஒரு வேளை உண்பான் யோகி
 இரு வேளை உண்பான் போகி
 மூவேளை உண்பான் ரோகி"
          என்று உணவு உண்ணுதலைப் பற்றி எடுத்துரைக்கிறது சித்த மருத்துவம். 
  ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் யோகமாம்; யோகம் என்பதற்கு 'அதிர்ஷ்டம்' என்ற அர்த்தமும் இருக்கிறது. உணவை ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே உண்டு அதிலேயே அப்படியே வாழ முடிந்தவன், வாழத் தெரிந்தவன் யோகி - அதிர்ஷ்டசாலி.
    இரண்டு வேளை சாப்பிடுபவன் போகியாம்; போகம் என்றால் சுகமாக, வசதியாக வாழ்வது. வசதியாக வாழ முடிபவன், வாழ விரும்புகிறவன் இரண்டு வேளை சாப்பிடலாமாம். 
        மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகியாம்; ரோகம் என்றால் நோய். மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாளியாவான். 

           ஆனால் நாம் டீ, காபி சேர்த்து குறைந்தது ஐந்து வேளை சாப்பிடுகிறோம். 

                     
                        சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்து விட்டனர்; நல்லவேளை...   

                                                                                                Posted By: Kiruthika Vishnu.
#சித்தர்கள் #யோகி #போகி #ரோகி 

Saturday, August 9, 2014

தேரை ஓட்டுவது இங்கே யார்?



    
     மகாபாரதக் கதையில் போர்க் களத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டுகிறார். (பார்த்திபனாகிய அர்ஜுனனுக்கு சாரதியானதார். அதனாலேயே அவர் பெயர் பார்த்தசாரதி.) அர்ஜுனனை வெற்றி பெறச் செய்கிறார். இளவரசன் அர்ஜுனனுக்கு தேரோட்டிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதா? கிருஷ்ணர் ஏன் தேரை ஓட்ட வேண்டும்? அவர் வெறும் டிரைவரா? இல்லை. Driving Force. அர்ஜுனன் தனது தேரை ஓட்டுபவனாக பகவானை நினைக்கவில்லை. தன்னைச் செலுத்தும் விசையாக பகவானை நினைத்தான். வழிகாட்டியாக ஏற்றான். வெற்றியை அடைந்தான்.

He is the Driving Force.
             அர்ஜுனன் என்னும் மனம் வாழ்க்கை என்னும் தேரைக் கடவுளிடம் ஒப்படைக்கும் போது தான் வெற்றியை அடையும். வாழ்க்கை என்னும் வண்டியை அவனிடம் ஒப்படைத்து விட்டால் போதும். வண்டியிலே பிரேக் சரியாக வேலை செய்கிறதா? என்ன வேகத்தில் ஓட்டுவது? பெட்ரோல் எப்போது தீரும்? அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வானே! It is as simple as that. அவன் நாம் போக நினைக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பான். என் வண்டியை நானே ஓட்டிக் கொள்ளவும் முடியும். அப்போது எல்லாப் பொறுப்புக்களும் என்னுடையது அல்லவா? எனக்கு இது போல்  tension-free travel கிடைக்குமா? கடவுள் நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் அது இல்லாமல் வாழ்வதற்கும் இதுவே வித்தியாசம். 

                                                                                      Posted By: Kiruthika Vishnu.

Tuesday, July 1, 2014

அயன்னா சூர்யா... 'அயம்'ன்னா?

           அயம் என்றால் இரும்பு. 'அயன்' என்கிற சொல்லை 'இரும்பு மனிதன்' என்ற அர்த்தத்தில் அந்தத் திரைப்படத்தில் பயன் படுத்தி இருக்கலாம். ('அயன்' என்கிற சொல் கடவுள் பிரம்மாவையும் குறிக்கும்.)

அயன் 

அயம் 

           வெந்தயத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் தான் அதற்கு 'வெந்த+அயம்'='வெந்தயம்' என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.
   
வெந்தயம் (Fenugreek)
             கீழே இருக்கும் அட்டவணை வெந்தயத்தில் இருக்கும் தாது உப்புக்களின் பட்டியல்.

வெந்தயம் சத்துப் பட்டியல் 

                   100 கிராம் வெந்தயத்தில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் இரும்புச் சத்தில் 419% இருக்கிறது. அதாவது 20 கிராம் வெந்தயம் மட்டுமே ஒரு நாளைக்குத் தேவையான இரும்புச் சத்தினைக் கொடுத்து விடுகிறது.

                  இங்கிலீஷ்ல 'அயர்ன் மேன்' னா தான் 'இரும்பு மனிதன்'.  தமிழ்ல சின்னதா 'அயன்' னு சொன்னாலே இரும்பு மனிதன் தான்.   
                   
                                                                                         Posted By: Kiruthika Vishnu.
#அயன் #அயம் #வெந்தயம்

Saturday, June 28, 2014

Brain Exercise for kids.

Try to form a meaningful sentence which contains all the English alphabets....
.
.
.
"The quick brown fox jumps over a lazy dog" 



Trying to check? Have a nice day....
#vocabulary games #வார்த்தை விளையாட்டு 

An interesting fact!

Look at the first picture...
He is a steward. A steward is a person who looks after the passengers on a ship, aircraft, or train.

Steward
The second picture...
She is a stewardess. A female steward.

Stewardess
The third picture...
Stewardesses. Crew of female stewards.

Stewardesses
What is so special with this?
Now look at the fourth picture.



'STEWARDESSES' is the longest meaningful word that can be typed in the QWERTY keyboard with only left hand.

Try checking this... Have a nice day!

#vocabulary games #வார்த்தை விளையாட்டு 

Friday, June 27, 2014

சமாதானத்தை அறிவுறுத்தும் போர்க் கடவுள் முருகன்

       இந்து சமய நம்பிக்கையில் முருகனே போர்க் கடவுளாகக் கருதப் படுகிறார். மன்னராட்சிக் காலங்களில் போருக்குப் போகும் வீரர்கள் "வெற்றிவேல்! வீரவேல்!" என்று கோஷமிட்டபடிப் போருக்குக் கிளம்புவார்கள். மனதில் வீரத்தையும் போரில் வெற்றியையும் தருபவர் வேலுடன் இருக்கும் முருகப் பெருமான் என்று நம்பினார்கள். முருகனின் கையில் வேல் இருப்பதே முருகன் போர்க் கடவுள் என்பதால் தான். 
               

வேல் பிடித்திருக்கும் போர்க் கடவுள் முருகன்

                     தமிழர் நாகரிகத்தில் போரின் முடிவு 'சமாதானம்' என்ற நிலையை எட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். அது போர்க் கடவுளான முருகப் பெருமானின் உருவ அமைப்பிலேயே காட்டப் பட்டிருக்கிறது. முருகனின் காலடியில் என்ன பார்க்கிறோம்? இந்தப் படத்தில் பாருங்கள்!

பாம்பும் மயிலும் அருகருகே 
                             பாம்பும் மயிலும் அருகருகே இருக்கின்றன இல்லையா? பாம்பும் மயிலும் பரம எதிரிகள். மயிலின் முட்டை பாம்புக்கு உணவு - பாம்பு மயிலுக்கு உணவு. எதிரிகள் இரண்டும் முருகனின் காலடியில் பகையை மறந்து ஒற்றுமையாய் நின்று கொண்டிருக்கும் காட்சியைத் தான் நாம் எல்லா முருகன் படங்களிலும் பார்க்கிறோம். அதாவது சண்டையின் முடிவு சமாதானமாக இருக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. வேறு எந்த மதத்தின் போர்க் கடவுளின் உருவத்திலும் இது போன்ற கோட்பாடு அமைக்கப் படவில்லை.
                          உதாரணத்திற்கு, கீழே இருப்பவை இரண்டும் ரோமானியப் போர்க் கடவுளான மார்ஸ்-இன் (Mars) உருவ அமைப்பு.

மார்ஸ் - ரோமானிய போர்க் கடவுள் 

சமாதானத்தை குறிக்கும் சின்னங்கள் ஏதுமில்லை.
              ரோமானிய மார்ஸ் உருவத்தில் சமாதானத்தைக் குறிக்கும் சின்னங்கள் ஏதும் அமைக்கப் பட வில்லை.
            ஒரு போர்க் கடவுளே சமாதானத்தின் அடையாளமாகவும் இருப்பது தமிழ் இந்து மதத்தில் மட்டுமே. பெருமைக்குரிய விஷயம்தான். புரிஞ்சிக்கலாம்.... 


#முருகன் #போர்க்கடவுள் #சமாதானம் #mars                        
                    

Monday, June 23, 2014

மிருகங்களின் பெண்பால் பெயர்கள்

      மிருகங்களில் பெண்பால் மிருகங்களுக்குத் தனிப் பெயர்கள் இருக்கின்றன. அதையும் கவனிச்சு சரியாச் சொல்லிட்டோம்னா நாம நல்லாவே பேசுறோம்னு அர்த்தம். அதையும் பார்த்துடுவோமா...



              மிருகம்                         ஆண்பால் பெயர்             பெண்பால் பெயர்        

  1.     மாடு                              காளை, எருது                    பசு 
  2.    ஆடு                                கிடா                                      மறி         
  3.    பூனை                            கடுவன்                                பெட்டை 
  4.    கோழி                            சேவல்                                  பேடு/பெட்டை  
  5.    மயில்                            ஆண்மயில்                        பேடு/அளகு (Peahen)
  6.    குரங்கு                          தாட்டான்                             மந்தி 
  7.    அன்னம்                       அகன்றில்/அன்றில்         மகன்றில்/மன்றில் 
  8.    மான்                              கலை                                     பிணை 
  9.    யானை                         களிறு                                    பிளிறு   




      படங்கள் அனைத்தும் நெட் உபயம். சிரமப்பட்டு எடுத்தவர்களுக்கு, தொகுத்தவளின் நன்றிகள்.
#பெண்பால் #பெயர்கள்

மிருகங்களின் இளமைப் பெயர்கள்

      எல்லா மிருகங்களுக்கும் அதன் பெயரின் இறுதியில் 'குட்டி' சேர்த்து விட்டால் போச்சா? ஒவ்வொரு மிருகம், பறவைக்கும் அதன் இளமைப் பெயர் இருக்கிறது. அதெல்லாம் என்னன்னு பாக்கலாமா?

                     சிங்கம்     ---     குருளை (Lion cub)
                     பசு              ---     கன்று 
                     புலி            ---     பிறழ், போத்து (Tiger cub)

                                                             சிங்கக் குருளை                                                      

                                                       புலிப் போத்து 


                    அணில்     ---     பிள்ளை 
                    தவளை     ---    பிரட்டை (Tadpole)

                                               தவளையும் பிரட்டைகளும் 

                    கிளி            ---    பிள்ளை 
                    மயில்        ---    குஞ்சு 
                    ஆடு            ---    குட்டி 
                    எருமை     ---    கன்று  
                    கீரி               ---    பிள்ளை
                    தென்னை ---    பிள்ளை
                   (தென்னைமரம்  ---  தென்னம்பிள்ளை)

       இனிமேல் சரியாச் சொல்லுவோமா?    .........          :-)!
                     

Tuesday, June 10, 2014

புத்திக் காரகன் புதன் - கிரேக்க, இந்து மதங்களின் பார்வையில்...

             
        உலகின் தொன்மையான நாகரிகங்களில் தமிழ் நாகரிகமும் கிரேக்க நாகரிகமும் முக்கிய இடத்தைப் பெறுபவை. இரண்டும் சமகால நாகரிகங்கள். மேலும் இந்த இரண்டு நாகரிகங்களிலும் பின் தொடரப்பட்ட வழிபாட்டு முறைகளும் ஒன்றுகொன்று தொடர்பு உடையவையாக இருக்கின்றன. மத நம்பிக்கைகளும் இந்த இரண்டு நாகரிகங்களிலும் ஒன்று போலவே இருந்திருக்கின்றன. இந்து மதத்தால் விஞ்ஞானப் பூர்வமாக அறியப் பட்ட உண்மைகளே கிரேக்க மதமான பாகனிசத்திலும் (Paganism) அறியப்பட்டுள்ளது.
            தமிழ் ஜோதிட சாஸ்திரத்தில் புத்திக் காரகனான புதனுக்கு ஆங்கிலத்தில் 'மெர்குரி' (Mercury) என்று பெயர். 'பாதரசம்' என்று தமிழில் குறிக்கப்படும் திரவ உலோகம் தான் இந்த மெர்குரி. பாதரசம் ஒரு உலோகம். ஆனால் அது திரவ நிலையிலேயே இருக்கும்.  திரவப் பொருளில் திடப் பொருளின் குணங்கள் அடங்கியது தான் மெர்குரி. அது திடப் பொருளுடன் சேரும் போது திடப் பொருளின் தன்மைகளையும், திரவப் பொருளுடன் சேரும் போது திரவத்தின் தன்மையையும் பெறுகிறது.

                                                               
                                                                                             புதன் கிரகம் 


பாதரசம்  (Mercury)

        தமிழ் ஜோதிட  சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புதனை 'அலி கிரகம்' என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, ஆணின் குணங்களும் பெண்ணின் குணங்களும் இணைந்த ஒரு கிரகம். ஆண் கிரகங்களுடன் (உ-ம்: செவ்வாய்) சேரும் போது ஆண் கிரகமாகவும் பெண் கிரகங்களுடன் (உ-ம்: சுக்கிரன்) சேரும் போது பெண் கிரகமாகவும் தன்மைகளைப் பெறுகிறது. பாவக் கிரகங்களுடன் சேரும் போது பாபத் தன்மையையும் சுபக் கிரகங்களுடன் சேரும் போது சுபத் தன்மையையும் பெற்று விடுகிறது.


புத பகவான் 


கிரேக்கத்தில் புத பகவான் (Lord Mercury in Greek Mythology )

       புதன் கிரகத்தின் இந்த குணாதிசயம் இரண்டு நாகரிகங்களிலும் வெவ்வேறு விதங்களில் உணர்த்தப் பட்டிருந்தாலும்  பொதுவான தன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன. (Though the interpretations are different, the properties are the same.) பார்வைகள் தான் வேறு; விஷயம் ஒன்று...


Monday, May 12, 2014

தங்கம் குடித்த தமிழர்கள்

         தலைப்பைப் பார்த்தவுடன் மலைத்து விட்டீர்களா? 'தங்கம் திடப் பொருள்; அதைக் குடிக்க முடியுமா?' என்ற ஆராய்ச்சியில் ரொம்பவும் இறங்கி விட வேண்டாம். காவிரி நதி நீர் குடித்து வாழ்ந்த தமிழர்கள் தான் 'தங்கம் குடித்த தமிழர்கள்'.
         தமிழகத்தில் நதிகளின் பெயர்கள் பெண்பால் பெயர்கள் என்பது பலருக்கும் தெரிந்த தகவல் தான். அவை காரணப் பெயர்களும் கூட. காவிரிக்கு 'பொன்னி' என்றும், பொருணை நதிக்கு 'தாமிரபரணி' என்ற பெயரும் வந்ததற்கு, தமிழர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையே காரணம். அறிவியல் அர்த்தத்துடனேயே சொற்கள் அமைக்கப் பட்டுப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. காவிரி நதி நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத் தாது சற்று அதிக அளவில் இருந்திருக்கிறது. (இன்றும் இருக்கலாம்.) காவிரி ஆற்று மணலில் தங்கத் துகள்கள் இருந்திருக்கின்றன. திருஞான சம்பந்தர் தனது தேவாரப் பாடல் ஒன்றில் 'பொன்கரை பொறு பழங்காவிரி' என்று காவிரி நதிக்கரை மணலில் பொன் துகள்கள் இருந்ததை ஊர்ஜிதப் படுத்துகிறார்.
    அதே போல் பொருணை ஆற்று நீரில் தாமிரத் தாது அதிக அளவில் இருந்திருக்கிறது. அதனால் பொருணை ஆற்றுக்கு 'தாமிரபரணி' என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

                                           
                                                               மின்னும் மணல்

          படத்தில் இருப்பது பொன்னி நதிக்கரை மணலோ தாமிரபரணி நதி மணலோ இல்லை. மூணாறு நதி மணல். காவிரி மணலையும் தாமிரபரணி மணலையும் நிறைய இழந்து விட்டோம். இப்போது மண்ணெல்லாம் மின்னுவது மலையாளக் கரையோரம் தான். (கேரளாவில் ஆற்று மணல் அள்ள அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.)


                   இது தற்போது இருக்கும் காவிரி ஆறு. எங்கள் ஊர் காவிரி ஆற்றின் கரையோரம் இருப்பதால் தற்போது தங்கம் குடிக்கும் தமிழர்களில் நானும் ஒருத்தி.
              
டெயில் பீஸ்:

     வைகை நதியின் பெயருக்கு புராணக் கதையொன்று உண்டு. சிவபெருமானின் மீனாட்சி திருக்கல்யாணத்தில் மதுரையில் ஏற்பட்ட தண்ணீர்ப் பஞ்சம் தீர ஆகாய கங்கையே சிவன் கை வைத்த இடத்தில் தோன்றியதாகவும், அதனாலேயே "வை-கை" என்ற பெயர் வந்ததாம்.

Posted by: Kiruthika Vishnu.
#காவேரி #பொன்னி #தங்கம் #பெயர்க்காரணம் 

Saturday, April 19, 2014

சாம்பூனதம்

        Shampoo பெயரோ விளம்பரமோ இல்லை. ஒரு வகையான தூய்மையான தங்கத்தின் (A purest form of gold) பெயர்.... சாம்பூனதம்.
        எப்படி இந்த பெயர் வந்தது?

        சம்பு என்றால் நாவல் பழம். நதம் என்றால் தங்கம்.

        நாவல் பழத்திற்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?
 
        மலைகளில் உள்ள நாவல் மரங்களில் உள்ள பழங்கள் உதிர்ந்து விழுந்து, பள்ளத்தாக்குகளில் நிறைந்து விடும். வருடங்கள் செல்லச் செல்ல அழுந்தப்பட்டுப் படிமங்களாகி, மண்ணுக்குள் மறைந்து, உறைந்து, தங்கம் என்கிற கனிமமாக மாறுகிறது. இது ஒரு விதமான தூய்மையான தங்கம்.






   

                   காரணப் பெயர் குறிப்பதில் தமிழ்...... தமிழ் தான்.                     
     

Posted by: Kiruthika Vishnu.
#தங்கம் #நாவல் பழம் 

Monday, April 14, 2014

சந்திர நாட்காட்டி (Lunar Calendar)

        காலண்டர் - தினமும் விழிக்கும் முகங்களில் ஒன்று. டெய்லி ஷீட், மன்த்த்லி ஷீட் காலண்டர்கள் என்று நாம் உபயோகிப்பது அனைத்தும் கிரிகோரியன் நாட்காட்டிகள். ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒரு வருடத்தைக் காட்டும் கிரிகோரியன் நாட்காட்டிகள் பிரிட்டிஷ் காலத்திற்குப் பிறகு புழக்கத்திற்கு வந்தவை. அதற்கு முன்?..........

         நிலாதான் நாட்காட்டி. தெய்வத்திருமகள் 'நிலா' இல்லை. :-) வானில் சுற்றும் 'சந்திரன்' எனப்படும் நிலா.... மாதத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் வைத்து, நினைவில் வைத்துக் கொண்டு, வானில் இருக்கும் நிலவின் அளவைப்  பார்த்து, இது மாதத்தின் எத்தனையாவது நாள் என்று கணிக்கும் முறையே சந்திர நாட்காட்டி (The Lunar Calendar).




         என்ன பெயர்கள்? எப்படிக் கணிக்க?
       
         திதிகள் என்று சொல்லப்படுபவை எல்லாம் பொருளற்றவை அல்ல. ஒவ்வொரு திதியும் ஒரு தேதி. ஒரு அமாவாசையில் ஆரம்பித்து அடுத்த அமாவாசையில் முடிவது ஒரு மாதம். ( மாதத்திற்குத் 'திங்கள்' என்று பெயர். திங்கள் என்றால் நிலா.) பேராண்மை திரைப்படத்தில் ஜெயம் ரவி கணிப்பது போல... :-)

  1. அமாவாசை 
  2. பிரதமை 
  3. துவிதியை 
  4. திரிதியை 
  5. சதுர்த்தி 
  6. பஞ்சமி 
  7. சஷ்டி 
  8. சப்தமி 
  9. அஷ்டமி 
  10. நவமி 
  11. தசமி 
  12. ஏகாதசி 
  13. துவிதியை 
  14. திரிதியை 
  15. சதுர்த்தசி

  1. பௌர்ணமி 
  2. பிரதமை 
  3. துவிதியை 
  4. திரிதியை 
  5. சதுர்த்தி 
  6. பஞ்சமி 
  7. சஷ்டி 
  8. சப்தமி 
  9. அஷ்டமி 
  10. நவமி
  11. தசமி 
  12. ஏகாதசி 
  13. துவிதியை 
  14. திரிதியை 
  15. சதுர்த்தசி 
                                 

            இதில் முதல் 15 நாட்கள் வளர்பிறை. அடுத்த 15 நாட்கள் தேய்பிறை. ஆக, முப்பது நாட்கள். நிலவு வளரும், தேயும் அளவுகளைப் பார்த்து நாள் கணித்துப் பழகியிருந்தனர்.
            (எ.டு: தேய்பிறை துவிதியை என்பது மாதத்தின் 18-வது நாள்.)

நாட்காட்டி என்ற எதுவும் தனியாகத் தேவை இல்லை. 'சூரியனே கடிகாரம்' போல 'நிலவே நாட்காட்டி'.


Posted by: Kiruthika Vishnu.


        

Sunday, April 13, 2014

தமிழ்ப் புத்தாண்டு

    தமிழ்ப் புத்தாண்டு ஜய வருடத்தின் ராஜா சந்திரன். ராசி மண்டலத்தின் பன்னிரண்டு வீடுகளிலும் சந்திரனுக்குப் பகை வீடுகளே இல்லை. அனைவரின் மனதுக்கும் உகந்த அரசாங்கம் அமையப் போகும் வருடமாக இது இருக்கும். பௌர்ணமியில் தொடங்கும் புத்தாண்டில் பூரண வளர்ச்சியை எதிபார்க்கலாம். 




ஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் ஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.'ஜய' என்றால் வெற்றி. இந்த ஆண்டு அனைவருக்கும்,செய்யும் நற்காரியங்கள் அனைத்துக்கும் வெற்றி ஆண்டாக அமையட்டும்.